2016 பக்ரீத் – 5: மனிதனால் கூடாதது தான், ஆனால் அல்லாஹ்வால் எல்லாம் கூடும்

[கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமை தழுவிய உமரின் தம்பி, சௌதி அரேபியாவிலிருந்து தொலைபேசியில் உமரோடு பேசுகின்றான். 2016ம் ஆண்டின் பக்ரீத் தொடர் கட்டுரைகள் பற்றிய சில முக்கியமான கேள்விகளை கேட்கிறான். பக்ரீத் முந்தைய கட்டுரைகளை படிக்கவும்: பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4]

மனிதனால் கூடாதது தான், ஆனால் அல்லாஹ்வால் எல்லாம் கூடும்

தம்பி: ஹலோ… அண்ணா, அஸ்ஸலாமு அலைக்கும்

உமர்: ஹலோ தம்பி, வஅலைக்கும் ஸலாம்.  என்ன ஆச்சரியம்! பக்ரீத் பண்டிகைக்கு முன்பாக தம்பியிடமிருந்து  போன் வந்திருக்கு!

தம்பி: உங்களுடைய பக்ரீத் தொடர்களை படித்தேன், உங்களுக்கு ஒரு விவரத்தை தெளிவுப்படுத்த விரும்பி போன் செய்தேன். நீங்க, ஃபிரீயாக இருக்கீங்களா?

உமர்: ரொம்ப நல்ல விஷயம் தான். நான் உனக்காக என் நேரத்தை ஃபிரீயாக்கிக் கொள்கிறேன். நீ பேசு.

தம்பி: ஒருவரின் சுமைகள் இன்னொருவர் சுமப்பது பற்றிய விஷயத்தில் குர்-ஆனில் முரண்பாடு உள்ளது என்று நீங்கள் குற்றம் சாட்டியுள்ளீர்கள். இது உண்மையல்ல என்பதை உங்களுக்கு சொல்லவே நான் போன் செய்தேன். 

உமர்: குர்-ஆன் ஒரு இடத்தில்  ஒருவரின் சுமையை இன்னொருவர் சுமக்கமுடியாது என்றுச் சொல்கிறது (குர்-ஆன் 6:164, 17:15, 35:18, 39:7 & 53:38),

வேறு இடத்தில், ஒருவர் இன்னொருவரின் பாவசுமையை கியாமத் நாளில் சுமப்பார் என்றுச் சொல்கிறது (குர்-ஆன் 16:24,25, 29:13).  இது முரண்பாடு இல்லையா?  

தம்பி: இங்கு தான் நீங்கள், குழம்பியிருக்கிறீர்கள்.

உமர்: அப்படியா! கொஞ்சம் தெளிவாக விளக்கு பார்க்கலாம்.

தம்பி: நீங்க குர-ஆன் வசனங்கள் 16:24, 25 மற்றும் 29:12,13ஐ தவறாக புரிந்துக்கொண்டீர்கள். கவனிக்கவேண்டிய முக்கியமானவைகளை நீங்கள் கவனிக்கவில்லை. இப்போது குர்-ஆன் 29:12,13 வசனங்களை படிப்போம். 

29:12. நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம்: “நீங்கள் எங்கள் வழியை (மார்க்கத்தைப்) பின்பற்றுங்கள்; உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்கள் தம் குற்றங்களிலிருந்தும் எதையும் சுமப்பவர்களாக (தாங்குபவர்களாக) இல்லையே! எனவே (உங்கள் குற்றங்களை சுமப்பதற்காகச் சொல்லும்) அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே!

29:13. ஆனால் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய (பளுவான பாவச்) சுமைகளையும், தம் (பளுவான பாவச்) சுமைகளுடன் (அவர்கள் வழிகெடுத்தோரின் பளுவான பாவச்) சுமைகளையும் சுமப்பார்கள்; கியாம நாளன்று அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவார்கள். (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)

உமர்: இவ்வசனங்களில் நான் எவைகளை பார்க்க தவறினேன்?

தம்பி: 12ம் வசனத்தை நன்றாக கவனியுங்கள். ஒரு (பாவியான) மனிதன் இன்னொரு மனிதனிடம் சென்று, உன்னுடைய சுமைகளை நான் சுமந்துக்கொள்கிறேன் என்றுச் சொல்வது பொய்யாகும் என்றுச் சொல்கிறது. அதாவது, மனிதர்களுக்கு மற்றவர்களின் பாவசுமைகளை எடுத்து தங்கள் மீது வைத்துக்கொண்டு அவைகளை சுமக்கும் அதிகாரம் இல்லை என்பதை இந்த வசனம் சொல்கிறது. ஆனால், இதே வேலையை இறைவன் விரும்பினால் செய்யமுடியும், இதனை 13ம் வசனத்தில் பார்க்கமுடியும். இந்த 13ம் வசனத்தில், அல்லாஹ் ஒருவரின் சுமையை எடுத்து இன்னொருவரின் மீது சுமத்துகின்றான். இது அவனுக்கு இருக்கும் அதிகாரமாகும், அவன் நினைத்தால் எதையும் செய்யமுடியும்.  இது இதர வசனங்களுக்கு முரண்படவில்லை. 

சுருக்கமாகச் சொல்வதானால், நீங்கள் குறிப்பிட்ட குர்-ஆன் வசனங்கள் (குர்-ஆன் 6:164, 17:15, 35:18, 39:7 & 53:38) சொல்வது என்னவென்றால், ஒருவரின் சுமையை இன்னொரு மனிதன் விரும்பினாலும் சுமக்கமுடியாது, ஏனென்றால், மற்றவர்களின் சுமையை சுமக்கும் உரிமையோ, அதிகாரமோ மனிதர்களுக்கு இல்லை என்பதாகும். 

ஆனால், நீங்கள் முரண்பாடு என்றுச் சொல்லும் வசனங்கள் (குர்-ஆன் 16:24,25, 29:13) குறிப்பிடுவது என்னவென்றால், மனிதர்களால் மற்றவரக்ளின் சுமைகளை சுமப்பது முடியாதது தான், ஆனால், அல்லாஹ் விரும்பினால் ஒருவரின் சுமையை இன்னொருவர் சுமக்க வைக்கமுடியும் என்பதாகும்.

ஆக, மனிதர்களால் முடியாதது அல்லாஹ்வால் முடியும். இது முரண்பாடு அல்ல.  இப்போது புரிந்ததா உங்களுக்கு?

உமர்: தம்பி, நீ அருமையாக சிந்தித்திருக்கின்றாய்! வெரிகுட்.

தம்பி: என்ன வெரிகுட்? குர்-ஆனில் முரண்பாடு இல்லை என்று ஒப்புக்கொள்கின்றீர்களா இல்லையா? இன்னும் ஏதாவது விளக்கம் தேவையா?

உமர்: பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக அல்லவா இருக்கிறது உன் பதில்!

தம்பி: எனக்கு புரியவில்லையே! 

உமர்: உன்னுடைய விளக்கத்தின் படி, மற்றவர்களின் சுமையை சுமந்துக்கொள்ள மனிதனுக்கு உரிமை இல்லை, ஆனால் ஒருவரின் சுமையை எடுத்து அடுத்தவன் மீது வைக்க அல்லாஹ்விற்கு உரிமையுண்டு. இது தான் சுருக்கம்.

தம்பி: ஆமாம், சரியாக கேட்ச் செய்தீங்க.

உமர்: குர்-ஆனின் கோட்பாடு இது தான் என்றுச் சொன்னால், ஏன் நீங்கள் கிறிஸ்தவ கோட்பாட்டை எதிர்க்கிறீர்கள்? 

தம்பி: இஸ்லாமின் கோட்பாடு வேறு, கிறிஸ்தவம் சொல்வது வேறு.

இஸ்லாமிய கோட்பாடு – ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் சுமைகளை சுமக்கும்படிச் செய்ய அல்லாஹ்வால் முடியும்.

கிறிஸ்தவ கோட்பாடு – ஒரு மனிதனால் (இயேசு) மற்றொரு மனிதனின் சுமைகளை சுமக்க அதிகாரம் உண்டு என்று நம்புவது. 

உமர்: நீ கிறிஸ்தவ கோட்பாட்டை தவறாக புரிந்துக்கொண்டு இருக்கிறாய். ”இயேசு ஒரு மனிதன்” என்று நம்பினால், நீ சொல்வது போல நாம் நினைக்கலாம். ஆனால், இயேசு இறைவனாவார், எனவே இறைவனால், எதையும் செய்யமுடியும். 

இறைவனால், ஒருவரின் சுமையை எடுத்து அடுத்தவனின் மீது சுமத்த முடியும் (இஸ்லாம் சொல்வது போல), அதே நேரத்தில் மக்களின் சுமைகளை தானே சுமக்கவும் முடியும் (கிறிஸ்தவம் சொல்வது போல).

ஆக, மனிதர்களால் கூடாதது தான், ஆனால், தேவனால் எல்லாம் கூடும்.

தம்பி: இறைவனால் எல்லாம் கூடும், இதனை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இயேசு இறைவனல்ல, அவர் ஒரு மனிதனாவார். அப்படியானால், ஒரு மனிதனால் எப்படி இன்னொருவரின் சுமையை சுமக்க முடியும்?

உமர்: இயேசு இறைவனா மனிதனா? என்பது வேறு ஒரு தலைப்பில் நாம் விவாதிக்கவேண்டிய விஷயம். தற்போதைய விவாதம் என்ன? ஒருவர் எப்படி இன்னொருவரின் சுமையை சுமக்கமுடியும் என்பதாகும்.  இந்த உரையாடலின் மூலமாக நாம் இருவரும் ஒப்புக்கொண்ட விவரம் என்ன? இஸ்லாமிய கோட்பாடும், கிறிஸ்தவ கோட்பாடும் ஒத்துப்போகின்ற விஷயம் என்னவென்றால், ’இறைவன் விரும்பினால், அவனால் எல்லாம் கூடும்’ என்பதாகும்.

இதன் படி பார்த்தால்: 

  • இறைவன் (அல்லாஹ்), ஒருவரின் சுமையை இன்னொருவரின் மீது சுமத்துகிறான்.
  • இறைவன் (இயேசு), இன்னொருவரின் சுமையை தன் மீது சுமத்திக்கொண்டார்.

மேற்கண்ட இரண்டும் ஒன்று தான், மேலும் இறைவனுக்கு இது சாத்தியமானது தான். 

தம்பி: உண்மையாகவே எனக்கு குழப்பமாக இருக்கிறது.

உமர்: தம்பி, இங்கு குழப்பமடைவதற்கு ஒன்றுமில்லை. இறைவனால் எல்லாம் கூடும் என்று நீ சொன்னாய். அதனை நான் ஆமோதித்தேன் அவ்வளவு தான். 

கிறிஸ்தவ கோட்பாட்டின் படியும், ஒரு பாவியான மனிதன் இன்னொரு மனிதனின் சுமையை நான் சுமந்துக்கொள்ளுவேன், கியாமத் நாளன்று நான் காப்பாற்றுவேன் என்று சொல்லமுடியாது. இதையே குர்-ஆனும் சொல்கிறது (குர்-ஆன் 29:12). 

ஆனால், தேவன் தன் விருப்பத்தின் படி, மனிதர்களின் மீது வைத்த அன்பினால், பூமியில் மனிதனாக வந்து, யாருடைய கட்டாயமும் இல்லாமல், மனிதர்களின் சுமைகளை சுமந்துக்கொண்டார். ஒட்டுமொத்த மனித சமுதாயத்தை பாவசுமைகளிலிருந்து விடுதலை செய்தார். அவருடைய இச்செயலை நம்புபவர்களுக்கு கியாமத் நாளில் நியாயத்தீர்ப்பு இல்லை. 

மேற்கண்ட இரண்டு விவரங்களும், குர்-ஆனுக்கு எதிராக இருக்கிறது என்றுச் சொல்லமுடியாது. இறைவனால் எல்லாம் கூடும் என்பது தானே இஸ்லாமின் நம்பிக்கை!

தம்பி: ம்ம்ம்... நாம் எங்கு ஆரம்பித்தோம்… எங்கு வந்து முடித்தோம்.  பாவ சுமைகள் சுமப்பது பற்றி வசனங்களில் குர்-ஆனில் முரண்பாடு இல்லை என்பதை தெரிவிக்க நான் போன் செய்தேன்.

உமர்: நாம் கண்ட குர்-ஆன் வசனங்களில் முரண்பாடு இல்லை என்று நீ சொல்வதானால், கிறிஸ்தவ கோட்பாட்டை நீ அங்கீகரிக்கவேண்டும். அல்லாஹ், மனிதர்களின் சுமைகளை இடமாற்றம் செய்ய அதிகாரம் படைத்தவன் என்று நம்பினால், அதே அல்லாஹ், மக்களின் சுமைகளை தன் மீது ஏற்றுக்கொண்டு அவர்களை விடுதலைச் செய்யவும் அதிகாரம் படைத்தவன் என்று நம்புவது தான் சரியானதாகும்.

தம்பி: சும்மா சொல்லக்கூடாது, உங்களிடம் ஏதோ விசேஷித்த ஒன்று இருக்கிறது. 

உமர்: என்னிடம் ஒன்றுமில்லை தம்பி,  நான் நம்பும் கோட்பாடு அப்படிப்பட்டது. நீ தலைகீழாக கேள்விகள் கேட்டாலும், அதனிடம் பதில் இருக்கிறது. 

தம்பி: கடைசியாக, ”சுமைகள் பற்றிய வசனங்களில்” குர்-ஆனில் முரண்பாடு இல்லை என்று ஒப்புக்கொண்டீர்கள் என்று நம்புகிறேன்.

உமர்: அப்படியானால், இயேசு நம் பாவ சுமைகளை சுமந்துக்கொண்டது, குர்-ஆனில் ஒப்புக்கொள்ளப்பட்ட கோட்பாடு தான் என்று நீயும் ஒப்புக்கொண்டாய் என்று நம்புகிறேன்.

தம்பி: அதெப்படி ஒப்புக்கொள்ளமுடியும்? 

உமர்: தம்பி, மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை என்றுச் சொன்னால் முடியாது. ஏதாவது ஒன்றை தெரிவு செய். மறந்தே போயிட்டேன், ஆபிரகாமின் மகனை பலியிட்ட விஷயம் பற்றி நான் எழுதியது பற்றி நீ ஒன்றுமே கேட்கவில்லையே!

தம்பி: வேண்டாம்.. வேண்டாம்.. எனக்கு இப்போது நேரமில்லை, நான் கூழ் குடிக்க போகனும். ச்சே… உங்களோடு சேர்ந்து நானும் ‘கூழ்’ என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நான் போனை வைக்கிறேன், பிறகு பேசலாம்.  குட்பை.

உமர்: குட்பை.


பக்ரீத் கட்டுரைகள் பக்கம்

ரமளான் கட்டுரைகள் பக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்