2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும்
தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!
பின்னணி: உமரின் தம்பி சௌதி அரேபியாவில் வேலை செய்கிறார். அங்கு அவர் இஸ்லாமை தழுவினார். உமருக்கும் அவரது தம்பிக்கும் இடையே நடைப்பெற்ற முந்தைய உரையாடல்களையும், கடிதங்களையும் இங்கு சொடுக்கி படிக்கலாம். இந்த ஆண்டும் ரமளான் மாதத்தில் இவ்விருவருக்கும் இடையே நடைப்பெறவிருக்கும் சூடான கடித உரையாடல்களை தொடர் கட்டுரைகளாக காண்போம்.
இவ்வாண்டு, உமரின் தம்பி, இஸ்லாமிய தீவிரவாத இயக்கமாகிய ஐஎஸ்ஐஎஸ் (ISIS or IS) பற்றி தொலைபேசியில் உமரிடம் பெருமையாக பேசினார். இதனால், தன் தம்பி ஐஎஸ் என்கின்ற தீவிரவாத இயக்கத்தோடு சேர்ந்துவிடுவானோ என்று உமர் பயப்படுகிறார். எனவே, இஸ்லாமின் இறையியல் பற்றியும், ஐஎஸ் போன்ற இஸ்லாமிய தீவிரவாதிகளின் பின்னணி மற்றும் நோக்கம் பற்றியும் தம் தம்பிக்கு எடுத்துரைக்க உமர் விரும்பி தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதுகிறார்.
கடிதம் 1 - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன் . . .
அன்புள்ள தம்பிக்கு,
உன் அண்ணன் எழுதிக்கொள்வது. உனக்கு இறைவனின் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நீ ஒவ்வொரு நாளும் ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் இருக்கும் படி உனக்காக பிரார்த்தனை செய்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் ரமளான் மாதத்தில் நாம் இருவரும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கடிதங்களை எழுதிக்கொள்கிறோம். இந்த ஆண்டும், ஒரு முக்கியமான தலைப்பில் உன்னோடு கடித உரையாடல்களை புரியலாம் என்று விரும்புகிறேன்.
இஸ்லாம் அமைதி என்றால், ஏன் முஸ்லிமாகிய நீ வன்முறையை ஆதரிக்கிறாய்?
ஒவ்வொரு வாரமும் நாம் தொலைபேசியில் பேசிக்கொள்ளும் போது பல முக்கியமான விஷயங்களை பேசிக்கொள்கிறோம். ஆனால், கடந்த வாரம் நாம் பேசிக்கொள்ளும் போது, உன் வார்த்தைகளில் மறைமுகமாக தெரித்த சில விஷயங்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. முதலாவதாக, நீ ஒரு கிறிஸ்தவ பின்னணியை உடையவன், இரண்டாவதாக, அமைதி மார்க்கம் என்று நீ கருதுகின்ற இஸ்லாமை தழுவியவன், இப்படிப்பட்ட நீ ஐஎஸ் (IS) என்ற தீவிரவாத இயக்கத்தை ஆதரித்து பேசினாய். உன் வார்த்தைகளில் காணப்பட்ட அழுத்தம் என்னை கலங்க வைத்துவிட்டது. என் அருமை தம்பி, ஒரு தவறான வழியை பின்பற்றி இந்த இஸ்லாமிய தீவிரவாத கூட்டத்தோடு சேர்ந்துவிடுவானோ என்று பயப்படுகிறேன்.
எனவே, நாம் இருவரும் மனந்திறந்து இஸ்லாமின் அதி முக்கியமான விஷயங்களை பேசலாம் என்று விரும்புகிறேன். நீ என் மெயில்களை கண்டதும் படிக்காமல் டெலிட் செய்துவிடாதே! இப்படி நீ செய்தால், இஸ்லாம் உன்னை ஒரு பலவீனமானவனாக ஆக்கிவிட்டது என்றும், சத்தியத்துக்கு முன்பாக நிற்க திராணியில்லாதவனாக உன்னை ஆக்கிவிட்டது என்றும் அர்த்தமாகிவிடும். இஸ்லாமுக்கு சத்தியத்தை எதிர்த்து நின்று ஜெயிக்கும் திராணியில்லை என்றும் அர்த்தமாகிவிடும். எனவே, இக்கடிதங்களை தொடர்ந்து படித்துக்கொண்டும், எனக்கும் பதில் எழுதிக்கொண்டும், உன் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டும் இரு.
பேசினால் போதாதா? எழுதவும் வேண்டுமா?
ஒவ்வொரு வாரமும் நாம் தொலை பேசியில் பேசுகின்றோமே, அந்த நேரத்தில் இவைகளைப் பற்றி பேசலாமே, அதை விட்டுவிட்டு ஏன் மெயில் எழுதுகிறீர்கள்? என்று நீ கேட்டால், இதற்கும் ஒரு காரணமுண்டு. நாம் தொலை பேசியில் பேசும் வார்த்தைகள் சில நிமிடங்கள் நம் மனதில் நிற்கும். ஒவ்வொரு நாளும் அவைகளின் சாராம்சமும் தாக்கமும் நம் ஞாபகத்தை விட்டு சிறிது சிறிதாக மறைந்துவிடும். சில நாட்களுக்கு பிறகு நாம் பேசிய அனைத்தையும் மறந்துவிடுகிறோம். ஆனால், அதே விவரங்களை நாம் எழுத்துக்களாக வடித்தால், தேவைப்படும் போது அவைகளை படித்துப் பார்த்துக்கொள்ளமுடியும். நாம் மறந்துவிட்ட விவரங்களை மறுபடியும் ஞாபகத்தில் கொண்டு வரமுடியும். நாம் விவாதித்த பைபிள் குர்-ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் மறுபடியும் சென்று படித்துப் பார்க்க முடியும். கடிதங்கள் மூலம் உரையாடுவது அதிக நன்மையாக இருக்கும் என்பதால், மெயில் மூலமாக நான் முக்கியமான விஷயங்களை எழுத விரும்புகிறேன். இப்படி கடிதங்கள் எழுதுவதால் நாம் தொலை பேசியில் இனி பேசிக்கொள்ளமாட்டோம் என்று அர்த்தமல்ல, தொலைபேசியிலும் நாம் மேலதிக விவரங்களை பேசலாம், கடிதங்களில் அவைகளின் சாராம்சத்தை எழுதலாம்.
தம்பி, இதோ இந்த கடிதத்தை முடிப்பதற்கு முன்பாக, உன்னைப் பற்றி நானும் நம் பெற்றோர்களும் கொண்டுள்ள நம்பிக்கையை சொல்லிவிடுகிறேன்.
1. நீ சிறு வயதிலிருந்து ஒரு கிறிஸ்தவ முறைப்படி வளர்க்கப்பட்டாய்.
2. உன் படிப்பு முடிந்ததும், சௌதி அரேபியாவில் (ஆன்மீக) ஆபத்து இருக்கின்றது என்று அறிந்து இருந்தாலும், உன் படிப்புக்கு ஏற்ற வேலை மற்றும் கைநிறைய சம்பளம் உனக்கு கிடைக்கவேண்டும் என்பதற்காக, நானும் அப்பாவும் உன்னை வேலைக்கு அங்கு அனுப்பினோம். ஆபத்து என்று நான் குறிப்பிடுவது “நீ இஸ்லாமியர்களின் மாய வலையில் விழுந்து, விசுவாசத்தை விட்டுவிடுவாயோ என்ற பயத்தைத் தான்”. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு, அதாவது உன்னுடைய சுறுசுறுப்பும், எந்த ஒரு புதிய விஷயத்தையும் ஒரு முறை ருசி பார்த்துவிடவேண்டும் என்ற உன்னுடைய அந்த ஆவலையையும் சேர்த்துத் தான். ஆனால், எங்கள் கணிப்பு தவறிவிட்டது, நாங்கள் பயப்பட்டதே நடந்தது, நீ இயேசுவை மறுபடியும் சிலுவையில் அறைந்துவிட்டாய், மாய இஸ்லாமில் உன்னை மறைத்துக்கொண்டாய்.
3. உன்னுடைய இந்த முடிவு எங்களை கலங்க வைத்தாலும், உன்னுடைய முடிவை நாங்கள் ஏற்றுக்கொண்டோம், உன்னை கனப்படுத்துவது போலவே, உன் முடிவையும் கனப்படுத்தினோம். உன்னை அடித்து பயமுறுத்த நீ குழந்தையல்ல, அதே போல நீ இயேசுவை புறக்கணித்தாய் என்பதற்காக உனக்கு மரண தண்டனை விதிக்க, கிறிஸ்தவம் இஸ்லாமைப் போல வன்முறையை தன் ஆயுதமாக கருதும் மார்க்கமும் அல்ல. நீ சுகபத்திரத்தோடு சமாதானமாய் வாழ்ந்தால் அதுவே எங்களுக்கு போதும். ஒரு நாள் உண்மையை அறிந்துக்கொண்டு நீ மறுபடியும் அப்பா வீட்டுக்கு திரும்புவாய் என்ற நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் உண்டு. இந்த நம்பிக்கையிலேயே நாங்கள் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். (இங்கு அப்பா வீட்டிற்கு என்று நான் குறிப்பிட்டது, நம் பிதாவாகிய தேவனிடத்திற்கு திருப்புவதைப் பற்றியதாகும்).
4. பல வாலிபர்கள் தங்கள் பெற்றோர்களையும், குடும்பங்களையும் விட்டுவிட்டு ஐஎஸ் தீவிரவாத இயத்தோடு சேர்ந்து போர் புரிய சிரியா சென்றுக்கொண்டு இருக்கிறார்கள், போர் செய்து அனேகர் மரித்துக்கொண்டும் இருக்கிறார்கள் என்பதை செய்திகளில் வாசிக்கிறோம். அப்படிப்பட்ட முட்டாள்தனமான முடிவை நீ எடுத்துவிடுவாயோ என்று நான் பயப்படுகிறேன். இன்னும் சௌதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாட்டிலிருந்து தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் என்பதால், இந்த பயம் இன்னும் என்னில் அதிகரித்துவிட்டது.
5. நீ எங்களுக்குத் தேவை. உனக்கு ஒரு நல்ல குடும்பம் அமையவேண்டும், நீ மனைவி பிள்ளைகளோடு ஒரு ஆசீர்வாதமான வாழ்வை வாழவேண்டும் என்பது தான் எங்கள் ஆசையெல்லாம். எங்கள் ஜெபங்கள் உன்னோடு இருப்பதால், ஒரு நாள் இஸ்லாமை விட்டு வருவாய் என்பது எங்கள் அசைக்கமுடியாத நம்பிக்கை. அதுவரை நீ இப்படிப்பட்ட இஸ்லாமிய தீவிரவாத முன்முறையை விட்டு தூரமாக இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். என் தம்பி அல்ப ஆயுசில் ஒரு தீய செயலுக்காக தன் உயிரை கொடுக்க நான் விரும்புவதில்லை.
6. நீ இஸ்லாமை பின் பற்ற முடிவு செய்துவிட்டாய், அது உன் சொந்த விருப்பம். ஆனால், இதன் காரணமாக வன்முறையில் ஈடுபடுவதோ, ஜிஹாத் போன்ற காட்டுமிராண்டித் தனமான போர்களில் ஈடுபட்டு அப்பாவி மக்களை கொல்வதோ சரியானது அல்ல என்பதை மனதில் வைக்கவும்.
மக்கள் இஸ்லாமை தழுவவில்லையென்றால் அவர்களோடு நான் சண்டையிடுவேன் என்று சொல்லுகின்ற ஒரு வன்முறை தீர்க்கதரிசியை நீ பின் பற்றிக்கொண்டு இருக்கின்றாய். இஸ்லாம் வன்முறை என்ற அஸ்திபாரத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கும் வரை கீழ்கண்ட புகாரி ஹதீஸை அனேக முறை படித்துப் பார்.
'மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்.. இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புகாரி எண் 25 Volume :1 Book :2
இந்த கடிதத்தை படித்ததும், உன் எண்ணங்களை என்னோடு பகிர்ந்துக் கொள்.
இப்படிக்கு
உன் அண்ணன்
உமர்
தேதி: 16 ஜூன் 2015