குர்ஆம் 21:7 அல்லாஹ் ஆண்களை மட்டுமே நபிகளாக அனுப்பினானா? மொழியாக்கங்கள் ஏன் உண்மையை மறைக்க முயலுகின்றன?
குர்ஆனை மொழியாக்கம் செய்பவர்கள், குர்ஆனின் பலவகையான பிழைகளை மறைப்பதற்காக, அரபி மூலத்தில் சொல்லப்பட்டதற்கு மாற்றமாக மொழியாக்கம் செய்வதை நம்முடைய கட்டுரைகளில் நாம் எடுத்துக்காட்டுகிறோம். இந்த சிறிய கட்டுரையில் குர்ஆனின் 21:7ம் வசனத்தை ஆய்விற்காக எடுத்துக்கொள்வோம்.
இக்கட்டுரையின் தலைப்புக்கள்:
1) ஐந்து தமிழாக்கங்களில் குர்ஆன் 21:7 (மற்றும் 12:109 & 16:43) வசனங்கள்
2) அரபி மூலத்தில் குர்ஆன் வசனங்கள் - ரிஜாலன் மற்றும் நாஸ்
3) அல்லாஹ் ஆண்களையே நபிகளாக அனுப்பினானா?
4) முந்தைய வேதங்கள் என்ன சொல்கின்றன? யெகோவா தேவன் பெண் நபிகளை அனுப்பியுள்ளாரா?
5) குர்ஆன் மொழியாக்கங்களில் ஏன் இந்த வித்தியாசங்கள்
6) முடிவுரை
1) ஐந்து தமிழாக்கங்களில் குர்ஆன் 21:7 (மற்றும் 12:109 & 16:43) வசனங்கள்
முதலாவது, குர்ஆன் 21:7ம் வசனத்தை ஐந்து தமிழாக்கங்களில் படிப்போம். ஏதாவது ஒரு மொழியாக்கத்தை எடுத்துக்கொண்டு கிறிஸ்தவர்கள் விளக்கமளிக்கிறார்கள் என்று முஸ்லிம்கள் குற்றம்சாட்டக்கூடாது என்பதற்காக, ஐந்து தமிழாக்கங்களில் இவ்வசனத்தை படிப்போம்.
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:
21:7. (நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை; அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே “(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்” (என்று நபியே! அவர்களிடம் கூறும்).
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
21:7. (நபியே!) உங்களுக்கு முன்னரும் (மனிதர்களில்) ஆண்களையே தவிர வேறொருவரையும் நாம் நம்முடைய தூதராக அனுப்பவில்லை. (உங்களுக்கு அறிவிப்பது போன்றே நம்முடைய கட்டளைகளை) அவர்களுக்கும் வஹீ (மூலம்) அறிவித்தோம். ஆகவே, (இவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்: இது) உங்களுக்குத் தெரியாதிருந்தால் முன்னுள்ள வேதத்தை உடையவரிடத்தில் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:
21:7. மேலும் (நபியே!) உமக்கு முன்னரும் நாம் மனிதர்களையே தூதர்களாக அனுப்பியுள்ளோம். அவர்களுக்கும் நாம் வஹி அருளியிருந்தோம். நீங்கள் ஞானமற்றவர்களாயிருந்தால் வேதம் அருளப்பட்டவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:
21:7. மேலும், (நபியே!) உமக்கு முன்னரும் (மனிதர்களிலிருந்து) ஆடவர்களையே அன்றி, வேறெவரையும் நாம் நம்முடைய தூதராக அனுப்பவில்லை, (உமக்கு அறிவிக்கிற பிரகாரமே) அவர்களுக்கு நாம் வஹீ அறிவித்தோம், ஆகவே, (இவர்களிடம் நீர் கூறுவீராக! இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (வேதத்தை) அறிந்தோரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
பிஜே தமிழாக்கம்:
21:7. (முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம்.239 அவர்களுக்கு தூதுச்செய்தி அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!
இந்த ஐந்து தமிழாக்கங்கள் ஒரே விதமாக இவ்வசனத்தை விளக்கவில்லை. கீழே கொடுக்கப்பட்ட அட்டவணையில், இதனை தெளிவாக காணலாம்.
எண் | தமிழாக்கம் | அல்லாஹ் யாரை தூதர்களாக அனுப்பினான்? |
1 | டாக்டர். முஹம்மது ஜான் | மானிடர்களையே |
2 | அப்துல் ஹமீது பாகவி | ஆண்களையே |
3 | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) | மனிதர்களையே |
4 | மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) | ஆடவர்களையே |
5 | பிஜே தமிழாக்கம் | ஆண்களையே |
இதே விவரத்தை குர்ஆன் 12:109 & 16:43 வசனங்களிலும் காணலாம்.
கவனிக்கவும்: அப்துல் ஹமீது பாகவி, சௌதி தமிழாக்கம் & பீஜே தமிழாக்கம் போன்றவைகளில் 'அல்லாஹ் ஆண்களை தூதர்களாக அனுப்பினான்' என்று உள்ளது. மீதமுள்ள இரண்டு தமிழாக்கங்களில் 'மானிடர்கள்' என்ற வார்த்தையை பயன்படுத்தி, ஆண்கள் பெண்கள் இருபாலாரிலும் அல்லாஹ் தூதர்களை அனுப்பியதாக பொருள்படும் படி செய்துள்ளார்கள். இவர்கள் ஏன் இப்படி 'மனிதர்கள்/மானிடர்கள்' என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள்? அரபி மூலத்தில் என்ன உள்ளது?
2) அரபி மூலத்தில் குர்ஆன் வசனங்கள் - ரிஜாலன் மற்றும் நாஸ்
அரபி மூலத்தில் இந்த வசனத்தில் "ஆண்கள் (அரபி - ரிஜாலன்)" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால், தமிழாக்கங்களில் "மானிடர்கள் (அரபி - நாஸ்)" என்ற சொல்லை வேண்டுமென்றே பயன்படுத்தியுள்ளார்கள். ஒட்டுமொத்த மானிடவர்க்கத்தை (மனிதகுலத்தை) குறிக்க அரபியில் 'நாஸ்' என்ற வார்த்தை உள்ளது.
தமிழ் வார்த்தை | அரபி வார்த்தை |
ஆண்கள் | ரிஜாலன் |
மானிடர்கள் | நாஸ் |
குர்ஆன் 21:7 அரபி மூலம்:
அரபியில் குர்ஆன் 21:7 - வமா அர்ஸல்னா கப்லகா இல்லா ரிஜாலன் . . .
குர்ஆனின் 114வது அத்தியாயத்திற்கு “ஸூரத்துந் நாஸ்” என்று பெயர். இதன் பொருள் மனிதர்கள், மானிடர்கள் என்பதாகும். இதில் ஆண் பெண் அனைவரும் அடங்குவார்கள்.
3) அல்லாஹ் ஆண்களையே நபிகளாக அனுப்பினானா?
இதுவரை கண்ட விவரங்களிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாக புரிகின்றது, அதாவது, குர்ஆனை தமிழாக்கம் செய்தவர்களில் சிலர் “ஆண்கள் (ரிஜாலன்)” என்று வரும் மூல வார்த்தையை மாற்றி, “மானிடர்கள்/மனிதர்கள் (நாஸ்)” என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள்.
ஏன் இவர்கள் இப்படி செய்தார்கள்? என்று சிந்திக்கும் போது, பெண்களிலும் தூதர்களை அல்லாஹ் அனுப்பியிருக்கின்றான், ஆனால் இந்த வசனம் தவறாக உள்ளது, எனவே, 'ஆண்கள்' என்று உள்ளதை, மானிடர்கள் என்று மாற்றி மொழியாக்கம் செய்வோம் என்று எண்ணி இதனை செய்துள்ளார்கள்.
குர்ஆனின் அரபி மூலத்தின் படி, அல்லாஹ் ஆண்களையே தன் தூதர்களாக அனுப்பியிருக்கின்றான் என்று பொருள் வருகிறது. இதனை பிஜே போன்றவர்கள் விளக்கங்கள் கொடுக்கும் போது, குறிப்பிட்டுள்ளார்கள்.
பிஜே தம்முடைய குர்ஆன் தமிழாக்கத்தில் வசனம் 21:7, விளக்க குறிப்பு 239ல், இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏன் அல்லாஹ் ஆண்களை மட்டுமே தூதர்களாக அனுப்பினான், பெண்களை ஏன் அனுப்பவில்லை என்று தன்னால் முடிந்த விளக்கத்தை கொடுத்துள்ளார்.
பிஜே தமிழாக்க விளக்கம் 239. பெண்களில் நபிமார்கள் இல்லாதது ஏன்?
// இறைத்தூதுப் பணி மிகவும் கடினமான பொறுப்பாகும். இப்பொறுப்பை நிறைவேற்றுவது ஆண்களில் கூட அனைவராலும் சாத்தியமாகாததாகும்.
இறைத்தூதராக அனுப்பப்படுவோர் தமது சமூகத்தில் இருந்த அத்தனை கொள்கை கோட்பாடுகளையும் தனியொருவராக நின்று எதிர்க்க வேண்டும்.
- அவ்வாறு எதிர்க்கும்போது கொல்லப்படலாம்!
- நாடு கடத்தப்படலாம்!
- கல்லெறிந்து சித்திரவதை செய்யப்படலாம்!
- ஆடையைக் கிழித்து நிர்வாணப்படுத்தப்படலாம்!
இன்னும் சொல்லொணாத் துன்பங்களை அவர்கள் அனுபவித்து ஆக வேண்டும்.
பெண்களாக இருந்தால் இவை அனைத்துக்கும் மேலாக அவர்களிடம் பாலியல் பலாத்காரம் செய்து மேலும் துன்புறுத்துவார்கள்.
ஒட்டுமொத்த சமுதாயத்தையே தன்னந்தனியாக களத்தில் நின்று எதிர்ப்பதால் ஏற்படும் சிரமங்களை எந்தப் பெண்ணாலும் நிச்சயம் தாங்கிக் கொள்ளவே முடியாது. //
உண்மையாகவே, ஆண்களையே அல்லாஹ் தூதர்களையே அனுப்பினானா? என்று சந்தேகம் வந்தால் என்ன செய்வது? இதற்கு அதே 21:7ம் வசனம் பதில் தருகின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:
21:7. மேலும், (நபியே!) உமக்கு முன்னரும்) மனிதர்களிலிருந்து) ஆடவர்களையே அன்றி, வேறெவரையும் நாம் நம்முடைய தூதராக அனுப்பவில்லை, (உமக்கு அறிவிக்கிற பிரகாரமே) அவர்களுக்கு நாம் வஹீ அறிவித்தோம், ஆகவே, (இவர்களிடம் நீர் கூறுவீராக! இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (வேதத்தை) அறிந்தோரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
அதாவது குர்ஆனில் சந்தேகம் வந்தால், முஸ்லிம்கள் யாரிடம் சென்று தெரிந்துக்கொள்ளவேண்டும்? முந்தைய வேதங்கள் கொடுக்கப்பட்ட யூதர்களிடமும், கிறிஸ்தவர்களிடம் சென்று தெரிந்துக்கொள்ளவேன்டும். முஹம்மதுவிற்கும் சந்தேகம் வந்தாலும் சரி, அவர் யூத கிறிஸ்தவர்களிடம் வரவேண்டியது தான்.
முஹம்மது ஜான் தமிழாக்கம்:
10:94. (நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக; நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம்.
சரி, இப்போது நாம் முந்தைய வேதங்களில் பெண் தூதர்கள் பற்றி என்ன உள்ளது என்பதை அறிவோம்.
4) முந்தைய வேதங்கள் என்ன சொல்கின்றன? யெகோவா தேவன் பெண் நபிகளை அனுப்பியுள்ளாரா?
இந்த ஆய்வுக் கட்டுரையை படிப்பவர்கள், ஒரு விவரத்தை தெளிவாக புரிந்துக்கொள்வார்கள், அது என்னவென்றால், குர்ஆனின் அல்லாஹ்வும், பைபிளின் யெகோவா தேவனும் வெவ்வேறானவர்கள் என்பதைத் தான். அல்லாஹ் மூன்று இடங்களில், நான் ஆண்களை மட்டுமே தூதர்களாக அனுப்பினேன் என்று கூறுகின்றான், ஆனால் பைபிளின் தேவனோ, அனேக பெண் தீர்க்கதரிசிகளை, தூதர்களை அனுப்பியுள்ளார். இவ்விருவர்களும் எப்படி ஒருவராக முடியும்? ஒருவேளை, அல்லாஹ்விற்கு கடந்த கால நிகழ்ச்சிகளை மறந்துபோகும் வியாதி இருந்ததா? என்று கேட்கத்தோன்றுகிறது. அப்படி இல்லையென்றால், ஏன் அல்லாஹ் குர்ஆனில் வெறும் ஆண்களையே தூதர்களாக அனுப்பினேன் என்றுச் சொல்லமுடிந்தது? அல்லாஹ் மறந்தானா? அல்லது மறைத்தானா?
- அல்லாஹ் இறைவன் என்றால் அவனால் மறக்கமுடியுமா? முடியாது
- அல்லாஹ் தான் யெகோவா என்றால், எப்படி தான் பெண் தீர்க்கதரிசிகளை அனுப்பியதை மறைத்து, குர்ஆனில் எழுதமுடியும்?
- இதுவும் இல்லை, அதுவும் இல்லையென்றால், என்ன தான் பதில்?
இதற்கு பதில் சொல்வது மிகவும் சுலபம், அதாவது அல்லாஹ் யெகோவா தேவன் இல்லை என்பது தான் அது. இவ்விருவரும் நேர் எதிர் துருவங்கள். இது சரியான பதில் இல்லையென்றுச் சொல்லும் முஸ்லிம்களிடம் வேறு பதில் உண்டா?
[யூதர்கள் பைபிளை மாற்றிவிட்டார்கள் என்றுச் சொல்லி, உங்கள் முட்டாள்தனத்தை வெளியே காட்டிவிடாதீர்கள் முஸ்லிம்களே! தோராவில் மரியாம் என்ற மோசேயின் சகோதரி ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லி 2000 ஆண்டுகளுக்கு பிறகு தான் குர்ஆன் என்ற ஒன்று உலகில் வருகிறது. இப்படிப்பட்ட சரித்திர மற்றும் கால இடைவெளியை கவனத்தில் கொண்டு பதில் அளிக்கவேண்டும் முஸ்லிம்களே!]
பைபிளிலிருந்து சில பெண் தீர்க்கதரிசிகளை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவைகளுக்கான வசன ஆதாரங்களையும் தருகிறேன், இவைகளை படித்த பிறகு குர்ஆன் 21:7ஐ படியுங்கள். உண்மையை புரிந்துக்கொள்ளுங்கள்.
பெண் நபி 1: மிரியாம்
யாத்திராகமம் 15:20
20. ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.
பெண் நபி 2: தெபொராள்
நியாயாதிபதிகள் 4:4
4. அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்.
பெண் நபி 3: உல்தாள்
II இராஜாக்கள் 22: 13 -15 & 2 நாளாகமம் 34:21-22
13. கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் ஜனத்திற்காகவும் யூதாவனைத்திற்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய பிதாக்கள் இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளுக்குச் செவிகொடாதபடியினால், நம்மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.
14. அப்பொழுது ஆசாரியனாகிய இல்க்கியாவும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும், அசாயாவும், அர்காசின் குமாரனாகிய திக்வாவின் மகனான சல்லூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போய் அவளோடே பேசினார்கள்; அவள் எருசலேமின் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள்.
15. அவள் அவர்களை நோக்கி: உங்களை என்னிடத்தில் அனுப்பினவரிடத்தில் நீங்கள் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்:
பெண் நபி 4: ஏசாயாவின் மனைவி ஒரு தீர்க்கதரிசி
ஏசாயா 8:3
3. நான் தீர்க்கதரிசியானவளைச் சேர்ந்தபோது, அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்னும் பேரை அவனுக்கு இடு.
எபிரேய மொழியை ஆய்வு செய்தவர்களின் கூற்றின்படி, ஏசாயாவின் மனைவி கூட ஒரு தீர்க்கதரிசி தான். ஏசாயா என்பவர் ஒரு தீர்க்கதரிசி என்பதால், அவரது மனைவி சாதாரண பெண்ணாக இருந்தால், அவரையும் தீர்க்கதரிசி என்று பைபிள் அழைக்கவில்லை. உண்மையாகவே, அந்தப்பெண் தீர்க்கதரிசியாக இருந்தபடியினால் இங்கு இப்படி குறிக்கப்பட்டுள்ளது.
பெண் நபி 5: அன்னாள்
லூக்கா 2:36-38
36. ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்.
37. ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.
38. அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாக காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள்.
பெண் நபி 5: இயேசுவின் சீடர் "பிலிப்புவின் மகள்கள்"
அப்போஸ்தலர் 21:9
9. தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள்.
பெண் நபி 6: புதிய ஏற்பாட்டு பெண் தீர்க்கதரிசிகள்
I கொரிந்தியர் 11:5:
5. ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.
குறிப்பு: தீர்க்கதரிசனம் சொல்லும் போது பெண்கள் தலையை மூடவேண்டும் என்று இந்த வேதவசனம் கூறுகிறது. இதன் அர்த்தமென்ன? பெண் தீர்க்கதரிசிகள் திருச்சபைகளில் உண்டு என்பதாகும். பெண்கள் தலைமுடியை மூடாமல் ஜெபம் அல்லது தீர்க்கதரிசனம் உரைக்கும் போது, அவர்களின் தலைமுடி காற்றில் ஆடும் போது பார்ப்பதற்கு நன்றாக இருக்காது என்பதற்காக இப்படி தலையை மூடுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. பெண்கள் மூலமாக கர்த்தர் சொல்லும் தீர்க்கதரிசனங்களை மக்கள் கூர்ந்து கேட்பார்களா அல்லது அவர்களது தலைமுடி காற்றில் இங்கும் அங்கும் ஆடுவதை பார்ப்பார்களா? எனவே தான் இந்த ஆலோசனை.
தீர்க்கதரிசி (நபி) இஸ்லாமிலும் கிறிஸ்தவத்திலும்:
இஸ்லாமில் தீர்க்கதரிசி என்றுச் சொன்னால், அவர் கீழ்கண்டவைகளைச் செய்வார்:
- மக்களை எதிர்த்து தீர்க்கதரிசனம் உரைப்பார், தன் செய்தியைச் சொல்வார்.
- தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்தி சண்டை போடுவார்
- முஹம்மதுவைப் போன்று ஆட்களை சேர்த்துக்கொண்டு வேறு நாட்டவர் மீது யுத்தம் செய்வார். இஸ்லாமை ஏற்கமறுத்தால் யுத்தம், இஸ்லாமுக்கு அடிபணிந்தால் இஸ்லாமிய ஆட்சிக்கு கட்டவேண்டும்.
- அதாவது ஒரு தீர்க்கதரிசி என்றால் சண்டை போடுவது கட்டாயமாக இருக்கும். இதற்கு சிறந்த உதாரணம், இஸ்லாமிய நபியாகிய முஹம்மது தான்.
ஆனால், பைபிளின் படி தீர்க்கதரிசி என்றால் சண்டை போடுபவர் அல்ல. அவர் கர்த்தரின் வார்த்தைகளை தன் நாட்டு மக்களுக்கு, தன் ஊராருக்கு, தன் சபைக்குச் சொல்பவர் அல்லது சொல்பவள். பழைய ஏற்பாட்டில் சில நேரங்களில் மட்டுமே அவர் கர்த்தரின் திட்டத்தின் படி யுத்தத்தில் ஈடுபடுவார், மற்ற நேரங்களில் அவர் ஒரு சாதாரண மனிதராக மக்களுக்கு எச்சரிக்கை செய்தியை கொடுப்பார். இதைப் பற்றி தேவைப்படும் போது தனி கட்டுரையாக காண்போம்.
5) குர்ஆன் மொழியாக்கங்களில் ஏன் இந்த வித்தியாசங்கள்
முஸ்லிம் அறிஞர்களில் சிலர் முந்தையை வேதங்களை ஓரளவிற்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள், குர்ஆன் 21:7ம் வசனத்தை மொழியாக்கம் செய்யும் போது, அவர்கள் மனதுக்கு அது உறுத்தும் ஒன்றாக இருக்கும். இது எப்படி சாத்தியம்? முந்தைய வேதங்களை கொடுத்தவர் அல்லாஹ் என்றுச் சொன்னால், அவர் எப்படி குர்ஆனில் வெறும் ஆண்களை மட்டுமே நான் தூதர்களாக அனுப்பினேன் என்றுச் சொல்லமுடியும் போன்ற கேள்விகள் அவர்களுக்கு எழும்.
- இந்த தர்மசங்கட சூழ்நிலையில் அவர்களால் என்ன செய்ய முடியும்?
- முந்தைய வேதங்களை கொடுத்தவர் அல்லாஹ் இல்லை என்றுச் சொல்லமுடியுமா?
- அல்லாஹ்வும் யெகோவா தேவனும் வெவ்வேறானவர்கள் என்று சொல்லமுடியுமா?
- தங்கள் மனசாட்சிக்கு எதிராக 'ஆண்களை' மட்டுமே அல்லாஹ் தூதர்களாக அனுப்பினான் என்று தமிழாக்கம் செய்யமுடியுமா?
எனவே, 'ஆண்கள் (ரிஜாலன்)' என்ற வார்த்தைக்கு பதிலாக, மானிடர்கள் (நாஸ்) என்ற வார்த்தையை எழுதி கைகழுவிவிட்டார்கள், முஸ்லிம் அறிஞர்கள்.
6) முடிவுரை:
இதுவரை நாம் குர்ஆன் 21:7ம் வசனத்தை தமிழாக்கங்களிலும், அரபி மூலத்திலும் ஆய்வு செய்தோம்.
குர்ஆனை தமிழாக்கம் செய்தவர்களில் சிலர் 'ஆண்கள்' என்ற வார்த்தையை 'மானிடர்' என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள். முந்தைய வேதங்களை ஓரளவிற்கு அவர்கள் அறிந்தபடியினால், இந்த காரியத்தை அவர்கள் செய்தார்கள்.
இது உண்மையானால்,
1) முந்தைய வேதங்களில் பெண் தீர்க்கதரிசிகளையும் அல்லாஹ் அனுப்பியுள்ளான் என்றுச் சொல்வது பொய்யா?
2) அல்லாஹ் முந்தைய வேதங்களை அனுப்பவில்லையா?
3) ஒருவேளை அல்லாஹ்விற்கு ஞாபக மறதியா? தன்னுடைய முந்தைய செயல்களை மறந்துவிட்டானா?
4) ஏனென்றால், இந்த விஷயத்தில் (ஆண்களை தூதர்களாக அனுப்பிய விஷயத்தில்) சந்தேகம் இருந்தால், பைபிளை அறிந்தவர்களிடம் கேட்டு தெளிவு பெறும்படி ஏன் அல்லாஹ் அதே வசனத்தில் சொல்கிறான்?
5) உண்மையாகவே, குர்ஆன் 21:7ம் வசனத்தை கொடுத்தவனுக்கு முந்தைய வேதம் பற்றி தெரியவில்லை என்று தானே அர்த்தம்.
6) ஒருவேளை, 2000 ஆண்டுகளுக்கு பிறகு முஹம்மது என்பவர் வந்து, குர்ஆன் 21:7ல், ஆண்களை மட்டுமே அல்லாஹ் தூதர்களாக அனுப்பினான் என்ற வசனம் வரும் என்று யூதரகள் அறிந்துக்கொண்டு மூஸாவின் காலத்திலேயே பெண் தீர்க்கதரிசிகளையும் தௌராத்தில் (ஐந்தாகமங்களில்) சேர்த்துவிட்டார்களா? இதே போல கிறிஸ்தவர்களும் செய்தார்களா? என்னே ஒரு ஞானம்! யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இருக்கும் ஞானத்துக்கு முன்பாக அல்லாஹ்வின் ஞானம் ஒன்றுக்கும் உதவாது என்றுச் சொல்லத்தோன்றுகிறது.
குர்ஆனின் குழப்பத்திற்கும், குர்ஆன் 21:7ல் வரும் சரித்திர பிழைக்கும் முஸ்லிம்கள் பதில்களைச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள். தங்கள் கடமையைச் செய்வார்களா? முஸ்லிம்கள்.