ஏழு வட்டார மொழிவழக்கில் குர்‍ஆன் - நடைமுறை சிக்கல்களும் தீர்வுகளும்

முஹம்மதுவிற்கு அரபியர்கள் என்றால் உயிர்,  ஏனென்றால் இவரும் ஒரு அரபியர் தானே! இதனால் தான் அல்லாஹ் ஒரு குர்‍ஆனை அனுப்பும் போது, தம் அரபி முஸ்லிம்களுக்கு அது கடினமாக இருக்கிறதென்றுச் சொல்லி, முஹம்மது அல்லாஹ்விடம் வேண்டி, 7 வட்டார மொழிகளில் குர்‍ஆனை பெற்றுக்கொண்டார். இதைப் பற்றிய முந்தைய கட்டுரைகளை அடிக்குறிப்பில் கொடுத்துள்ளேன், அவைகளை படித்துக் கொள்ளவும்.

இந்த சிறிய கட்டுரையில், இந்த "ஏழு வட்டார மொழியில் குர்‍ஆன்" என்ற கோட்பாட்டில் உள்ள ஒரு மிகப்பெரிய சிக்கலை உங்கள் முன்பு வைக்கப்போகிறேன். சிக்கலை அவிழ்ப்பீர்களா? என்று என்னிடம் கேட்டால், இதனை அவிழ்க்கும் உரிமையும், பொறுப்பும் முஸ்லிம்களுக்குத் தான் உள்ளது, எனவே அவர்கள் தான் அவிழ்க்கவேண்டும்.

இதனை படிப்பவர்களில் முஸ்லிம்கள் இருந்தால், அவர் இந்த சிக்கலைத் தீர்த்து, அல்லாஹ்விற்கும், இஸ்லாமுக்கும் உதவி செய்யட்டும்.

சரி, வாருங்கள், அது என்ன சிக்கல் என்பதைப் பார்ப்போம். ஏழு வட்டார குர்‍ஆன் இறங்கியது பற்றி பேசும் ஹதீஸ்கள் இதோ:

புகாரி எண் 3129:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரேயொரு (வட்டார) மொழி வழக்குப்படி ஜிப்ரீல் (திருக்குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத் தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழி வழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத் தருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்து,) இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது. என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இதே விவரத்தை இன்னொரு ஹதீஸில் மேலதிக  விவரங்களோடு காணலாம், அதன் சுருக்கத்தை இங்கு தருகிறேன்.

முஸ்லிம் எண்: 1491

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

. . . அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் "உபை, "குர்ஆனை ஓர் ஓதல் முறைப்படி ஓதுவீராக" என எனக்கு (இறைவனிடமிருந்து) செய்தியறிவிக்கப்பட்டது. உடனே நான் என் சமுதாயத்தாருக்கு இன்னும் சுலபமாக்கும்படி (இறைவனிடம்) கோரினேன். அப்போது "குர்ஆனை இரண்டு ஓதல் முறைப்படி ஓதுவீராக!" என எனக்கு இரண்டாவது முறையாக இறைவன் அறிவித்தான். உடனே நான் இன்னும் என் சமுதாயத்தாருக்கு சுலபமாக்கும்படி கோரினேன். மூன்றாவது முறையில் குர்ஆனை ஏழு ஓதல் முறைகளின் படி ஓதும்படி எனக்கு இறைவன் அறிவித்தான். . . .

வட்டார வழக்கில் குர்‍ஆன் என்றால் என்ன? 

“வட்டார மொழி வழக்கில் குர்‍ஆன்” என்றால் என்ன என்பதை புரிந்துக்கொள்ள, தமிழ் மொழியின் வட்டார மொழி வழக்கை கவனிக்கவேண்டும்.  

கீழ்கண்ட இரண்டு பத்திகளில் சில உதாரணங்களை பார்க்கவும்:

தமிழ் வட்டார மொழி வழக்குகள்

ஒலிப்புமுறை

தமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதிலேயே மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, "இங்கே" என்ற சொல், தஞ்சாவூர் பகுதிகளில் "இங்க" என்றும், திருநெல்வேலி பகுதிகளில் "இங்கனெ" என்றும், இராமநாதபுரம் பகுதிகளில் "இங்குட்டு" என்றும், யாழ்ப்பாணப் பகுதிகளில் "இங்கை" என்றும், கன்னியாகுமரி மற்றும் மட்டக்களப்பில் சில பகுதிகளில் "இஞ்ஞ" என்றும் வழங்கப்படுகின்றது. 

சொற்கள்

. . .தமிழில் வழங்கப்படும் சில சொற்கள் சில வட்டாரங்களுக்கு சொந்தமானவை. எடுத்துக்காட்டுகள்:

  • மதுரை: எல அவிங்க எங்கிட்டு போனாய்ங்க?
  • திருநெல்வேலி: எல அவுக எங்க போனாக?
  • கன்னியாகுமரி: மக்கா அவாள் எங்கடே?
  • சென்னை: ஏய் அவனுவ எங்க போனானுவ?

இப்படியாக ஒலியும் சொற்களும் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடுகின்றன.

மதுரையில் பிறந்து வாழும் ஒரு நபருக்கு, சென்னையில் பேசும் வட்டார மொழி புரிந்தாலும், அதில் அவரால் சுலபமாக பேசமுடியாது, மனப்பாடம் செய்யமுடியாது. அவருக்கு மதுரையின்  வட்டார மொழியே அடிக்கடி வந்துவிடும்.

இதே போன்று ஒவ்வொருவருக்கும் அவரவரின் வட்டார மொழியே சுலபமானதாக இருக்கும். எழுதும் போது, தூயத்தமிழில் எழுதினாலும் (சிலர் எழுதும் போதும், வட்டார வழக்கத்தில் எழுதுவதும் உண்டு), பேசும் போது மட்டும் தங்களுக்கு எது பழக்கமாகிவிட்டதோ, அதையே பேசுவார்கள்.

இதே போன்று தான், குர்‍ஆனை முதன் முதலாக இறக்கும் போது, அல்லாஹ் மக்காவின் மக்களாகிய முஹம்மதுவின் இனத்தாரான குறைஷிகளின் அரபி வட்டார வழக்கப்படி இறக்கினார். 

அந்த குர்‍ஆன் குறைஷிகளுக்கு புரிந்தது, சுலபமாகவும் இருந்தது (மதுரைக்காரனுக்கு மதுரைத் தமிழ் மாதிரி), ஆனால் வேறு பகுதி அரபியர்களுக்கு கொஞ்சம் கடினமாகவே குர்‍ஆன் காணப்பட்டது, ஏனென்றால் அது தாங்கள் பேசும் வழக்கில் இல்லையே!

இதனை முஹம்மது கவனித்தார், மக்களின் வேதனை, அரசனின் வேதனையல்லவா? உடனே அல்லாஹ்விடம் வேண்டினார். அல்லாஹ்வும் முஹம்மதுவின் வேண்டுதலை ஒப்புக்கொண்டார், ஏழு வட்டார மொழி வழக்கத்தில் குர்‍ஆன் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தது முஹம்மதுவின் கடைசி மூச்சு வரைக்கும்.

குர்‍ஆனில் மொத்த வசனங்கள்:

இன்று நம்மிடம் இருக்கும் ஹஃப்ஸ் குர்‍ஆனில் 6236 வசனங்கள் உள்ளன. இரண்டாவது வட்டார வழக்கில் கூட முழு குர்‍ஆன் தேவை அல்லவா, எனவே, இரண்டாவது வட்டார வழக்க குர்‍ஆனில்  கூட 6236 வசனங்கள் இருக்கும். இதே போன்று ஒவ்வொரு வட்டார குர்‍ஆனிலும் 100% வசனங்கள் இறக்கப்பட்டன என்று கருதினால், மொத்தம் 43 ஆயிரம் வசனங்கள் வருகின்றது (7 x 6236).

ஒருவேளை, வெறும் 75% வசனங்கள் மட்டும் தான் இதர வட்டார வழக்கத்தில் தேவையாக இருந்தது, அவைகளைத் தான் அல்லாஹ் இறக்கினான் என்று முஸ்லிம்கள் சொன்னால் கூட, மொத்தமாக ஏழு வட்டார வழக்க குர்‍ஆனில் 34 ஆயிரம் வசனங்கள் வருகின்றன‌.   

இன்னும் சிறிது இறங்கி 50% வசனங்களைத் தான் இதர வட்டார மொழி வழக்கில் அல்லாஹ் இறக்கி இருந்திருக்கக்கூடும் என்று கருதினாலும் கூட‌, ஏழு வட்டார வழக்க குர்‍ஆனில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் வசனங்கள் வருகின்றன‌.  சரி, போகட்டும் 25% வசனங்கள் தான் வட்டார வழக்கில் தேவை என்று கணக்கிட்டாலும் மொத்தமாக‌ 15 ஆயிரம் வசனங்கள் வருகின்றது.

இதனை கீழ்கண்ட அட்டவணையில் கொடுத்துள்ளேன்.

ஏழு வட்டார வழக்கு குர்‍ஆன்களில் இருக்கும் சிக்கல்கள்

சிக்கல் 1: வட்டார மொழி வழக்க குர்‍ஆன் - நடைமுறை சாத்தியமா?

மேற்கண்ட அட்டவணையை கவனிக்கவும், அதில் உள்ள பிரச்சனை என்னவென்று புரிகின்றதா? அல்லாஹ் முஹம்மதுவிற்கு எத்தனை வசனங்களை இறக்கினான்? 6236 வசனங்களா? (அ) 43 ஆயிரம் வசனங்களா, (அ) 34 ஆயிரம் வசனங்களா, (அ) 24 ஆயிரம் அல்லது 15 ஆயிரமா? 

இப்படி ஒரு இறைவன் வட்டார மொழி வழக்கில் தன் வேதத்தை இறக்குவது 'நடைமுறையில் சாத்தியமா?' என்பதை சிந்தித்துப் பாருங்கள். "சாத்தியமா" என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், "இப்படிப்பட்ட ஒன்று தேவையா?" என்பது தான் முக்கியமான கேள்வி.

ஏழு வகையான வட்டார வழக்கு வசனங்களை முஹம்மது தம் சஹாபாக்களுக்கு விளக்கினாரா? இதற்கு ஏதாவது ஹதீஸ் சான்றுகள் உள்ளதா? ஒவ்வொரு வட்டார வழக்கு வசன‌ங்களை மனப்பாடம் செய்து, மக்களுக்குச் சொல்லிக்கொடுக்க யாரை முஹம்மது நியமித்தார்? இதற்கு சான்றுகள் உண்டா?

"உபை, நீ குறைஷி வட்டார குர்‍ஆனை கற்றுக்கொண்டு, மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடு", "மஸூத்" நீங்கள் மதினா வட்டாரத்தை பார்த்துக்கொள்ளுங்கள், "இதோ பாரப்பா சலீம், நீ மூன்றாவது  வட்டார குர்‍ஆனை  கற்றுக்கொள். என்றுச் சொல்லி முஹம்மது கூறியுள்ளாரா? ஏழு நபர்களை நியமித்து இந்த வேலையை ஒப்புக்கொடுத்தாரா?

நான்கு பேர்களிடம் குர்‍ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்று முஹம்மது கூறியுள்ளாரே தவிர, அந்த நான்கு பேரும் ஒவ்வொரு வட்டார குர்‍ஆனை மனனம் செய்தவர்கள் என்று முஹம்மது கூறவில்லை.

சிக்கல் 2: வட்டார மொழி வழக்க குர்‍ஆன் - அல்லாஹ்விற்கு அவதுறு அல்லவா?

கீழ்கண்ட வட்டார மொழி வழக்கத்தில் குர்‍ஆனின் வசனங்கள் இருந்தால், இது அல்லாஹ்வின் மேன்மையை உயர்த்துமா? அல்லது அவருக்கு அவதூறாக இருக்குமா? நீங்களே சிந்தியுங்கள்.

மதுரை: எல அவிங்க எங்கிட்டு போனாய்ங்க?

திருநெல்வேலி: எல அவுக எங்க போனாக?

கன்னியாகுமரி: மக்கா அவாள் எங்கடே?

சென்னை: ஏய் அவனுவ எங்க போனானுவ?

கீழ்கண்ட ஒரு வசனத்தை, மேற்கண்ட நான்கு ஊர்களின் வட்டாரத்தின் படி எழுதினால் எப்படி இருக்கும்?  இது அல்லாஹ்விற்கு அவதூறாக இருக்குமல்லவா?

குர்‍ஆன் 81:26 எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வட்டார வழக்கு இருந்தாலும், எழுதும் போது தூயத்தமிழில் எழுதவேண்டும். இதே போன்று அரபி மொழியில் பல வட்டார வழக்கு இருந்தாலும், எழுதும் போது, அதுவும் வேதம் என்ற ஸ்தானத்தில் இருக்கின்ற புத்தகத்தை எழுதும் போது, யாராவது வட்டார மொழியில் எழுதுவார்களா? எழுத்து வழக்கில் தானே எழுதுவார்கள். இது ஏன் நம் முஸ்லிம்களுக்கு புரியவில்லை?

சிக்கல் 3: இவ்வளவு பெரிய விவரம், கலிஃபா உஸ்மானுக்கு தெரியாமல் போனது எப்படி? அவைகளை எப்படி அவர் எரிப்பார்?

முஹம்மது உயிரோடு இருந்த சமயத்தில், அவர் அல்லாஹ்விடம் வேண்டி, ஏழு வகையான மொழி வழக்க குர்‍ஆன்களை பெற்று, அவைகளை மக்களுக்கு போதித்த விவரம், அவரது நெருங்கிய உள்வட்ட தோழரும், மருமகனுமான உஸ்மான் அவர்களுக்கும், அலி அவர்களுக்கும், மிதமிருந்த சஹாபாக்களுக்கும் எப்படி தெரியாமல் போனது?

குறைஷி வட்டார குர்‍ஆனை மட்டுமே வைத்துக்கொண்டு, மீதமுள்ள 6 வட்டார மொழி வழக்க குர்‍ஆன்களை எப்படி உஸ்மான் எரிப்பார்?

முஹம்மது வேண்டிக்கொண்டது வீணாக போய்விட்டதல்லவா? அல்லாஹ் ஜிப்ரீல் தூதன் மூலமாக  மாங்கு மாங்கு என்று இறக்கிய வசனங்களும் வீணாக எரிந்துவிட்டன அல்லவா?

குர்‍ஆன் விஷயத்தில் ஏதோ தில்லுமுல்லு நடந்துள்ளது. குர்‍ஆன்களை எரிக்கின்ற மிகப்பெரிய காரியத்தை உஸ்மான் செய்தார் என்றுச் சொன்னால், ஏதோ ஒரு சிக்கல் இருந்துள்ளது, அல்லது முஹம்மதுவிற்கு ஏழு வட்டார மொழி வழக்க குர்‍ஆன்கள் இறக்கப்பட்டதென்றுச் சொல்கின்ற ஹதீஸ்கள் முஹம்மது மீது இட்டுக்கட்டப்பட்ட‌ பொய்யாகவே இருக்கவேண்டும்.

சிக்கல் 4: வட்டார மொழி வழக்க குர்‍ஆன்  - ஒரு பெரிய ஏமாற்றுவேலையா?

இந்த கட்டுரையில் நாம் ஆய்வு செய்தவைகளை விருப்பு வெறுப்பு இன்றி ஆராயும் போது, "ஏழு குர்‍ஆன்கள்" என்ற வாதமே ஒரு ஏமாற்றுவேலை என்பதை அறியமுடியும்.

கீழ்கண்டவாறு நடந்திருக்க வாய்ப்பு உள்ளது:

1) வசனங்களை எழுதி வைத்துக்கொள்ளாமல், மனப்பாடம் செய்து அதனை பல ஆண்டுகள் ஞாபகத்தில் வைத்திருப்பதில் முஹம்மதுவிற்கும் மற்றவர்களுக்கும் பிரச்சனை இருந்துள்ளது.

2) ஒரு முறை சொன்ன வசனத்தை, பல நாட்களுக்கு மறுபடியும் திருப்பிச் சொல்லும் போது, முஹம்மது மாற்றிச் சொல்லியுள்ளார். மக்களும் மாற்றிச் சொல்லியுள்ளார்கள். இந்த பிரச்சனை முஹம்மதுவிடம் வரும் போது, இரண்டும் சரி தான் என்று அவர் கூறியுள்ளார். தம்முடைய பலவீனத்தை மறைப்பதற்காக முஹம்மதுவின் சமாளிஃபிகேஷன் தான் இந்த ஏழு வகையான குர்‍ஆன்கள்.

3) முஹம்மது மரித்த பிறகு, இஸ்லாம் விஸ்தரித்த போது, குர்‍ஆன் சிரியா, ஈராக், ஈரான், எகிப்து என்று பல நாடுகளுக்குச் சென்ற போது, மனப்பாடம் மீதே நம்பிக்கை வைத்த முஸ்லிம்கள், ஒருவர் மாறி ஒருவராக குர்‍ஆனை கற்றுக்கொடுத்துள்ளார்கள்.

4) முஹம்மதுவிற்கு பிறகு 15 ஆண்டுகளில், ஏழு வட்டார வழக்கில் அல்ல, ஒவ்வொரு பிராந்தியத்திற்கும், நாட்டிற்கும் என்று பல வகைகளில் குர்‍ஆனின் வசனங்கள் மாற்றி மாற்றி ஓதப்பட்டுள்ளது. இது தான், உஸ்மான் எல்லாவற்றையும் எரித்து விட்டு, மக்காவின் குறைஷிகளில் அரபி வட்டார வழக்கில் இருக்கவேண்டும் என்று கட்டளையிட்டார், மற்ற குர்‍ஆன்களை எரித்தார்.

5) முஹம்மதுவிற்கு பிறகு 200 ஆண்டுகள் கழித்து, ஹதீஸ்கள் எழுத்து வடிவில் கொண்டு வரப்பட்டபோது, இந்த சிக்கல்களைக் கவனித்த அன்றைய முஸ்லிம்கள், முஹம்மது மீது பல ஹதீஸ்களை இட்டுக்கட்டிவிட்டு, இஸ்லாமுக்கு நல்லப்பெயர் கொண்டுவர முயன்றுள்ளனர். பொய்கள் எத்தனை நாட்கள் நிலைநிற்கும்? ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரத்தானே வேண்டும்.

வட்டார மொழி வழக்க குர்‍ஆன்   - தீர்வு உண்டா?

இந்த கட்டுரையை படித்த முஸ்லிம் வாசகர்கள் தான் தீர்வு பற்றி சிந்திக்கவேண்டும். ஏனென்றால், இங்கு எழுப்பப்பட்ட‌ குர்‍ஆன் மீதான‌ கேள்விகளுக்கு பதில்களை அவர்கள் தான் தேடிகண்டுபிடிக்க வேண்டும்.

முடிவுரை:

இதுவரை குர்‍ஆனின் ஏழு வட்டார மொழி வழக்க குர்‍ஆன் பற்றிய ஹதீஸ்களை ஆய்வு செய்தோம். இதனை படிக்கும் யாருக்காவது, இக்கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்கள் பற்றி கேள்விகள் எழுந்தால் என் பிளாக்கரில் (http://isakoran.blogspot.com/) பின்னூட்டம் இடவும், பதில் சொல்ல நான் தயாராக இருக்கிறேன்.

அடிக்குறிப்புக்கள்:

  1. குர்‍ஆனைப் போன்று ஏன் அல்லாஹ் முந்தைய வேதங்களை ஏழு வட்டாரமொழிகளில் (கிராத்துக்களில்) இறக்கவில்லை?
  2. முஹம்மது அல்லாஹ்விடமிருந்து பெற்ற 7 வட்டார மொழி குர்‍ஆன்களை ஏன் கலிஃபா உஸ்மான் எரித்தார்கள்?

தேதி: 21 Oct 2020


இதர குர்-ஆன் ஆய்வுக்கட்டுரைகள்

குர்-ஆன் பக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்