'இஸ்ரேல் மற்றும் அரேபிய' நபிகளை மட்டும் ஏன் குர்‍ஆன் குறிப்பிடுகின்றது? இரகசியம் என்ன?

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் தன் இறைத்தூதர்களை அனுப்பியதாக அல்லாஹ் குர்‍ஆனில் சுட்டிக்காட்டுகின்றான். ஒரு நாட்டு மக்களின் தீய வாழ்க்கையினால், அந்த நாட்டை அழிப்பதற்கு முன்பாக, தன் இறைத்தூதரை அனுப்பி அவர்களை முதலாவது எச்சரிப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.

குர்‍ஆன் வசனங்களை படிக்கவும்:  

10:47. ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.

16:36. மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்.

17:15. எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை.

 

ஆனால், சிலருடைய வரலாற்றை மட்டுமே முஹம்மதுவிற்கு குர்‍ஆனில் வெளிப்படுத்தியதாக அல்லாஹ் கீழ்கண்ட  வசனத்தில் கூறுகின்றான்:

40:78. திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை; ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள். 

முஹம்மதுவிற்கு சில நபிகளின் வரலாறுகளை மட்டுமே அல்லாஹ் வெளிப்படுத்தியதில் தவறேதுமில்லை. ஆனால், அந்த சிலர் ஏன் ஒரு நாட்டுக்கு சம்மந்தப்பட்டு மட்டுமே இருக்கிறார்கள் என்பது தான் கேள்வி.

ஏன் இஸ்ரேல் நபிகள் பற்றி மட்டுமே குர்‍ஆன் சொல்கிறது?

குர்‍ஆனில் 25 நபிகள் (தீர்க்கதரிசிகள்) பற்றி சொல்லப்பட்டுள்ளது. இதில் முஹம்மதுவும் ஒருவராவார். ஒவ்வொரு நாட்டுக்கும்  அவரவர் மொழிகளில் பேசும் நபியை அல்லாஹ் அனுப்பியிருந்தால், உலகம் உண்டானது முதல் (ஆதாம் முதல்), பல ஆயிர நபிகளை அனுப்பியிருக்கவேண்டும். 

சில முஸ்லிம் அறிஞர்களின் கூற்றுப்படி அல்லாஹ் 1,24,000 நபிகளை அனுப்பியிருக்கின்றானாம். இவர்களில் கடைசியாக வந்தவர் முஹம்மது ஆவார்.

நாம் கேட்கும் கேள்வி மிகவும் சுலபமானது, ஆனால் சுவையானது. ஏன் அல்லாஹ் இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்பிய நபிகள் பற்றி மட்டுமே குர்‍ஆனில் சொல்கின்றான்?

கீழ்கண்ட படத்தை பார்க்கவும்.

மேலே உள்ள படத்தில்  இஸ்ரேல் நாடு உள்ள இடத்திலேயும், அரேபிய தீபகர்பம் உள்ள இடத்திலேயும் இரண்டு வட்டமிட்டுள்ளேன். இஸ்ரேல் நாட்டுக்காக அனுப்பிய அனேக நபிகளை குர்‍ஆனில் அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான், அதே போல அரேபியாவிற்கு அனுப்பிய நபிகள் இருவரை மட்டுமே குறிப்பிடுகின்றான். சாலிஹ் என்பவர் முஹம்மதுவிற்கு முன்பு தமூத்(ஸமூத்) மக்களுக்காக அனுப்பப்பட்டவர் என்று முஸ்லிம்கள் கருதுகிறார்கள். இது பெட்ரா என்ற பகுதியை குறிக்கும். ஜோர்டான் நிலப்பரப்பில் உள்ளவர்களுக்காக சாலிஹ் அனுப்பப்பட்டார் என்று சொல்லப்படுகின்றது.

முஹம்மது வருவதற்கு முன்பாகவே (கி.பி. 610) அதாவது ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பாகவே பல நாடுகள் இருந்துள்ளன‌. 

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இருந்த நாடுகளின் பட்டியல்: https://en.wikipedia.org/wiki/List_of_political_entities_in_the_7th_century

கி.மு. ஏழாம் நூற்றாண்டில் இருந்த நாடுகளின் பட்டியல்: https://en.wikipedia.org/wiki/List_of_political_entities_in_the_7th_century_BC

ஏழாம்(கி.மு & கி.பி) நூற்றாண்டில் இருந்த நாடுகளின் பட்டியலை நான் இங்கு  கொடுத்துள்ளேன். கவனிக்கவும்:  கி.பி. 7ம் நூற்றாண்டிலேயே 100க்கும் அதிகமான நாடுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலே கொடுக்கப்பட்ட விக்கிபீடியா  தொடுப்பில் சென்று ஒவ்வொரு நூற்றாண்டிலும் இருந்த நாடுகள் பற்றியும் இன்னும் அதிகமாக அறிந்துக்கொள்ளலாம்.

 முஸ்லிம்களுக்கு சில கேள்விகள்:

1) குர்‍ஆனில் வெறும் 25 நபிமார்களின் பெயர்களை மட்டும் அல்லாஹ் சொல்வதற்கான காரணம் என்ன?

2) இது  அல்லாஹ்வின் விருப்பம் தான், ஆனால், சில சிக்கல்கள் இந்த விவரங்களில் தெரிகின்றது, அதற்காகத் தான் இந்த கேள்வி?

3) ஆசிய நாடுகளான இஸ்ரேல் அரேபியா விடுத்து ஐரோப்பா, ஆசியா, ஆஃப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள நாடுகளுக்கு  அனுப்பிய ஒரு நபியின் பெயரையாவது குர்‍ஆன் குறிப்பிடாதது ஏன்?

4) முக்கியமாக சைனா, இந்திய நிலப்பரப்பு, மற்றும் ஆஃப்ரிக்கா கண்டங்களில் மக்கள் கி.மு. காலத்திலிருந்தே வாழ்ந்து வந்தனர். இந்த கண்டங்களில் இருந்த  நூற்றுக்கணக்கான நாடுகளுக்கும், இனங்களுக்கும், மொழிகளுக்கும் அனுப்பிய நபிகளில், ஒரு நபியின் பெயரையும் குறிப்பிடாமல் விட்டது, சந்தேகத்தை கிளப்புகிறதல்லவா?

5) இந்தியாவிலிருந்தும், சைனாவிலிருந்தும் ஒரு சிலரின் பெயர்களை குர்‍ஆனில் குறிப்பிட்டு இருந்திருந்தால், இன்று அதனை சரிப்பார்த்து, உண்மையாகவே அப்படிப்பட்ட நபியை அல்லாஹ் அனுப்பியது  உண்மை என்று ஆராய்ச்சி செய்து அறியும் மக்களுக்கு அல்லாஹ்வின் மீது  நம்பிக்கை வரும்.

6) இஸ்ரேல் நபிகள் பற்றி மட்டும் ஏன் அல்லாஹ் இவ்வளவு அக்கரைக்கொண்டான்? கிட்டத்தட்ட 23 நபிகள் இஸ்ரேல் நாடு அல்லது மத்திய கிழக்கு நாடுகளின் நபிகள் பற்றி மட்டுமே குர்‍ஆன் சொல்கிறது என்று எண்ணும் போது, ஏதோ ஒரு  பிரச்சனை குர்‍ஆன் ஆக்கியோனுக்கு உள்ளது என்பதை அறியமுடிகின்றது.

7) ஆதாம் முதற்கொண்டு, ஆபிரகாம் வரைக்கும் இஸ்ரேல் நாட்டு நபிகள் அல்ல என்று முஸ்லிம்கள் சொல்லக்கூடும். உண்மை தான், ஆனால், பைபிளில் சொல்லப்பட்ட இவர்கள் பற்றி மட்டுமே அல்லாஹ் ஏன் சொல்லவேண்டும்? பைபிளுக்கு வெளியே உள்ள நபிகள் பற்றி சொல்லாதது ஏன்? என்பது தான் மிகப்பெரிய சவால்?

 காரணம் இது தான்: முஹம்மதுவிற்கு எது தெரியுமோ, அது தான் அல்லாஹ்விற்கும் தெரியும்!

8) கல்விக் கற்றவர்கள் இதைப் பற்றி சிறிது சிந்தித்துப் பாருங்கள். முஹம்மது மத்திய கிழக்கு நாடுகளில் வியாபாரத்திற்காக பயணம் செய்தார். அதாவது அரேபியாவின் மேற்பகுதி நாடுகளாகிய இஸ்ரேல், பெட்ரா, ஜோர்டான், சிரியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் பயணம் செய்தார். இந்த பகுதியில் தான் கற்ற விவரங்கள் (நபிகள்) பற்றி மட்டுமே குர்‍ஆன் சொல்கிறது! இதன் அர்த்தமென்ன? முஹம்மதுவிற்கு தெரிந்த நபிகள் பற்றி மட்டுமே குர்‍ஆன் குறிப்பிடுகின்றது. குர்‍ஆன் ஆக்கியோன் அல்லாஹ்வாக இருந்திருந்தால், மற்ற நாடுகளுக்கு தான் அனுப்பிய நபிகள் பற்றி சில விவரங்களையாவது கொடுத்திருந்திருப்பான் அல்லவா?

9) ஒருவேளை முஹம்மது இந்திய நாடுகளில் வியாபாரத்திற்காக பல மாதங்கள் தங்கி இருந்திருந்தால், இங்கு வாய்வழியாக சொல்லப்படும் கதைகளை, இலக்கியங்களை (இராமாயணம், மஹாபாரதம், தமிழ் இலக்கியங்கள், திருக்குறள் . . .) கற்றுக்கொண்டு சென்று இருந்திருப்பார். அதன் பிறகு குர்‍ஆனில் வசனங்களை இறக்கும் போது, நிச்சயம் ஒரு  சில  இந்திய ஆன்மீகவாதிகளின் பெயர்கள் குர்‍ஆனில் இறக்குமதியாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதில் முதலிடத்தை திருக்குறளும், திருவள்ளுவரும் பெற்று இருப்பார்.

10) உண்மையாகவே, அல்லாஹ் தான் குர்‍ஆனின் ஆக்கியோன் என்றால், ஏன் முஹம்மது பயணிக்காத நாடுகளிலிருந்து ஒரு உதாரணத்தையும், நபியின் பெயரையும் குறிப்பிடவில்லை என்பது கேள்வி. அல்லாஹ்விற்கு அப்படி என்ன யூத கிறிஸ்தவ நபிகள் மீது அவ்வளவு அன்பு! அவர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட காரணம் என்ன? 23 எங்கே 1,24,000 நபிகள் எங்கே?  யூத கிறிஸ்தவ நபிகள் இந்த 1,24,000 நபிகளில் சிறந்தவர்களோ! அவர்களிடத்தில்  அல்லாஹ் செய்த அற்புதங்கள், வேறு எங்கும் செய்யவில்லையோ!

11) முஹம்மது சைனாவிற்குச் சென்று வியாபாரம் செய்திருந்தால், அங்கு பல மாதங்கள் தங்கியிருந்தால், பல  சைன நபிகள் பற்றி இன்று குர்‍ஆனில் நாம் கண்டு இருந்திருப்போம்.

உண்மை என்ன?

12) ஒரு பாமர அரேபிய மனிதன், அக்கால படித்த உலக நாடுகளிடம் இருந்த நூல்களை சுயமாக படிக்காத மனிதன், எகிப்தின் பிரமிடுகள், மற்றும் அவர்கள் தங்கள் அரசர்களின் உடல்களை அடக்கம் செய்யும் முறைகள் (மம்மிகள்) பற்றிய பொதுவான அறிவை காதுவழியாக கேட்ட ஒரு சராசரி மனிதனுக்கு என்ன தெரியுமோ, அது தான் குர்‍ஆனில் பதியப்பட்டுள்ளது. அக்காலத்தில் விஞ்ஞானம் பற்றி, தன் நாட்டைச் சுற்றியுள்ள கதைகள் பற்றி, மற்ற மார்க்க கதைகள் பற்றி ஒரு சராசரி வியாபாரிக்கு எவ்வளவு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்குமோ, அதே அளவு தான் முஹம்மதுவிற்கும் தெரிந்திருக்கிறது என்பது தான் உண்மை. 

13) குர்‍ஆன் ஆக்கியோனுக்கு பைபிளின் நிகழ்ச்சிகள் காதுவழியாக கேட்ட அனுபவம் உண்டு, அக்கால பொது அறிவு கொஞ்சம் தெரியும், ஆகையால் தனக்கு தெரிந்த 25 நபிகள் பற்றி மட்டுமே குர்‍ஆனில் குறிப்பிட்டுள்ளான் என்பது தான் உண்மை.

14) உலக நாடுகள் ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு காலத்துக்கும் நபிகளை அனுப்பினேன் என்று குர்‍ஆன் சொன்னாலும், பைபிளை ஒட்டியே, இஸ்ரேல் நாட்டை ஒட்டியே குர்‍ஆன் நகர்கிறது. குர்‍ஆனின் ஆணிவேர் பைபிளின் நிகழ்ச்சிகள் மீது தான் பெரும்பான்மையாக சார்ந்துள்ளது.  நபிகள் பற்றி அல்லாஹ்விற்கு எவ்வளவு தெரியும்? என்று கேள்வி கேட்டால், முஹம்மதுவிற்கு எவ்வளவு தெரியுமோ, அவ்வளவு தான் அல்லாஹ்விற்கும் தெரியும் என்பது தான் பதில்.

ஒரு சோதனை:

இன்று ஒரு கிராமத்தில் உள்ள 40 வயது நிரம்பிய ஒரு பாமர படிக்காத‌ மனிதனை எடுத்துக்கொள்ளுங்கள். அவனுக்கு தொலைக்காட்சியின் மூலமாக, சினிமா மூலமாக சில பொது அறிவு கிடைத்திருக்கும்.   அந்த மனிதன் பயணம் செய்த சில  பட்டணங்கள், ஊர்கள் பற்றிய அறிவு அவனுக்கு  இருக்கும். நிச்சயமாக அவனுக்கு சைனா பற்றியோ, அமேரிக்கா பற்றியோ, இதர ஐரோப்பிய நாடுகள் பற்றியோ, விஞ்ஞானம் பற்றியோ, பொருளாதாரம் பற்றிய ஆழ்ந்த ஆய்வு ஞானம் அவனுக்கு இருக்காது. இப்படிப்பட்டவர் ஒரு புத்தகத்தை பெரிய ஞானிபோல பாவணை காட்டிக்கொண்டு எழுதினால் எப்படி இருக்கும்? அதில் அவருக்கு தெரிந்த விவரங்கள் மட்டுமே இருக்குமில்லையா! இது போலத்தான், முஹம்மதுவிற்கு தெரிந்த விவரங்கள் மட்டுமே குர்‍ஆனில் இருக்கும்.

முஹம்மதுவிற்கு தெரிந்த 24 நபிகள் பற்றி மட்டுமே குர்‍ஆனில் இருக்கும்! இதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. 'அற்ப அறிவு அல்லற் கிடம்' என்ற பழமொழியை நீங்கள் கேட்டு இருக்கின்றீர்களா? முஹம்மது படிப்பறிவில்லாதவர், அவர் எப்படி விஞ்ஞானத்தை பேசமுடியும்? அவர் எப்படி எதிர்காலத்தில் வருவதை முன்னறிவிக்கமுடியும்? என்று முஸ்லிம்கள் சொல்வார்கள். கடந்த காலத்தை சரியாக சொல்லாத அல்லாஹ், எப்படி முஹம்மதுவிற்கு எதிர்காலத்தைப் பற்றி அறிவிக்கமுடியும்? கு‍ர்‍ஆனில் விஞ்ஞானம் உண்டு என்று சொல்வதெல்லாம், வெறும் வெத்துப்பேச்சு. குர்‍ஆனின் விஞ்ஞானம் பற்றி கேள்விகள் இருந்தால், என் மெயிலுக்கு கேள்விகளை அனுப்பவும்.


இதர படமும் பாடமும் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்