குர்-ஆன் முரண்பாடு - யோனா வெட்டவெளியில் எறியப்பட்டாரா? (அ) எறியப்படவில்லையா?

ஸூரா 37:145 கீழ்கண்டவிதமாக கூறுகிறது:

37:145 அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம். (பிஜே மொழியாக்கம்)

இவ்வசனத்தை வேறு சில தமிழாக்கங்களில் காண்போம்.

37:145. ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றி) வெட்ட வெளியில் போட்டோம். டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

37:145. (அவர் துதி செய்திருப்பதன் காரணமாக) வெட்ட வெளியான பூமியில் (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறியச் செய்தோம். அச்சமயம் அவரோ மிக களைப்புடனும் சோர்வுடனும் இருந்தார். அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்

37:145 இறுதியில் அவர் பெரிதும் நோயுற்றிருந்த நிலையில் ஒரு பாலைவெளியில் அவரை நாம் எறிந்தோம். இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்

மேற்கண்ட குர்-ஆன் வசனத்திற்கு முரண்பட்டு, இன்னொரு இடத்தில் அதே குர்-ஆன் வேறுவிதமாக சொல்கிறது. 

குர்-ஆன் 68:49

68:49. அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார். (பிஜே மொழியாக்கம்)

இந்த வசனத்தை இதர தமிழாக்கங்களிலும் காண்போம்.

68:49. அவருடைய இறைவனிடமிருந்து அருள் கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார். டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

68:49. அவருடைய இறைவனின் அருள் அவரை அடையா திருப்பின், வெட்ட வெளியான (அந்த) மைதானத்தில் எறியப்பட்டு நிந்திக்கப்பட்டவராகவே இருப்பார். அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்

68:49. அவருடைய அதிபதியின் கருணை அவருக்குக் கிடைத் திராவிட்டால், அவர் இழிவுக்கு ஆளாகி பொட்டல்வெளியில் எறியப்பட்டிருப்பார்! இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்

மேற்கண்ட தமிழாக்கங்களின் நடை வேறுபட்டு இருந்தாலும், குர்-ஆன் 37:145ம் வசனம் “யோனா  வெட்ட வெளியில் எறியப்பட்டார்” என்றுச் சொல்கிறது என்பதை அனைவரும்  ஒருமித்து தமிழாக்கம் செய்துள்ளார்கள். இது ஒருபுறமிருக்க, குர்-ஆனின் 68:49ம் வசனம் ’யோனா வெட்டவெளியில் எறியப்படவில்லை’ என்றுச் சொல்கிறது என்பதையும் இவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.  அதாவது, அல்லாஹ்வின் அருட்கொடை/கருணை அவருக்கு கிடைக்காமல் இருந்திருந்தால், அவர் வெட்டவெளியில் எறியப்பட்டு இருந்திருப்பார் என்று ஸூரா 68:49 சொல்கிறது. 

எந்த வசனம் சொல்வது உண்மை? ஸூரா 37:145ன் படி யோவா வெட்டவெளியில் எறியப்பட்டாரா? அல்லது ஸூரா 68:49ன் படி யோனா வெட்டவெளியில் எறியப்படவில்லையா?  

இந்த முரண்பாட்டிற்கு முஸ்லிம்களின் பதில்:

இந்த முரண்பாட்டிற்கு இரண்டு தளங்களில் சில பதில்களை படித்தேன், அவைகளை இங்கு தருகிறேன்:

  1. www.understanding-islam.com/was-jonah-pbuh-cast-on-the-desert-shore-or-not/
  2. www.call-to-monotheism.com/was_jonah_cast_on_the_desert_shore___by_ansar_al__adl

நம் தமிழ் முஸ்லிம் அறிஞர்கள் மேற்கண்ட கட்டுரைகளை படிக்கவேண்டும், மேலும் தங்கள் தமிழாக்கங்களில் செய்துள்ள பிழைகளை திருத்திக்கொள்ளவேண்டும். அதாவது ஸூரா 68:49 பற்றிய ஆய்வை மறுபரிசீலனை செய்யவேண்டும், மேலும் புதிய மொழியாக்கத்தை கொடுக்கவேண்டும்.

குர்-ஆன் ஒரு விரிவான விளக்கமான வேதம் என்று கீழ்கண்ட வசனம் சொல்கிறது. ஆனால், இக்கட்டுரையில் நாம் கண்டதுபோல, யோவாவைப் பற்றிய விஷயத்தில் முரண்பட்ட கருத்தை குர்-ஆன் சொல்கிறது.

குர்-ஆன் 6:114. (நபியே! கூறும்:) “அல்லாஹ் அல்லாதவனையா (தீர்ப்பளிக்கும்) நீதிபதியாக நான் தேடுவேன்? அவன்தான் உங்களுக்கு (விரிவான) விளக்கமான வேதத்தை இறக்கியுள்ளான்; எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள் நிச்சயமாக இது (குர்ஆன்) உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையாக இறக்கப்பட்டுள்ளது என்பதை நன்கு அறிவார்கள். எனவே நீர் சந்தேகம் கொள்பவர்களில் ஒருவராகி விடாதீர். (முஹம்மது ஜான் தமிழாக்கம்).

குர்-ஆனின் இந்த குழப்பமான முரண்பட்ட விவரங்கள் நம் தமிழாக்க அறிஞர்களுக்கும் புரியவில்லை. எனவே அவர்கள் தமிழாக்கம் செய்யும் போது, ஒரு இடத்தில் யோனா வெட்டவெளியில் எறியப்பட்டார் என்றும், இன்னொரு இடத்தில் எறியப்படவில்லையென்றும் மொழியாக்கம் செய்துள்ளார்கள். அவர்கள் செய்து சரியானது தான், ஆனால் முரண்பாடு குர்-ஆனில் அல்லவா உள்ளது!

கீழ்கண்ட வசனத்தை கவனியுங்கள். ஒவ்வொரு விஷயத்தையும் விவரித்து காட்டுவதாக குர்-ஆன் பெருமை அடித்துக்கொள்கிறது, ஆனால், யோனாவின் விஷயத்தில் முரண்பட்ட விவரத்தைச் சொல்லியுள்ளது, அது மட்டுமல்ல, முந்தைய வேதங்களில் தெளிவாக்கப்பட்டுவிட்ட விவரங்களை சொல்லும் போதும் குர்-ஆன் தடுமாறுகிறது. 

குர்-ஆன் 12:111. (நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது. (முஹம்மது ஜான் தமிழாக்கம்).

அடுத்த வசனத்தைப் பாருங்கள் - குர்-ஆன் 16:89

குர்-ஆன் 16:89. இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர்சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். 

ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்கும்படியாக குர்-ஆன் இறக்கப்பட்டது என்று ஸூரா 16:89 சொல்கிறது, ஆனால், நம் தமிழ் முஸ்லிம் அறிஞர்கள் அனைவருக்கும் தெளிவை குர்-ஆன் கொடுக்கவில்லை, எனவே, அவர்கள் முரண்பட்ட விவரங்களை அப்படியே தமிழாக்கம் செய்துள்ளார்கள். இதன் மூலம் அறிவது என்ன? குர்-ஆன் தன்னைப்பற்றிச் சொல்வது ஒன்று, ஆனால் நிதர்சனம் மற்றொன்று.  குர்-ஆன் என்பது பாமர மனிதனுக்கும் புரியும் வகையில் உள்ளது என்று பிஜே அவர்கள்  சொல்வார்கள். ஆனால் உண்மையென்னவென்றால், இவருக்கே புரியாமல் அல்லவா இவர் மொழியாக்கம் செய்துள்ளார். குழப்பம் தரும்படி குர்-ஆனின் வசனங்கள் உள்ளன என்பதற்கு இந்த யோனா பற்றிய வசனங்கள் தான் சாட்சி. அரபியை கறைத்துகுடித்தவர்களுக்கே தடுமாற்றம் என்றால், அரபியின் வாசனையையும் முகராதவர்களின் கதி என்னவென்று சொல்லத்தேவையில்லை.

தேதி: 18, டிசம்பர் 2016


குர்-ஆன் தமிழாக்க குளறுபடி கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்