கேள்வி 1: நான் இயேசுவை ஏற்றுக்கொண்டேன், அடுத்தது என்ன?

பதில்: ஒரு முஸ்லிம் குடும்ப பின்னணியிலிருந்து நீங்கள் இயேசுவை பின்பற்ற எடுத்த முடிவுக்காக மிக்க மகிழ்ச்சி. இயேசுவின் இனிய நாமத்தில் உங்களை அன்புடன், தேவனுடைய குடும்பத்தில் வரவேற்கிறேன். உங்களின் மூலமாக பரலோகத்தில் மிகப்பெரிய சந்தோஷம் உண்டாகியிருக்கும்.

ஒரு முஸ்லிம், இயேசுவை பின்பற்ற முடிவு செய்வாரென்றால், அவர் கீழ்கண்ட காரியங்களைச் செய்ய ஆரம்பிக்கவேண்டும்.

1) புதிய ஏற்பாட்டை படிக்கவேண்டும்:

முதலாவதாக, நீங்கள் ஒரு புதிய ஏற்பாட்டை வாங்கி, அதனை படிக்க தொடங்குங்கள். புதிய ஏற்பாட்டை எங்கே வாங்குவது? இந்த புத்தகத்தை வீட்டுக்கு கொண்டுவரமுடியாதே! என்று நீங்கள் சொல்லலாம். இந்த இண்டெர்னெட் காலத்தில் பிரிண்ட் புத்தகமே நமக்குத் தேவை என்று நாம் சொல்லக்கூடாது. இணையத்தில் நமக்கு தமிழ் புதிய ஏற்பாடு உள்ளது, அதனை நாம் படித்துக்கொள்ளலாம்:

ஸ்மார்ட் மொபைள் போன் உங்களிடம் இருந்தால், பைபிள் ஆப்’ஐ(Bible App) இன்ஸ்டால் செய்துக்கொண்டும் படிக்கலாம். மேலும், உங்களுக்கு கிறிஸ்தவ நண்பர்கள் இருந்தால் அவர்களிடமும் ஒரு புதிய ஏற்பாட்டை கேட்டு வாங்கலாம், அல்லது ஒரு சர்சுக்குச் சென்று அங்கு கேட்டாலும் அவர்கள் கொடுப்பார்கள். மனமிருந்தால் மார்க்கமுண்டு.

புதிய ஏற்பாட்டை படிப்பதினால், இயேசுவின் வாழ்க்கையையும், அவரது போதனைகளையும் அறிந்துக்கொள்ளமுடியும். புதிதாக பிறக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் புதிய ஏற்பாட்டை படிப்பது. எனவே, ஒவ்வொரு நாளும் சில அத்தியாயங்களை தாய் மொழியில் அல்லது உங்களுக்கு புரியும் மொழியில் படித்து புரிந்துக் கொள்ளவேண்டும்.

2) ஜெபம் (துவா, பிரார்த்தனை) செய்யவேண்டும்:

’வேதவாசிப்பு’ உணவு போன்றது, ’ஜெபம்’ சுவாசம் போன்றது. ஒவ்வொரு நாளும் தேவனோடு சில நிமிடங்கள் நீங்கள் பேசவேண்டும். இஸ்லாமில் நமாஜ் இருப்பது போல, நிற்பது, குனிவது போன்ற செயல்களைச் செய்யவேண்டியதில்லை. இருக்கும் இடத்திலேயே உட்கார்ந்துக்கொண்டு, தனி அறையாக இருந்தால் நமக்கு கேட்கும் அளவிற்கு சத்தமாக ஜெபிக்கலாம், சில நேரங்களில் மனதுக்குள்ளும் ஜெபிக்கலாம். இன்னொரு முக்கியமான விவரம், நம் தாய் மொழியில் நாம் ஜெபிக்கவேண்டும், அல்லது நமக்கு புரியும் மொழியில் ஜெபிக்கவேண்டும். நாம் என்ன ஜெபிக்கிறோம் என்பது முதலாவது நமக்கு புரியவேண்டும். பைபிளின் வசனங்களை நமக்கு புரியாத எபிரேய அல்லது கிரேக்க மொழியில் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கக்கூடாது, இதனால் ஒரு கிராம் நன்மையும் கிடைக்காது.

நான்கு வயது மகன் அல்லது மகள் தன் தந்தையிடம் பேசுவது போல, மனம் திறந்து பேசலாம், தன் தாயின் மடியில் உட்கார்ந்துக்கொண்டு, அன்போடு பேசுவது போல, தேவனிடம் நீங்கள் ஜெபம் செய்யலாம். இந்த நேரத்தில் தான் ஜெபிக்கவேண்டும், இப்படித் தான் ஜெபிக்கவேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் இல்லை. மகனுக்கு தன் அப்பாவிடம் பேச, கட்டுப்பாடு வேண்டுமா என்ன? எனவே, தினமும் உங்களுக்கு கிடைக்கும் சில மணித்துளிகளை இதற்காக ஒதுக்கி ஜெபிக்கலாம்.

உதாரணத்திற்கு: 

முதலாவது, தேவன் அந்த நாளில் செய்த/செய்யப்போகும் நன்மைக்காக நன்றி செலுத்தவேண்டும். இரண்டாவதாக, உங்கள் குடும்பத்தினரின் ஆசீர்வாதத்திற்காக, ஆரோக்கியத்திற்காக அவரிடம் வேண்டிக் கொள்ளவேண்டும். மூன்றாவதாக, உங்கள் அன்றைய தேவைகளுக்காக வேண்டிக்கொள்ளவேண்டும். நான்காவதாக, மற்றவர்களுக்காக (நண்பர்கள், உறவினர்களுக்காக) ஜெபிக்கவேண்டும். ஐந்தாவதாக, நம் குறைகளைச் சொல்லி, நாம் ஏதாவது தவறு செய்திருந்தால், அதற்காக மன்னிப்புக் கேட்டு, இனி அப்படிப்பட்ட செயலை செய்யாமல் இருக்க பலத்தை கொடுக்கும்படி வேண்டிக்கொள்ளவேண்டும். கடைசியாக, தேவனுக்கு நன்றிச் சொல்லி, இயேசுவின் பெயரில் வேண்டிக்கொள்ளவேண்டும். இதே வரிசையில் தான் ஜெபிக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை, ஒரு தந்தையோடு பேசுவதுபோல, சுதந்திரமாக பயமில்லாமல் பேசலாம், இதைத் தான் ஜெபம் என்றுச் சொல்கிறோம்.

ஒருமுறை இயேசுவின் சீடர்கள் ’எப்படி ஜெபிக்கவேண்டும்?’ என்று இயேசுவிடம் கேட்டபோது, அவர் கற்றுக்கொடுத்த சிறிய ஜெபம் கீழே கொடுக்கிறேன், இதே மாதிரி நாம் ஜெபிக்கலாம்.

நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். 

அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப் போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப் போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: 

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. 

உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. 

எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். 

எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். 

எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே. (மத்தேயு 6:6-13)

3) ஒரு திருச்சபையில் சேர்ந்து தேவனை ஆராதித்தல்

ஒரு புதிய விசுவாசிக்கு, வேதவாசிப்பும், ஜெபமும் முக்கியமாக இருப்பது போல, ஒரு சர்சுக்குச் சென்று, மற்ற விசுவாசிகளோடு சேர்ந்து தேவனை ஆராதிப்பதும் முக்கியமானது.

உங்களால், திருச்சபைக்குச் சென்று ஆராதிக்க முடியுமா இல்லையா? என்பது எனக்குத் தெரியவில்லை. முடிந்தால், சர்சுக்குச் சென்று ஆராதிப்பது நல்லது. உங்கள் வீட்டில் இதற்கு அனுமதி இல்லையென்றால், பிரச்சனை இல்லை. எதுவரைக்கும் இப்படி வாய்ப்பு கிடைக்கவில்லையோ அதுவரை சர்ச்சுக்குச் செல்லாமல் இருப்பது நல்லது. 

சர்சுக்கு போவது பற்றிய மேலதிக விவரங்களுக்கு, அடுத்தடுத்த கேள்விகளில் விவரமாக காணலாம்.

4) ஒரு கிறிஸ்தவ நண்பன்/தோழி

ஒரு கிறிஸ்தவ நண்பனை/தோழியை கொண்டு இருப்பது மிகவும் நல்லது. அந்த நண்பனோடு சேர்ந்து, ஜெபிக்கவோ, சபைக்குச் செல்லவோ முடியும். எனவே, ஒரு கிறிஸ்தவ நண்பனை/தோழியை தேடிக்கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட ஒரு நண்பு கிடைக்கும்படி நீங்கள் ஜெபம் செய்யுங்கள், இயேசு நிச்சயமாக ஒரு ஐக்கியத்தை உங்களுக்கு கொடுப்பார்.

இது தொடக்கம் தான். இன்னும் அனேக விவரங்களை நீங்கள் அறிந்துக்கொள்ளவேண்டும். அவைகளைப் பற்றி அறிய இதர கேள்விகளின் பதில்களை படியுங்கள்.

அறிமுகத்தை படிக்க சொடுக்கவும்பொருளடக்கம்

கேள்வி 2:

நான் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, குர்ஆனை படித்துக் கொண்டு இருந்தேன். இப்போது நான் பைபிளை படிப்பதினால், குர்ஆனை படிக்கக்கூடாதா? படித்தால் குற்றமா?