Answering PJ: இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் "பேதுரு"
(பிஜே அவர்களின் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்திற்கு ஈஸா குர்ஆன் மறுப்பு)
"இயேசுவிற்கு மனிதர்களை சரியாக மதிப்பிடத் தெரியவில்லை, தனக்குப் பின் கிறிஸ்தவத்தை தலைமை தாங்க பேதுருவை இயேசு நியமித்தது சரியானது அன்று" என்று "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தில் பிஜே அவர்கள் கேள்வியை எழுப்புகிறார்.
பிஜே அவர்களது கணிப்பு தவறானது என்றும், ஆதாரமற்றது என்றும் என் முதல் கட்டுரையில் விளக்கினேன். இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் இருந்தார்கள் என்று கூட தெரிந்துக்கொள்ளாமல் பிஜே அவர்கள் கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கிறார். பிஜே அவர்களின் இந்த குற்றச்சாட்டிற்கு என் முதல் பதிலை கீழ் கண்ட கட்டுரையில் படிக்கலாம்.
பாகம் 2
இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் "பேதுரு"
இந்த கட்டுரையில், "இயேசு நியமித்த நேர்த்தி மிகு தலைவர் பேதுரு " என்ற தலைப்பில் பதில் அளிக்கிறேன். பேதுருவை தலைவராக இயேசு நியமித்தது மிகவும் சரியான மதிப்பிடல் என்பதை இக்கட்டுரையில் விளக்குகிறேன். ஆதாரமே இல்லாமல், பேதுருவை விட சிறந்த சீடர்கள் இயேசுவிற்கு 9 பேர் இருந்தார்கள் என்று பிஜே அவர்கள் சொன்னது தவறானது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.
பிஜே அவர்கள் எழுதியது:
பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்தில் நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். ( மத்தேயு 16:19)
பேதுருவை விடச் சிறந்த சீடர்கள் ஒன்பது பேர் இருக்கும் போது பேதுருவைச் சரியாக எடை போடாமல் அவனிடம் பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோலை வழங்கியது கடவுள் செய்யக் கூடியதா? இயேசு கடவுளாக இருக்க முடியாது என்பதை இதிலிருந்து ஐயமற அறியலாம்.
1. பேதுருவை தயார்படுத்திய இயேசு:
இயேசு தன் ஊழிய ஆரம்ப காலத்திலிருந்தே பேதுருவையும், யோவானையும், அவன் சகோதரன் யாக்கோபையும் பல முக்கியமான சந்தர்பங்களில் தன்னோடு கூட அழைத்துச் சென்றார். அற்புதங்கள் செய்யும் போது, இவர்களை தன்னோடு அழைத்துச்சென்றார்.
a) இயேசு பேதுருவை தன் சீடனாக அழைக்கும்போதே "கல்" என்ற பொருள் வரும் "கேபா" என்ற பெயரை வைத்தார். பெயருக்கு ஏற்றார் போல் எது நடந்தாலும் அசையாமல் உறுதியாய் இருக்கும்படி இயேசு பெயரை மாற்றுகிறார்.
யோவான் 1:42 பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து, நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.
b) ஒரு ஜெப ஆலைய தலைவனின் மகள் மரித்த செய்தி கேட்டவுடன் , இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்துக்கொண்டு சென்று அற்புதம் செய்தார் (மாற்கு 5:35-42, லூக்கா 8:49-56). இந்த மூவர் தான் இயேசுவிற்கு பிறகு எருசலேம் சபைக்கு தலைமை தாங்கி வந்தனர்.
c) ஒரு முறை இயேசு இந்த மூவரை ஒரு உயர்ந்த மலைக்கு அழைத்துக்கொண்டுச் சென்று அங்கு அவர்கள் முன்பு "மறுரூபமானார்". மற்றும் எலியாயும், மோசேயும் இயேசுவோடு பேசியதை இவர்கள் கண்டார்கள். மட்டுமல்லாமல், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி "இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்கு செவிகொடுங்கள்" என்று சொல்லிற்று. (மாற்கு 9:2-10 , மத்தேயு 17:1-9, லூக்கா 9:28-36).
இந்த நிகழ்ச்சியை குறித்து பேதுரு சபைக்கு கடிதம் எழுதும் போது கூட, நாங்கள் கட்டுக்கதைகளை கேட்டு இப்படி ஊழியம் செய்யவில்லை, இயேசுவின் மகிமையை எங்கள் கண்களால் கண்டதால் பேசுகிறோம் என்று ஆணித்தரமாக எழுதுகிறார் (2 பேதுரு 1:16-18).
நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம் (2 பேதுரு 1:16-18)
இப்படியாக இயேசு தன் மகிமையை இந்த மூன்று முன்னணி சீடர்களுக்கு காட்டினார்.
d) எல்லா சீடர்களுக்கும் பிரதிநிதியாக பேதுரு இருக்கவேண்டும் என்று இயேசு கருதினார் . சில சயமங்களில் எல்லா சீடர்களிடம் கேள்விகள் கேட்பதற்கு பதிலாக, பேதுருவிடம் இயேசு கேள்விகள் கேட்கிறார்.
பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி , நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? (மத்தேயு 26:40) & (மாற்கு 14:37)
அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து, நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம் பண்ணுங்கள் என்றார்(லூக்கா 22:8)
தேவ தூதனும் அப்படியே சொன்னான்: இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை அறிவிக்கும் போது, தேவ தூதன், பேதுருவின் பெயரை தனியாக குறிப்பிடுவதை காணலாம்.
நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய்,உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச்சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச்சொல்லுங்கள் என்றான். (மாற்கு 16:7)
e) கெத்சமனே தோட்டத்தில் கூட இந்த மூன்று சீடர்கள் மிகவும் நெருங்கி இருக்கவேண்டும் என்று இயேசு விரும்பி, மற்ற சீடர்களை தூரமாக இருக்கவைத்து, இந்த மூன்று சீடர்களை மட்டும் தன்னோடு வரும்படி, ஜெபிக்கும்படி இயேசு சொல்லியுள்ளார்.
அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்சமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; பேதுருவையும், செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார். (மத்தேயு 26:36-37)
f) கடைசியாக தன் சபையை மேய்க்கும் பொறுப்பை பேதுருவிடம் இயேசு தருகிறார்
அவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி; யோனாவின்குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார்.அதற்கு அவன், ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர், என்ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி, யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னைநேசிக்கிறாயா என்றார், என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக்கேட்டபடியினாலே பேதுரு துக்கப்பட்டு, ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான்உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு, என் ஆடுகளை மேய்ப்பாயாகஎன்றார்(யோவான் 21:15, 17).
இப்படியாக இயேசு பேதுருவை பல முக்கியமான சமயங்களில் தன்னோடு வைத்துக்கொண்டு, பேதுருவை தயார்படுத்தினார். பேதுருவை மட்டுமல்ல யோவானையும், யாக்கோபையும் அப்படியே தயார் படுத்தினார், ஆனால், பேதுருவிடம் அதிக பொறுப்பை ஒப்படைத்தார்.
ஆனால், பிஜே அவர்கள் இதைப்பற்றியெல்லாம் ஒன்றும் தெரிந்துக்கொள்ளாமல், ஒரு நிகழ்ச்சியில் இயேசு பேதுருவை கடிந்துக்கொண்டதை மிகப்பெரிய குற்றமாக பாவித்து, பேதுரு தலைவன் பொறுப்பிற்கு தகுதியானவன் அல்ல என்று ஆதாரம் இல்லாமல் எழுதுகிறார். தவறே செய்யாதவன் தலைவன் இல்லை, தவறுகளை திருத்திக்கொள்பவன் தான் தலைவன் ஆவான்.
இயேசு பேதுருவை தலைவனாக மாற்றியது மட்டுமல்ல, ஒரு தலைவனுக்கு தேவையான குணங்கள் இயற்கையாக பேதுருவிடமும் இருந்தது, ஒரு துடிப்புள்ள தலைவனாக பேதுரு செயல்பட்டார், துன்ப நேரங்களில் முன் வரிசையில் நின்றார் இந்த பேதுரு.
பேதுருவின் தலைமைத்துவ குணங்கள் என்னவென்று சுருக்கமாக காணலாம்
a) மற்ற சீடர்களின் பிரதிநிதியாக பேதுரு தானே முன்வந்து பேசியுள்ளார்.
ஒரு தலைவனுக்கு இருக்கவேண்டிய குணங்களில் ஒன்று தன் நண்பர்களுக்காகவோ, தன் கூட இருப்பவர்களுக்காகவோ வாய்ப்பு கிடைக்கும் போது முதலாவது பேசி விவரங்களை தெரிந்துக்கொள்வது. இதை பேதுரு செய்துள்ளார். இயேசுவோடு 12 பேர் இருந்தாலும், அவர்களில் பல சந்தர்பங்களில் பேதுரு மற்றவர்களுக்காக பேசியுள்ளார்.
அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றான். (மத்தேயு 15:15)
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி, இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான். (மாற்கு 10:28)
இயேசு பொதுவாக எல்லா சீடர்களிடமும் கேட்கும் கேள்விகளுக்கு, பேதுரு தானே முந்திக்கொண்டு பதில் அளித்தார்.
அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். (மத்தேயு 16:15-16)
b) இயேசுவின் மீது திடமான நம்பிக்கை உள்ளவர் பேதுரு:
இயேசு ஒரு முறை "தன் மாம்சம் போஜனம் என்றும், தன் இரத்தம் பானமாக இருக்கிறது என்றும், இதை புசித்து, பானம் பண்ணுகிறவன்" என்றேன்றும் பிழைப்பான் என்று சொல்லும் போது, இது கடினமான உபதேசம் என்றுச் சொல்லி பல சீடர்கள் பின்வாங்கிப்போனார்கள், அப்போது இயேசு என்னை விட்டு போக மனதாக இருக்கிறீர்களா? என்று எல்லாரையும் கேட்டபோது, பேதுரு "ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே, நாங்கள் எங்கே போவோம், நீர் கிறிஸ்து" என்று அறிக்கையிட்டார். பல சீடர்கள் முறுமுறுக்கும் போது கூட,பேதுரு தன் நம்பிக்கையை வெளிப்படுத்தினார், மட்டுமல்ல, எல்லா சீடர்களுக்கு பதிலாக தானே பேசினார்.
அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள். அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். (யோவான் 6:66-69)
c) விசுவாச வீரர் பேதுரு:
ஒரு முறை சீடர்கள் படகில் செல்லும் போது, காற்று பலமாக அடிக்கும் நேரத்தில், இயேசு தண்ணீரில் நடந்து அவர்களிடத்தில் வரும்போது, நீர் இயேசுவானால் நானும் தண்ணீரில் நடக்கட்டும் என்று தைரியமாக சொல்லி, இயேசுவின் அனுமதி பெற்று தண்ணீரில் நடந்தவர் இந்த பேதுரு. அப்படி நடந்து வரும் போது, காற்றையும், அலைகளையும் கண்டு பயந்து மூழ்கும் போது, இயேசு பேதுருவை பிடித்து தூக்கி எடுத்து மறுபடியும் இருவரும் படகு வரை தண்ணீரில் நடந்து வந்தது, ஒரு சாதாரண மனிதனான பேதுருவின் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம் ஆகும்.
பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக்கட்டளையிடும் என்றான். அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக கடலின்மேல் நடந்தான். காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப்பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. (மத்தேயு 14: 28-32)
பேதுரு தண்ணீரில் நடந்தாலும், பிறகு சந்தேகப்பட்டு மூழ்கினார் இல்லையா? என்று கேட்கலாம். ஆனால், இயேசுவின் வார்த்தைகளை நம்பி தண்ணீரில் முதல் அடி எடுத்து வைப்பதற்கு எவ்வளவு அதிக விசுவாசம் வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் .
d) பேதுருவின் அதிக அன்பு, இயேசுவின் வருகையை புரிந்துக்கொள்ள தடையாக இருந்தது:
பேதுரு மற்ற சீடர்கள் போல இயேசுவின் மீது அதிக அன்பு வைத்து இருந்தார், இன்னும் சொல்லப்போனால, அவர்களை காட்டிலும் அதிகமாகவே அன்பு வைத்து இருந்தார், பேதுரு இயேசுவை "மேசியாவாகிய கிறிஸ்து" என்று நம்பியிருந்தார், ஆனால், அந்த மேசிய எப்படி மக்களுக்கு விடுதலையை கொடுப்பார் என்பதை அறிந்துக்கொள்ள வில்லை. அதனால், தான் இயேசு தன் மரணம், பாடுகளைப் பற்றி விவரிக்கும் போது, பேதுரு புரிந்துக்கொள்ளாமல், இயேசுவை தனியாக அழைத்து இப்படி உமக்கு நடக்ககூடாது என்று கடிந்துக்கொண்டார்.
இயேசுவின் மீதுள்ள அதிகமான அன்பு அவரை இப்படி பேசச்சொல்லியது, நாம் நேசிக்கும் நபர்களுக்கு ஒரு ஆபத்து வரும் என்று தெரிந்தால், நாம் என்ன செய்வோம்? அப்படியே ஆகட்டும் என்று சொல்வோமா? இல்லை அல்லவா? அது போலவே, உங்களுக்கு சிலுவை பாடு வேண்டாம், மரணம் வேண்டாம், உயிர்த்தெழுதலும் வேண்டாம் என்று அறியாமையினால் இயேசுவிடம் சொல்லும் போது, இயேசு பேதுருவை கடிந்துக்கொள்கிறார்.
சிலுவை மரணம் வேண்டாமென்றும், உயிர்த்தெழுதல் வேண்டாமென்றும் சொன்ன பேதுருவைப் பார்த்து, இயேசு "பின்னாகப்போ சாத்தானே, நீ தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்காமல், மனிதருக்கு ஏற்றதை சிந்திக்கிறாய்" என்று கடிந்துக்கொள்கிறார்.
அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். (மத்தேயு 16: 21-23)
ஆனால், பிஜே அவர்கள் இயேசு ஒரு முறை பேதுருவை கடிந்துக்கொண்டதை பெரிதுபடுத்தி "பேதுரு தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ள தகுதியானவர் இல்லை" என்று முடிவு செய்துவிட்டார்.
நாம் நம் பிள்ளைகளை கடிந்துக்கொள்வதில்லையா? ஒரு ஆசிரியர் தன் மாணவனை திட்டுவதில்லையா? நீங்கள் உங்கள் ஆசிரியரிடம் ஒரு அடி, அல்லது திட்டு வாங்கவில்லையா? அப்படி வாங்கினால், நாம் வாழ்க்கையில் விளங்காமல் போய்விடுவோமா? இல்லை பிஜே அவர்களே இல்லை, இன்று பெரிய பதவிகளில் இருக்கும் நபர்களை கேட்டுப்பாருங்கள், அவர்கள் எத்தனை முறை பெற்றோர்களால், ஆசிரியர்களால் கடிந்துக்கொள்ளப்பட்டார்கள் என்றுச் சொல்வார்கள். அவர்கள் வகுப்பில் பட்ட அந்த அவமானமே அவர்களை எப்படி நல்ல நிலைக்கு கொண்டுவந்தது என்று பெருமையாக சொல்லி இன்று சந்தோஷப்படுவார்கள். ஆனால், "இயேசு சிலுவையில் மரிக்கவில்லை, உயிர்த்தெழவில்லை" என்று ஓயாமல் 1400 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு இருக்கும் இஸ்லாமியர்களை இயேசு என்ன சொல்லிக்கொண்டு இருப்பார் என்று சிந்தித்துப் பாருங்கள்.
எனவே, ஒரு முறை இயேசு பேதுருவை கடிந்துக்கொண்டது ஒன்றும் பெரிய தவறில்லை.
e) இயேசுவை பாதுகாப்பதாக நினைத்து, வாளை எடுத்த பேதுரு:
இயேசுவிற்கு ஒரு ஆபத்து என்று வரும்போது, யுதர்கள் சிப்பாய்களோடு வந்து இயேசுவை கைது செய்யும் போது, வாளை எடுத்து ஒரு சிப்பாயின் காதை வெட்டியவர், இந்த பேதுரு. இவர் செய்தது தவறு என்று இயேசு சொன்னது உண்மையென்றாலும், 12 சீடர்கள் இருக்கும் போது, தன் தலைவனுக்கு ஒரு தீங்கு வரும் போது அதை எதிர்த்து நின்ற இந்த பேதுருவை இயேசு தன் சபைக்கு தலைமை தாங்க நியமித்தது ஒன்றும் ஆச்சரியமில்லையே!
அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர். அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலேபோடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார். (யோவான் 18:10-11)
இங்கு நான் பேதுரு செய்தது சரியானது என்று சொல்லவில்லை, ஆனால், உலகபிரகாரமாக பார்க்கும் போது தன் குருவிற்கு வரும் ஆபத்தை கண்டு பேதுருவினால் சும்மா இருக்கமுடியவில்லை என்று சொல்லவந்தேன்.
f) இயேசுவிற்கு என்ன நடக்கும் என்று அறிய ஆவலோடு நீதிமன்றம் வரை சென்றவர் இந்த பேதுரு:
சீமோன்பேதுருவும் வேறொருசீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால், இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான். பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச் சீஷன் வெளியே வந்து, வாசல் காக்கிறவர்களுடனே பேசி பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான். (யோவான் 18:15-16)
பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப்பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான். (மத்தேயு 26:58)
இயேசுவை யூத ஆசாரியர்கள் பிடித்துச் சென்ற போது, பேதுருவும் மற்ற சீடர்களும் ஓடிச்சென்றவர்கள் தான், ஆனால், பேதுருவும் இன்னும் ஒரு சீடனும் இயேசுவை கொண்டுச்சென்ற பிரதான ஆசாரியன் வீடுவரைக்கு சென்று முடிவு என்ன ஆகிறது என்று பார்க்க சென்றார்கள்.
மற்ற 9 பேர் ஓடிப்போனார்கள். இந்தச் செயல் மற்ற சீடர்களை விட பேதுருவும், இன்னொரு சீடனும் சிறிது முக்கியமானவர்களாக பிஜே அவர்களுக்கு தெரியவில்லையா? ஒரு வேளை இப்படி இயேசுவை விட்டு ஓடிப்போன 9 பேர் தான் தலைமை பொறுப்பிற்கு தகுதியானவர்கள் என்று பிஜே அவர்கள் கருதிவிட்டாரோ? இவர்களைத் தான் பிஜே அவர்கள் தன் புத்தகத்தில் பேதுருவை விட சிறந்த்வர்கள் என்று குறிப்பிடுகிறாரோ?
அப்படியானால், பேதுரு ஏன் இயேசுவை அங்கு மறுதலித்தார்? என்று கேட்கலாம். பேதுரு ஒரு மகான் இல்லை அவர் ஒரு மனிதர் தான். அவர் ஒரு மீனவர் தான். தன் குருவிற்கு ஒரு ஆபத்து என்று வரும் போது கூட, பயந்துக்கொண்டு தான் அவர் பிரதான ஆசாரியன் வீடு வரைக்கும் வந்து காத்துக்கொண்டு இருக்கிறார். தன்னை திடீரென்று ஒரு பெண் கண்டுபிடித்து நீயும் இயேசுவோடு இருந்தவன் என்று சொல்லும் போது, இயேசுவை மறுதலித்தார். இது தவறு தான், எப்படியாவது தப்பித்து போகவேண்டும் என்ற எண்ணத்தில் பேதுரு இந்த இடத்தில் "பொய் சொல்கிறார் ". ஆனால், மறுபடியும் அதை நினைத்து மனம் கசந்து அழுது திருந்திவிட்டார் இல்லையா? அது தான் முக்கியம்.
எந்த வாய் இயேசு எனக்கு தெரியாது என்று சொன்னதோ, அதே வாய் அதே எருசலேமில் பல ஆயிரம் மக்களுக்கு இயேசுவைப்பற்றி பிரசங்கம் செய்தது, முதல் பிரசங்கத்திலேயே 3000 பேர் இயேசுவை ஏற்றுக்கொண்டதாக அப்போஸ்தலர் நடபடிகள் சொல்கின்றது.
பிஜே அவர்களே, நீங்கள் பேதுரு எப்படி விழுந்தார் என்று பார்க்கிறீர்கள், ஆனால், இயேசு பேதுரு விழுந்து எழுந்த பிறகு என்ன செய்யப்போகிறார் என்று பார்த்தார். நீ குணப்பட்ட பின்பு என் மந்தையை மேய்ப்பாயாக என்று இயேசு பேதுருவின் எதிர்காலத்தைப் பற்றி சொல்கிறார்.
g) சபை பொறுப்பை பேதுருவின் கையில் கொடுத்த இயேசு:
பேதுரு சுருசுருப்பானவர், மற்ற சீடர்களை விட சிறிது அதிக பிரசங்கித்தனம் உள்ளவர் (முந்திரிக்கொட்டை என்று சொல்வோமே அதுபோல), விசுவாசத்தில் தீரர், தண்ணீரில் நடந்தவர், தன் குருவை காப்பாற்ற முன்வந்தவர், அதே நேரத்தில் அறியாமையினால் பேசும் போது, இயேசுவால் கடிந்துக்கொள்ளப்பட்டவர். இயேசுவோடு பல அற்புதங்கள் நடைபெறும் போது, அவரோடு இருந்தவர்.
நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள் என்று 12 சீடர்களை இயேசு கேட்டபோது, "நீர் ஜீவனுடைய தேவனுடைய குமாரன், கிறிஸ்து" என்று அறிக்கையிட்டவர் பேதுரு. இப்படிப்பட்டவரிடம் பரலோகத்தின் திறவுகோலை இயேசு கொடுப்பேன், என்று சொன்னது ஆச்சரியமில்லையே.
h) முதல் சுவிசேஷ கூட்டத்தில் பேசிய சுவிசேஷகர் பேதுரு:
இயேசு பரமேறிய பிறகு பெந்தகோஸ்தே நாளன்று, பல ஆயிரம் பேர் கூடி இருக்கும்போது, தான் பொய் சொன்ன அதே மக்களைப் பார்த்து, தைரியமாக எழுந்து நின்று, முதல் சுவிசேஷ கூட்டத்தில் பேசி, 3000 பேரை தேவனின் மந்தையில் சேர்த்த பெருமைக்கு சொந்தக்காரர் இந்த பேதுரு அல்லாமல் வேறு யார் இருக்கமுடியும்?
அப் 2:14. அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய், யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
அப் 2:23. அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.
அப் 2:24. தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.
அப் 2:41. அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
இப்பொழுது சொல்லுங்கள், பேதுரு ஒரு கோழையா? வீரனா? மக்கள் குழப்பத்தில் இருக்கும் போது, எழுந்து நின்று அவர்கள் குழப்பதை தீர்த்தார் இந்த பேதுரு. இது ஒரு தலைவனுக்கு இருக்கவேண்டிய தகுதியா இல்லையா? இவைகள் உங்களுக்கு தெரியவில்லையா பிஜே அவர்களே?
i) அரசர்களுக்கு, ஆசாரியர்களுக்கு முன்பாக தைரியமாக சாட்சி கொடுத்த பேதுரு:
பேதுரு யோவானோடு சேர்ந்து தேவாலயத்திற்கு சென்ற போது அங்கு ஒரு முடவன் நடக்க இயேசுவின் பெயரிலே அற்புதம் செய்து, பிறகு அதே தேவாலயத்தில் மிகவும் நீண்ட பிரசங்கம் செய்தார் ( அப்போஸ்தலர் நடபடிகள் அதிகாரங்கள் 3, 4).
யூதாஸுக்கு பதிலாக இயேசுவை கண்களால் கண்டவர் ஒருவர் சாட்சியாக வேண்டும் என்றுச் சொல்லி ஒரு சீடனை 11 பேரோடு சேர்த்துக்கொள்ள முயற்சி எடுத்தவர் இந்த பேதுரு (அப் 1:15-1:26 வரை).
பேதுருவையும் யோவானையும் ஆசாரியர்கள் கைது செய்து, விசாரிக்கும் போது பேதுரு தன் நம்பிக்கையை குறித்து மிகவும் தைரியமாக சாட்சி சொன்னார். இவரது தைரியத்தை குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஒரு பெண்ணுக்கு பயந்து பொய் சொன்ன அதே பேதுரு, இங்கு அரசர்களுக்கும், நீதிபதிகளுக்கும், ஆசாரியர்களுக்கும் முன் நின்று தைரியமாக சாட்சி பகருகின்றார். "ஆமாம், இயேசு உயிர்த்தெழுந்தார் " என்று சாட்சி சொல்கிறார். இதை தைரியம் என்று சொல்லாமல் வேறு என்னவென்றுச் சொல்வது. இதை பிஜே அவர்கள் கவனிக்கவில்லையோ?
அப் 4:13. பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.14. சொஸ்தமாக்கப்ட்ட மனுஷனன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது.
இன்னொரு முறை, ஆசாரியர்கள் இனி இயேசுவைப்பற்றி பேசக்கூடாது என்று கட்டளையிட்டபோது, பயப்படாமல், உனக்கு கீழ்படிவதை பார்க்கிலும் தேவனுக்கு கீழ்படிவது நல்லது என்று தைரியமாக பேசினார் இந்த பேதுரு.
அப் 5: 28. நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா. அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான்.29. அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும், மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.30. நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,31. இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்.32. இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம் . தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்.
எருசலேமில் மாத்திரம் அல்லாமல், சமாரியாவிற்கும் சென்று ஊழியம் செய்தார். பேதுரு மிஷனரி ஊழியராக லித்தா, யோப்பா நாடுகளுக்கும் சென்று வந்தார் (அப் 9, 10 அதிகாரங்கள் ). இன்னும் அவரைப் பற்றி சொல்லிக்கொண்டு போகலாம்.
கல்லை மாணிக்கம் ஆக்கும் இயேசு:
பைபிளை பொருத்தமட்டில், ஒரு மனிதன் பழைய ஏற்பாட்டு நபராக இருந்தாலும் சரி, புதிய ஏற்பாட்டு நபராக இருந்தாலும் சரி, அவனை தேவன் தெரிந்தெடுக்கும் போது, அவன் பூரண குண லட்சணங்கள் உடையவனாக, தகுதி உடையவனாக இருப்பதில்லை, தேவன் அவனை அழைத்து தன் வேலைக்காக அவனை தகுதிப்படுத்தி, கற்றுக்கொடுக்கவேண்டிய பாடங்களை கற்றுக்கொடுத்து, பயன்படுத்திக்கொள்கிறார். இதே போலத்தான் பேதுருவும், கோழையாகவும், சிந்திக்காமல் சீக்கிரத்தில் பேசுகிறவராகவும் இருந்தார், இயேசுவை மறுதலித்தார், இருந்தாலும் அவரையே இயேசு பயன்படுத்திக்கொண்டார். இதோ இன்று நம்முன் "கிறிஸ்தவம் இயேசுவின் தெரிந்தெடுப்பு மிகச்சரியானது என்று சாட்சி பகருகின்றது". இதற்கு தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்த பேதுருகூட ஒரு காரணம் என்றுச் சொன்னால், அது மிகையாகாது.
முடிவுரை:
கடைசியாக, பிஜே அவர்களே உங்கள் கணிப்பு தவறு, இயேசுவின் தெரிந்தெடுப்பு தான் மிகச்சரியானது என்பதை இதுவரை நாம் பார்த்த விவரங்களிலிருந்து அறிந்துக்கொள்ளலாம்.
பிஜே அவர்களுக்கு ஒரு சவால்: உங்கள் கணிப்பு சரியானது என்றும், பேதுருவைத் தவிர மற்ற சீடர்கள் 9 பேர் (உங்கள் கணக்குப்படி) தலைமை பொறுப்பிற்கு தகுதியானவர்கள் என்று நிருபியுங்கள். பேதுரு தான் மிகச்சரியானவர் என்பதை நான் விவரித்தேன், என் பங்கு முடிந்துவிட்டது, உங்கள் பங்கு உள்ளது அதை நிருபித்து, உங்கள் நிலையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
இயேசு பேதுருவை தலைவனாக மாற்றுகிறேன் என்றுச் சொல்லி, மற்ற சீடர்களை குறைவாக மதிப்பிடவில்லை, இதற்கு பதிலாக "உங்களில் தலைவனாக இருக்கவிரும்புகிறவன் மற்றவர்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று சொல்லி எச்சரித்தார் ". இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக தானே சீடர்களின் கால்களை கழுவினார். தன்னை ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விட்டுச்சென்றார் (இயேசு(கடவுள்) சீடர்களின் கால்களை கழுவலாமா? என்ற தலைப்பில் பிஜே அவர்கள் முன்வைத்த ஒரு கேள்விக்கு என் பதிலை மற்றுமொரு கட்டுரையில் விவரிக்கிறேன்.)
மற்ற சீடர்களும் பேதுருவின் தலைமையை மிகவும் ஆனந்தமாக ஏற்றுக்கொண்டு அவரோடு கூட சேர்ந்து ஊழியம் செய்தார்கள்.
இன்று இஸ்லாமுக்கு சவால் விட்டு வீரநடை போட்டுக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம் இயேசு என்றுச் சொன்னால், அதன் மிது தலை நிமிர்ந்து நிற்கும் தூண்கள், அவரது சீடர்களாகிய அப்போஸ்தலர்கள் ஆவார்கள். அவர்களில் ஒரு தூண் தான் பேதுரு என்பவர். கிறிஸ்தவம் இன்று ஒரு ஆலமரம் போல மிகப்பெரிய மரமாகி எல்லாருக்கும் நிழல்கொடுத்துக்கொண்டு இருக்கிறதென்றால், இதற்கு முதல் காரணம், அன்று இயேசு எடுத்த சரியான முடிவு தான் என்பதை தாழ்மையுடம் இஸ்லாமிய உலகிற்கு முக்கியமாக பிஜே அவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.
இதோடு பிஜே அவர்களின் "இயேசுவிற்கு மனிதர்களை மதிப்பிட தெரியவில்லை " என்ற தலைப்பிற்காக என் பதில்களை முடித்துக்கொண்டு, என் அடுத்த பதிலை சந்திக்கும் வரை கர்த்தருடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக என்று கூறி முடிக்கிறேன்.
பிஜே அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும்
மூலம்: http://isakoran.blogspot.in/2008/02/answering-pj.html