நபியாக நியமிப்பதற்கு முன்பு முஹம்மது வழிக்கேட்டில் இருந்தாரா?

கி.பி 610 க்கு முன்னர், அதாவது ஜீப்ரீல் தூதன் முஹம்மது அவர்களை முதன் முதலாக குகையில் சந்திப்பதற்கு முன்பு அவரது வாழ்க்கையைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

முஹம்மதுவின் வாழ்க்கையின் முதல் 40 ஆண்டுகளில், அவர் இஸ்லாம் அல்லது முஸ்லிம் என்ற வார்த்தையைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. அவர் குர்‍ஆனைப் பற்றியும் கேள்விப்படவில்லை. ஒருபோதும் ஷஹதா (இஸ்லாமிய விசுவாச அறிக்கையை) ஓதவில்லை அல்லது ஒரு நாளைக்கு 5 முறை இன்று முஸ்லிம்கள் செய்வது போன்று, சிரம் பணிந்து தொழுகையை நடத்தவில்லை. முஹம்மது தனது வாழ்க்கையின் முதல் 40 ஆண்டுகள், ஒரு முஸ்லீமாகவோ அல்லது அல்லாஹ்வின் தீர்க்கதரிசியாகவோ அல்லது அல்லாஹ்வின் மதத்தைப் பின்பற்றுபவராகவோ வாழவில்லை.

அவர் நபியாக மாறுவதற்கு முன்பு, குகைகளில் சுற்றித் திரிந்தார்.
அவருக்குத் தெரிந்த ஒரே “அல்லாஹ்” தலைமுறை தலைமுறைகளாக காபாவில் அமைதியாக அமர்ந்திருந்த 360 சிலைகளில் ஒரு சிலை தான் அல்லாஹ். முஹம்மதுவின் குடும்பத்தினர் காபாவை பராமரித்துக்கொண்டு இருந்தனர் (கோயில் தர்மகர்த்தா என்றுச் சொல்வோமே, அது போல அவரின் குடும்ப வம்சத்தார் காபாவின் தர்மகர்த்தாவாக இருந்தனர்).

அல்லாஹ்விற்கு மூன்று மகள்கள் இருந்தனர், அவர்களின் பெயர்களாவன: அல்-லத், அல்-மனாத் மற்றும் உஸ்ஸா ஆகும். அல்லாஹ்வின் இந்த மகள்களின் சிலைகளோடு சேர்த்து, அல்லாஹ்வின் சிலையையும், மற்றுமுள்ள சிலைகளையும் சுத்தம் செய்வது அவர்களின் வேலையாக இருந்தது. இந்த வேலையை ஒரு கால அட்டவணை போட்டுக்கொண்டு ஒவ்வொரு வம்சத்தினராக செய்துக்கொண்டு இருந்தனர். அங்கிருந்த பழங்குடியினரான மக்காவினரும், இதர சுற்றுமுள்ள இன மக்களும்  வழிபடுவதற்கும் பிரார்தனைகள் செய்வதற்கும் வரிசைக்கிரமமாக அந்த 360 சிலைகள் காபாவில் வைக்கப்பட்டு இருந்தன.

முஹம்மது கேள்விப்பட்ட முந்தைய தீர்க்கதரிசிகள் அனைவரும், அவருடைய வர்த்தகத்தின் போது, அவரோடு தொடர்பு கொண்ட யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் தான். அந்த தீர்க்கதரிசிகள் யாரும் முஹம்மது வணங்கிக்கொண்டு இருந்த அந்த காபாவின் 360 சிலைகளைப் பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் முஹம்மது மற்றும் அவரது தந்தை அப்துல்லாஹ்  அவர்களும் (பொருள்: அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அவரது முழு கோத்திரமும் அந்த பழங்குடியினரின் 360 சிலைகளையே வணங்கிக்கொண்டு இருந்தனர்.

முஹம்மது தமது முதல் நாற்பது ஆண்டுகள், காபாவில் இருந்த  360 சிலைகளை வணங்கிக் கொண்டு இருந்த ஒரு “பல தெய்வவழிப்பாட்டு பழங்குடியினராகவே” வாழ்ந்தார்.  முஸ்லிம்கள் இதை மறுக்க விரும்புகிறார்கள். ஆனால், அந்த நாற்பது ஆண்டுகளில்  (ஜஹலியாவின் காலத்தில்), அந்த பல தெய்வ சிலைகளை வணங்கும் பழக்கங்களை, தொழுகை முறைகளை முஹம்மது எதிர்த்ததாக, நிராகரித்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. 

என்றைக்கு அவர் தன்னை முதல் முஸ்லிமாக அறிமுகம் செய்தாரோ, ஒரு புதிய மதத்தை  அறிமுகம் செய்தாரோ, அந்த மதத்திற்காக கட்டளைகளையும், ஐந்து தூண்களையும், இதர தொழுகைகளையும், குர்‍ஆன் ஓதுதலையும் அறிமுகம் செய்தாரோ, அன்று தான் அவர் அந்த பல தெய்வ வழிப்பாட்டு சிலைகளை எதிர்க்க நிராகரிக்க ஆரம்பித்தார்.

முஹம்மது ஒரு பேகன் (பல தெய்வ வழிப்பாட்டுக்காரர்) என்பதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், ஆனால், குர்‍ஆன் முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு எதிராகவே சாட்சி சொல்கிறதே! முஹம்மது நபியாக மாறுவதற்கு முன்பு  பல சிலைகளை வணங்கிக்கொண்டு இருந்தார் என்றுச் சொல்கிறதே! முஹம்மதுவிற்கு தாம் வெளிப்பாடு கொடுப்பதற்கு முன்பு, முஹம்மது அறியாதவராக இருந்தார் என்று அல்லாஹ் ஒப்புக்கொள்கின்றான்.

குர்‍ஆன் 42:52 ஐ ஐந்து தமிழாக்கங்களில் படிப்போம்:

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:

42:52. (நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பாதையில் வழி காண்பிக்கின்றீர்.

 அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

42:52. (நபியே!) இவ்வாறே உங்களுக்கு நம்முடைய கட்டளையை வஹீயின் மூலமாக அறிவிக்கின்றோம். (இதற்கு முன்னர்) நீங்கள் வேதம் இன்னதென்றும், நம்பிக்கை இன்னதென்றும் அறிந்தவராக இருக்கவில்லை. ஆயினும், (இந்த வேதத்தை உங்களுக்கு நாம் வஹீ மூலம் அறிவித்து) அதனை ஒளியாகவும் ஆக்கி, நம் அடியார்களில் நாம் விரும்பியவர்களுக்கு அதனைக் கொண்டு நேரான வழியைக் காண்பிக்கின்றோம். (நபியே!) நிச்சயமாக நீங்கள் (அதன் மூலம் மக்களுக்கு) நேரான வழியைக் காண்பிக்கின்றீர்கள்.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

42:52. மேலும், இவ்வாறே (நபியே!) நம் கட்டளையின் வாயிலாக ஒரு ரூஹை* உமக்கு வஹி அறிவித்தோம். வேதம் என்பதென்ன, ஈமான் (இறைநம்பிக்கை) என்றால் என்ன என்பதெல்லாம் உமக்குத் தெரியாதிருந்தது. ஆனால் அந்த ரூஹை நாம் ஒளியாக ஆக்கினோம். நம் அடியார்களில் நாம் நாடுவோருக்கு அதன்மூலம் வழிகாட்டுகிறோம். திண்ணமாக, நீர் நேரியவழியைக் காட்டிக் கொண்டிருக்கின்றீர்.

மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்

42:52. (நபியே!) இவ்வாறே உமக்கு நம்முடைய கட்டளையின் (குர் ஆனாகிய) உயிரானதை வஹீ மூலமாக அறிவிக்கின்றோம், (இதற்கு முன்னர்) நீர் வேதம் என்றால் என்ன, இன்னும் விசுவாசம் என்றால் என்ன என்பதை அறிந்தவராக இருக்கவில்லை, ஆயினும், (இவ்வேதத்தை உமக்கு வஹீ மூலம் அறிவித்து) இதனைப் பிரகாசமாகவும் ஆக்கி, நம் அடியார்களில் நாடியவர்களுக்கு இதனைக்கொண்டு நாம் நேர் வழி செலுத்துகின்றோம், (நபியே!) நிச்சயமாக நீர், (மனிதர்களுக்கு) நேரான வழியின்பால் வழிகாட்டுவீர்.

பீஜே தமிழாக்கம்:

42:52. இவ்வாறே நமது கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்றால் என்ன என்பதை (முஹம்மதே!) நீர் அறிந்தவராக இருக்கவில்லை[344] மாறாக நமது அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர்வழி காட்டும் ஒளியாக இதை ஆக்கினோம். நீர் நேரான பாதைக்கு அழைக்கிறீர்.  

குறிப்பு: அடிக்குறிப்பில் கொடுக்கப்பட்ட பீஜே அவர்களின் விளக்கத்தை படிக்கவும்.

40 ஆண்டுகளாக, முஹம்மது ஒரு போதும் ஸலாத் (அல்லாஹ்வை தொழுதுக்கொள்வது) செய்யவில்லை. மாறாக, பேய்கள் வசிப்பதாகச் சொல்லப்படும் இருண்ட குகைகளில் தியானங்களை செய்துக்கொண்டு இருந்தார்.

இங்கு ஒரு கேள்வி எழுகின்றது, அதாவது இஸ்லாம் பற்றியும், குர்‍ஆன் பற்றியும் எதையும் அறியாதவராக இருந்த காலத்தில், அந்த குகையில் அவர் எதனை தியானம் செய்துக்கொண்டு இருந்தார்? தன்னைப் பற்றி எதையுமே, தன் வேதம் பற்றி ஒன்றுமே அறியாத காலத்தில் முஹம்மது செய்த அந்த தியானச் செயலை அல்லாஹ் அங்கீகரித்திருப்பானா?

மூலம்: http://www.faithbrowser.com/the-life-of-muhammad-before-the-revelations/

அடிக்குறிப்பு:

[1] குர்‍ஆன் 42:52க்கு பீஜே கொடுத்த விளக்கம்

344. பிறக்கும் போதே நபியா?

இவ்வசனங்களில் (28:86, 42:52) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், ஈமான் எனும் இறை நம்பிக்கை குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறப்படுகிறது.

இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து சொல்லப்பட்டு வரும் கட்டுக்கதைக்கு மரண அடியாக அமைந்துள்ளது.

முதல் மனிதரான ஆதம் நபியை இறைவன் படைப்பதற்கு முன்பே முஹம்மது (ஸல்) அவர்களை நபியாக அல்லாஹ் நியமித்து விட்டான் என்பதும், இதனால் அவர்கள் பிறக்கும் போதே நபியாகப் பிறந்தார்கள் என்பதும் தான் அந்தக் கட்டுக் கதை.

பிறக்கும் போதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராகப் பிறந்தார்கள் என்றால் நம்பிக்கை என்றால் என்னவென்று உமக்குத் தெரியாது; வேதம் என்றால் என்னவென்று உமக்குத் தெரியாது என்று 42:52 வசனத்தில் அல்லாஹ் கூறுவானா?

இறைத்தூதராக நியமிக்கப்பட்டவருக்கு ஈமான் இல்லாமல் இருக்குமா? வேதம் என்றால் என்ன என்று தெரியாமல் இறைத்தூதராக இருக்க முடியுமா? என்று சிந்தித்துப் பார்த்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாவது வயதில் இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன் நபியாக இருக்கவுமில்லை, தாம் இறைத்தூதராக நியமிக்கப்படுவோம் என்று அறிந்திருக்கவுமில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

இறைச்செய்தி வந்த பிறகு தமக்கு வந்தது இறைச்செய்தி தான் என்பதை ஆரம்பத்தில் அவர்களால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. வரகா என்பவர் உறுதி செய்த பிறகுதான் அவர்களுக்கே அது உறுதியானது. (பார்க்க: புகாரி 4, 3392, 4954, 6982)

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறக்கும் போதே நபியாகப் பிறந்தார்கள் என்பதும், உலகம் படைக்கப்படுவதற்கு முன்பே அவர்கள் நபியாக நியமிக்கப்பட்டு விட்டார்கள் என்பதும் கட்டுக்கதை என்பதை இவ்வசனங்களில் இருந்து அறியலாம்.


ஃபெயித் ப்ரவுசர் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்