101 காரணங்கள் - முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று

கிறிஸ்தவர்கள்  கருதுவது ஏன்? என்ற கட்டுரைக்கு இஸ்லாமியர்கள் அளித்த மறுப்பும் எங்கள் பதிலும்

TNTJ (கோவை யூசுப்) விற்கு பதில் 1

"முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி" என்று கிறிஸ்தவர்கள் கருதலாம் என்று அனுமதி அளித்த TNTJ

முன்னுரை: நான்  "101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?" என்ற பெயரில் ஒரு கட்டுரையை (10 பாகங்களாக) பதித்து இருந்தேன்.  இந்த கட்டுரையைப் படித்த TNTJ  இஸ்லாமிய அமைப்பு, நான் முன்வைத்த  101 காரணங்களுக்கு பதில் சொல்லாமல்,  தங்களுடைய பாணியில் ஒரு கேள்வியை என்னிடம் கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள்.  இப்போது அவர்கள் வெளியிட்ட வீடியோ பற்றியும், அவர்கள் கேட்ட கேள்விக்கான பதிலையும் காண்போம்.

முஹம்மதுவை கள்ளத்தீர்க்கதரிசியாக கருத கிறிஸ்தவர்களுக்கு அனுமதி அளித்த கோவை யூசுஃப் அவர்கள்

1)   கோவை யூசுஃப் அவர்களின் வீடியோ விமர்சனம்

என் கட்டுரையை படித்த "தமிழ் நாடு தௌஹித் ஜமாத்" என்ற இஸ்லாமிய அமைப்பு ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில் கோவை யூசுஃப் என்ற இஸ்லாமிய சகோதரர் பேசியிருந்தார்.  நான் முன் வைத்த 101 காரணங்களுக்கு அவர் பதில் அளித்து இருப்பார் என்று எதிர்ப்பார்த்து ஆவலாக அந்த வீடியோவை பார்த்தேன். ஆனால்,  நான் முன்வைத்த 101 காரணங்களில் ஒரு காரணத்திற்கும் அவர் பதில் அளிக்கவில்லை. இதற்கு பதிலாக, என்னிடம் ஒரு கேள்வியை கேட்டு இருந்தார். இதே கட்டுரையின் பிற்பகுதில்  அவர் கேட்ட கேள்விக்கு நான் பதிலை கொடுத்துள்ளேன்.  இப்போது இந்த வீடியோவில் அவர் பேசிய சில விவரங்கள் பற்றி சுருக்கமாக காண்போம்.

அ) TNTJயின் கப்பல் நடுக்கடலில் மூழ்கிவிட்டதா?

கோவை யூசுஃப் அவர்கள் பேசிய இந்த வீடியோவை வாசகர்கள் பார்க்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்:

https://www.facebook.com/photo.php?v=600861996670708&set=vb.100002407408653&type=2&theater

இந்த வீடியோவின் ஆரம்பமுதலே, யூசுஃப்பின் முகத்தில் ஒரு சோக ரேகை படர்ந்து இருந்ததை நாம் காணமுடியும்.  பொதுவாக இஸ்லாமியர்கள் "இஸ்லாம் அபார வளர்ச்சி அடைந்துள்ளது, இதை நாம் கண்கூடாக காண்கிறோம்" என்று இஸ்லாமை பலவாறு புகழ்ந்து பேசுவார்கள், அப்படி பேசும் போது, அவர்களின் முகத்தில் ஒரு மகிழ்ச்சியை காணமுடியும். ஆனால், இந்த வீடியோவில் பேசிய யூசுஃப் அவர்களின் முகத்தில் ஒரு துக்கம் காணப்பட்டது, தாங்க முடியாத ஏதோ ஒரு வேதனை உள்ளத்தின் ஆழத்தில் அமைதியாக அவரை வாட்டுவதை காணமுடிந்தது. தங்கள் முஹம்மதுவின் உண்மை நிலையை மக்களின் முன்பு தகுந்த ஆதாரங்களோடு இந்த கட்டுரை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டதே என்ற வேதனையாக அது இருக்குமோ!

ஆ) மிரட்டுவதை விட்டுவிட்டு, முஹம்மதுவை மீட்க வழியை தேடுங்கள் TNTJ அமைப்பினரே

நாம் இஸ்லாமிய அறிஞர்களின்  வீடியோக்களை பார்க்கும் போது, அவர்கள் நன்றாக நடிப்பதை பார்க்கமுடியும்.  முக்கியமாக இதர மார்க்க மக்கள் பார்க்கும் வீடியோக்களாக இருந்தால், அவைகளில் முஸ்லிம்கள் மென்மையானவர்களாக தங்களை காட்டிக்கொள்வார்கள், அன்பானவர்கள் போல காட்டிக்கொள்வார்கள்.  ஆனால் இந்த வீடியோவில் நாம் பார்க்கும் போது, "எவ்வளவு தான் அவர் நடித்தாலும்,  அவரின் உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும் அந்த மிரட்டும் தன்மை, அவரை அறியாமலேயே வெளிப்பட்டுவிட்டது". அவர் ஐந்தாவது நிமிடத்திற்கு பிறகு பேசியதை பார்த்தால், அவர் கீழ்கண்ட விதமாக மிரட்டுவதை காணமுடியும்:

"ஒன்னு இப்ப நான் சொன்ன இந்த வீடியோக்களுக்கு பதில் தரனும், அப்படியில்லே என்றுச் சொன்னா, ... நீங்க சொல்லியிருக்கீங்க இல்லே.. வேதாகமத்திற்கு முரண்படுபவர் எப்படி இறைத்தூதராக இருக்கமுடியும் என்ற இந்த பதிவை நீக்கனும்.  நீக்கவில்லை என்றுச் சொன்னா, இன்னும் வந்து பயங்கரமா அடிவாங்கி.. இருக்கக்கூடிய கொஞ்ச நஞ்ச கிறிஸ்தவர்கள் கூட என்னடா இப்படி இருக்கு என்றுச் சொல்லி,  இஸ்லாமிய மார்க்கத்தை தழுவக்கூடிய ஒரு நிலமை ஏற்படும்"

மேற்கண்ட வார்த்தைகளைச் சொல்லி அவர் கிறிஸ்தவர்களை மிரட்டியுள்ளார். இவர்களின் இந்த மிரட்டும் குணம் என்பது இவர்கள் முஹம்மதுவிடமிருந்து கற்றுக்கொண்டது. முஹம்மதுவும் அப்படித்தான், இதர அரசர்களுக்கு மிரட்டல் கடிதங்கள் எழுதுவார் (பார்க்க:  ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (تسلم أسلم))

அருமையான TNTJ பெருமக்களே, மற்றவர்களை மிரட்டுவதை கைவிட்டுவிட்டு, முஹம்மதுவை எப்படி மீட்பது என்பது பற்றி சிந்தியுங்கள்.  முஹம்மதுப் பற்றி குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களின் ஆதாரங்களின் படி, அனேக குற்றச்சாட்டுக்கள் கிறிஸ்தவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளதே! இதற்கு பதில் எப்படிச் சொல்லலாம், முஹம்மதுவை எப்படி காப்பாற்றலாம் என்று சிந்தியுங்கள். இதர மார்க்கத்தாரை மிரட்டுவது உங்களுக்கு பயனளிக்காது.

எங்கள் உயிரினும் மேலான இயேசுவை நீங்கள் விமர்சிக்கிறீர்கள், பைபிள் வசனங்களுக்கு  உங்கள் சொந்த விளக்கங்களை கொடுக்கிறீர்கள்.  உடனே உங்கள் பதிவுகளை நீக்குங்கள் என்று நாங்கள் மிரட்டுகின்றோமா? உங்களை மிரட்டுவதினால் என்ன பயன் சொல்லுங்கள்! எனவே, உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் பதில்களைச் சொல்கிறோம். உங்கள் விளக்கத்தையும் எங்கள் விளக்கத்தையும் படிக்கும் வாசகர்களுக்கு உண்மை விளங்கும் போது, அது நல்ல பயனைத் தரும். எனவே, பதிவுகளை நீக்குங்கள் என்று  உங்களைப்போல் நாங்கள் மிரட்டுவதில்லை. ஆனால், இஸ்லாம் பற்றி தவறான விளக்கங்களைக் கொடுத்து இன்னும் இஸ்லாமுக்கு தலைவலியாக மாறாதீர்கள் என்று உங்களை எச்சரிக்கிறோம்.

இந்த வீடியோவில்  அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார், வீடியோவின் கடைசியில் இன்னொரு முறை தோன்றி கீழ்கண்டவாறு கூறுகிறார்:

"அதாவது வேதாகமத்திற்கு, நாங்கள் வந்து அதை இறைவேதம் என்று எடுத்துகுல, முஸ்லிம்களை பொருத்தவரைக்கும் யாரும் எடுத்துக்குல.  அதற்கு முரண்பட்டார் என்றுச் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளலே என்று கூட நீங்க சொல்லலாம். … இந்த வேதாகமத்திற்கு நம்பாத நாங்க முரண்படுவதில் பெரிய விஷயம் கிடையாது."

என்றுச் சொல்கிறார்.

TNTJ யின் இந்த வீடியோவின் படி, கிறிஸ்தவர்களின் வேதத்தை முஸ்லிம்கள் நம்புவதில்லையாம், எனவே அந்த வேதத்திற்கு முஹம்மது முரண்படுவதில் ஆச்சரியமில்லை   என்றுச் சொல்கிறார்கள். அதாவது, நான் எழுதிய அந்த கட்டுரையில் "பைபிளுக்கு எதிராக முஹம்மது நடந்துக்கொண்டார் என்று எழுதியது சரியானது தான்" என்று அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள். இதைத் தான் அந்த கட்டுரையின் ஒரு பகுதி சொல்கிறது (சில காரணங்கள் சொல்கிறது). ஆனால் அதே கட்டுரையில் இன்னும் அனேக காரணங்களையும் முன்வைத்துள்ளோம். அவைகள் பற்றியும் TNTJ தங்கள் கருத்தை கிறிஸ்தவர்களுக்கு சாதகமாக சொல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.

இ) முஹம்மதுவின் பெருமைக்கு பெருமை சேர்க்க உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

கிறிஸ்தவர்களை விமர்சித்து, அவர்களை மிரட்டி, உங்கள் பதிவுகளை நீக்குங்கள் என்றுச் சொல்வதை விட்டுவிட்டு, நாங்கள் முன்வைத்த 101 காரணங்களுக்கு தகுந்த விளக்கத்தைக் கொடுத்து, முஹம்மதுவின் பெருமைக்கு இன்னும் பெருமையை  சேர்க்க முயற்சி எடுங்கள்.

உங்களுக்கு நாங்கள் ஒரு அருமையான வாய்ப்பை கொடுத்து இருக்கிறோம். கோர்வையாக 101 காரணங்களை கொடுத்துள்ளோம், பட்டியலிட்டு இருக்கிறோம். இவைகளுக்கு ஆதாரமாக குர்-ஆன் வசனங்கள், ஹதீஸ்கள்,  முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திர ஆதாரங்கள், பைபிள் வசனங்கள் என்று அனேக ஆதாரங்களை கொடுத்துள்ளோம். எனவே, இவைகளை அடிப்படையாகக் கொண்டு, நீங்கள், ஒவ்வொரு காரணத்திற்கும் உங்கள் பதிலை கொடுத்து, எதிர் வரும்  ஆபத்திலிருந்து முஹம்மதுவை காத்துக்கொள்ளுங்கள். வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால், ஏற்கனவே புகழப்பட்டவராக இருக்கும் உங்கள் இறைத்துதருக்கு மேன்மேலும் பெருமையை சேர்க்கும் வேலையைச் செய்யுங்கள்.

எங்கள் கட்டுரையையும், உங்கள் பதில்களையும் படிக்கும் கிறிஸ்தவர்கள் சிந்திப்பார்கள். மேலும், உங்கள் பதிலுக்கு மேலதிக பதில்களாக நாங்கள் தரும் விவரங்களையும் மக்கள் சரிப்பார்த்து, ஒரு நல்ல முடிவிற்கு வருவார்கள்.  ஆக, உங்கள் கைகளில் கொடுக்கப்பட்ட அருமையான இந்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள். இஸ்லாமுக்கு உபயோகமானதைச் செய்யாமல், கிறிஸ்தவர்களை இப்படி மிரட்டிக்கொண்டு இருந்தால் உங்களுக்கு எந்த பயனுமில்லை என்பதை மிகவும் தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈ) மக்களை திசைத் திருப்பும் TNTJ

இந்த வீடியோவை கவனமாக பார்த்தால்,  "முஹம்மது பைபிளுக்கு எதிராக நடந்துக்கொண்டார், ஆகையால் அவர் இறைத்தூதர் இல்லை" என்று மட்டும் நான் சொன்னதாக அவர் கூறுகிறார்.  இது தவறு, முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் ஒரு கள்ள நபி என்று கருதுவதற்கு 101 காரணங்களை ஆரம்ப பதிவாக முன்வைத்துள்ளேன். அவைகளில் அனேக பிரிவுகள் உள்ளன, உதாரணத்திற்கு கீழ்கண்ட பிரிவுகளைச் சொல்லலாம்:

  • முஹம்மது பைபிளுக்கு முரண்படுபவர்
  • முஹம்மது மோசேயின் 10 கட்டளைகளை மீறி நடந்தவர் (காரணங்கள் 59 லிருந்து 68 வரை)
  • பைபிளின் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரையுள்ள அனைத்து புத்தகங்களின்படியும் முஹம்மது கள்ள நபியாவார் (காரணங்கள் 91 லிருந்து 101 வரை)
  • இது மட்டுமல்லாமல், முஹம்மதுவின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரின் போதனைகள், குர்-ஆன் வசனங்கள், அவரின் போதனைகளில் உள்ள விஞ்ஞான பிழைகள், அடிப்படையற்ற கட்டுக்கதைகள், உளரல்கள் என்று அனேக தலைப்புகளில் அனேக காரணங்களை கொடுத்து இருக்கிறோம்.

ஆக, கோவை யூசுஃப் அவர்கள் வெறும் முதல் காரணத்தை எடுத்துக்கொண்டு பேசியிருக்கிறார். குறைந்தபட்சம் அவர் சொல்லிய அந்த முதலாவது காரணத்திற்காவது பதிலைக் கொடுத்தாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை.

101 கேள்விகளை அவருக்கு முன்பாக கிறிஸ்தவர்கள் வைத்தால், அதற்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு, நம்மிடம் ஒரு கேள்வியைக் கேட்டு, "இந்த ஒரு கேள்விக்கு  பதில் சொல்லவில்லையானால்,  உங்கள் கட்டுரையை நீங்குங்கள்" என்று எங்களை மிரட்டுவது அறிவுடமையாக உள்ளதா? நம்முடைய கட்டுரையும், இவரது வீடியோவையும் பார்க்கும் வாசகர்கள் "என்ன இவர் மடத்தனமாக பேசுகிறார்? கிறிஸ்தவர்கள்  101 கேள்வியைக் கேட்டால், இவர் அவைகளுக்கு பதில் சொல்லாமல், ஒரே ஒரு கேள்வியை கேட்டுவிட்டு, உடனே அவர்களை மிரட்டுகிறாரே" என்று நினைக்கமாட்டார்களா?  

எனவே, TNTJ குழுவே, உங்களுக்கு அறிவித்துக்கொள்வது என்னவென்றால் "எங்கள் கட்டுரையை நாங்கள் நீக்கமுடியாது", உங்கள் கைகளில் கொடுத்துள்ள அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  உங்கள் பிரதிநிதி கோவை யூசுஃப் அவர்கள் சொல்லியது போல,  "இருக்கும் கொஞ்ச நஞ்ச கிறிஸ்தவர்கள் கூட, உங்கள் இந்த ஒரு வீடியோவை பார்த்து  இஸ்லாமை தழுவினால் அது உங்களுக்கு நல்லது தானே!". எனவே, உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.  

(ஆனால் உண்மையில் விஷயம் வேறு மாதிரியாக உள்ளது, நாங்கள் முன்வைத்த 101 காரணங்களை முஸ்லிம்கள் படித்து, முஹம்மதுவின் நபித்துவத்தின் மீது சந்தேகம் கொண்டு, இஸ்லாமை புறக்கணித்துவிடுவார்களோ   என்ற பயத்தினால், அவர் விஷயத்தை அப்படியே திருப்பிச் சொல்கிறார். இந்த வீடியோவை கூர்ந்து பார்ப்பவர்கள் இதனை அறிந்துக்கொள்ளலாம்).

உ) எங்கள் கட்டுரையின் பெயரையும், தளத்தையும் உச்சரிக்க பயப்படும் TNTJ

TNTJயின் பிரதி நிதி கோவை யூசுஃப் அவர்களின் முழு வீடியோவை பார்த்தால்,  அவர் மொட்டையாக பேசுவதை காணமுடியும். அதாவது

  • அவர் குறிப்பிடும் கட்டுரையின் பெயர் என்ன? அவர் முழு பெயரைச் சொல்லவில்லை.
  • அவர் எங்கள் கட்டுரையை எந்த தளத்தில் படித்தார்?
  • பேஸ்புக்கில் படித்தாரா? அப்படியானால் அவர் படித்த அந்த பக்கம் எது?
  • அல்லது ஈஸா குர்-ஆன் தளத்தில் படித்தாரா?
  • ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் படித்தாரா?

போன்ற விவரங்களை அவர் குறிப்பிட பயப்படுகிறார். ஏன் இந்த பயம்? விலாசம் இல்லாமல் எழுதுகிறார்கள் என்றுச் சொல்லும் இவர்கள், குறைந்தபட்சம் கட்டுரையைப் படித்த விலாசத்தையும் தெளிவாக குறிப்பிடப் பயப்படுவது ஏன்?

ஒருவேளை, இந்த கட்டுரையைப் படித்து முஸ்லிம்கள் இஸ்லாமை விட்டுவெளியேறிவிடுவார்கள் என்ற பயம் TNTJவிற்கு வந்துவிட்டதோ! காரணம் எதுவாக இருந்தாலும், இஸ்லாமின் அஸ்திபாரம் அசைக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பது தெளிவாக புரிகின்றது.

இதுவரை ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் சில ஆயிரத்திற்கும் மேலான கட்டுரைகள், விவாதங்கள், மறுப்புக்கள், இஸ்லாம் சம்மந்தப்பட்ட புத்தகங்கள் ஆங்கிலத்திலும், இதர மொழிகளிலும் பதியப்பட்டுள்ளது. TNTJகுழுவில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருந்தால், அவைகளுக்கு பதிலைத் தரலாம். அப்படி அவர்களால் பதில் தரமுடியவில்லையென்றால், TNTJவின் தள கட்டுரைகளை நீக்குங்கள் என்று நாங்கள் மிரட்டுவதில்லை.  அவர்களின் கட்டுரைகளையும், எங்களின் கட்டுரைகளையும்  படிப்பவர்கள் உண்மையை தானாகவே அறிந்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. ஆனால், இதே நம்பிக்கை அவர்களுக்கு இல்லை, ஆகையால் தான் கட்டுரையை நீக்குங்கள் என்று மிரட்டுகிறார்கள், அந்தோ பரிதாபம்.

குறைந்தபட்சம், என்னுடைய தமிழ் தளத்தில், 400க்கும் அதிகமாக தமிழ் கட்டுரைகள் பதியப்பட்டு இருக்கின்றன.  அவைகளை ஒவ்வொன்றாக படித்து இவர்கள் மறுப்பு எழுதலாம். இதையாவது இவர்கள் செய்வார்களா?

ஆக, இதுவரை, தமிழ் நாடு தௌஹித் ஜமாத்தின் பிரதிநிதி திரு கோவை யூசுஃப் அவர்கள் பேசிய வீடியோவின் உண்மை முகத்தைக் கண்டோம்.  அடுத்தபடியாக, அவர்கள் எங்களுக்கு முன்பாக வைத்த "கேள்விக்கு பதிலைக் காண்போம்.

(கட்டுரை மிகவும் நீண்டுவிடுகின்றது என்பதற்காக, இந்த கேள்விக்கான பதிலை தனிக்கட்டுரையாக  இரண்டாம் பாகமாக வெளியிடலாம் என்று நினைத்தேன். ஆனால், இதன் முதல் பாகத்தைக் கண்டுவிட்டு, மறுபடியும் தேவையில்லாமல், இன்னொரு வீடியோவை இவர்கள் வெளியிடுவார்கள். அவர்களின் பொன்னான நேரத்தை ஏன் வீணடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில், கட்டுரை நீண்டதாக இருந்தாலும் சரி, இதே கட்டுரையில் பதிவது என்று முடிவுசெய்து பதிக்கிறேன், பொறுமையோடு படியுங்கள். பொறுமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் இஸ்லாமின் உண்மை முகத்தைக் காண்பார்கள்.)

2) ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டச் சொன்ன இயேசு ஏன் தன் மறு கன்னத்தைக் காட்டவில்லை?

இப்போது இயேசுப் பற்றி கோவை யூசுஃப் அவர்கள்  கேட்ட கேள்விக்கு பதிலைக் காண்போம்.  அவர் கேட்ட கேள்வி இது தான்: ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டச் சொல்லி இயேசு போதித்தார். ஆனால், அதனை அவரே பின்பற்றவில்லை ஏன்? தன் போதனையை தானே பின்பற்றாதபடியினால் அவரை தேவக்குமாரன் என்று எப்படி கிறிஸ்தவர்கள் ஏற்கிறீர்கள்?

நம்முடைய பதில்: கோவை யூசுஃப் அவர்கள் கீழ்கண்ட வசனங்களை மேற்கோள் காட்டி கேள்வி எழுப்பினார்:

லூக்கா 6:29: 

உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.

யோவான் 18:22, 23:

இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.

இயேசு தன்னுடைய மலைப்பிரசங்கத்திலும் இதே விஷயத்தை போதித்துள்ளார். அதனை நாம் மத்தேயு 5ம் அத்தியாயத்தில் காணலாம்.

மத்தேயு 5:39

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.

இப்போது நாம் இதற்கான பதிலை கீழ்கண்ட தலைப்புகளில் காண்போம், அப்போது தான் இயேசு ஏன் கேள்வி கேட்டார் என்பது புரியும்:

1)   இயேசு போதித்த "மறு கன்னத்தைக் காட்டு" என்பதின் அர்த்தம் என்ன?

2)   ஒரு கிறிஸ்தவன் தன்னை தீமையிலிருந்து தற்காத்துக்கொள்ளாமல், தொடர்ந்து மற்றவர்களால் அடிவாங்கிக்கொண்டே இருக்கவேண்டுமா? இதையா இயேசு போதித்தார்?

இயேசு சொன்னவைகளின் உண்மையான அர்த்தத்தை அறியாததினால் தான் கோவை யூசுஃப் போன்ற இஸ்லாமியர்கள் தவறான விளக்கங்கள் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அ)   இயேசு போதித்த "மறு கன்னத்தைக் காட்டு" என்பதின் அர்த்தம் என்ன?

இயேசு சொன்ன வசனங்களில் ஒரு வசனத்தை மட்டும் தனியாக எடுத்து விளக்கம் தரக்கூடாது. அதைச் சுற்றியுள்ள இதர வசனங்களையும் நாம் பார்க்கவேண்டும். முக்கியமாக இயேசு மலைப்பிரசங்கத்தில் எப்படி இந்த வசனங்களை ஆரம்பிக்கிறார் என்பதை படிப்போம்:

மத்தேயு 5:38 லிருந்து 42ம் வசனங்கள் வரைக்கும்:

38 கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

39 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.

40 உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக் கொள்ளவேண்டு மென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.

41 ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.

42 உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.

இந்த மேற்கண்ட வசனங்களைத் தனிப்பிரிவாக பாவித்து இயேசு பேசுகின்றார். மத்தேயு 5:38ம் வசனத்தில் மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்ட அரசு சார்ந்த பழைய ஏற்பாட்டு சட்டத்தை இயேசு குறிப்பிட்டுவிட்டு, அதன் பிறகு 4 விஷயங்களை ஒவ்வொன்றாக கூறுகின்றார்.

  • ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு
  • வழக்காடி வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள விரும்புவனுக்கு, உன் அங்கியையும் கொடுத்துவிடு
  • ஒரு மைல் தூரம் வர பலந்தம் செய்தால், இரண்டு மைல் தூரம் போ
  • கேட்கிறவனுக்கு கொடு, கடன் கேட்பவனுக்கு கொடுக்க தயங்காதே

"கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்" என்பது அரசாங்கத்திற்கு மோசே மூலமாக தரப்பட்ட சட்டம். ஆனால், மக்கள் இதனை துர்பிரயோகம் செய்து, தனிப்பட்ட முறையில் பழிக்கு பழி வாங்க  பயன்படுத்திக்கொள்கிறார்கள். எனவே இயேசு முதலாவது அதை குறிப்பிட்டுவிட்டு, மேற்கண்ட நான்கு விஷயங்களை போதிக்கிறார்.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு

உன்னை ஒருவன் ஒரு கன்னத்தில் அறைந்தால், உடனே திருப்பி அவனை அறைந்துவிடாதே, பழிக்கு பழி வாங்கிவிடாதே என்ற அர்த்தத்தில் தான் இயேசு இதனை போதித்தாரே தவிர, கிறிஸ்தவர்கள் எப்போதும் நீதிக்காக, நியாயத்திற்காக குரல் கொடுக்காமல், அடி வாங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதற்கல்ல.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்றுச் சொன்னால், நீ எப்போதும் உன்னை தாழ்வாக எண்ணிக்கொண்டு, உன்னை அடிப்பவனின் கையில் முழுவதுமாக ஒப்புக்கொடுத்துவிட்டு, அடிவாங்கிக்கொண்டு இரு என்று பொருள் அல்ல. தனிப்பட்ட விதத்தில் நீ பழிக்கு பழி வாங்கவேண்டாம் என்பது தான் அதன் பொருள்.

தீயவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும் படி இயேசு வேறு ஒரு இடத்தில் கீழ்கண்டவிதமாக கூறுகிறார்:

மத்தேயு 10:16

16 ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும் புறாக்களைப்போல கபடற்றவர்களுமாய் இருங்கள்.

மேற்கண்ட வசனத்தில் எப்படிப்பட்ட ஆபத்து நமக்கு உண்டு, மேலும் நாம் எப்படி இருக்கவேண்டும் என்று இயேசு எச்சரிக்கின்றார். மறுகன்னத்தைக் காட்டு என்ற கட்டளைக்கு முஸ்லிம்கள் கருதும் பொருள் இருக்குமானால், மேற்கண்ட வசனத்தை இயேசு  கீழ்கண்டவாறு சொல்லியிருப்பார்.

"ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல இதோ நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், நீங்கள் ஓநாய்களுக்கு பலியாகிவிடுங்கள்"

ஆனால், இயேசு எச்சரிக்கையாக இருக்கும்படியாகச் சொல்கிறார். அதே நேரத்தில் பழிக்கு பழி வாங்காமல் கபடமற்றவர்களாகவும் இருங்கள் என்கிறார்.

எனவே, தங்களை தற்காத்துக்கொள்வது கிறிஸ்தவர்களின் கடமையாகும். இதன்படி பார்த்தால் மறுகன்னத்தைக் காட்டச் சொன்ன வசனத்தின் பொருள் புரிய ஆரம்பிக்கும். மேலும், தன்னை அறைந்தவனிடம் நியாயத்தின்படி நடந்துக்கொள் என்று இயேசு சொன்னவைகளில் எந்த தவறும் இல்லை. இயேசு தனக்குத் தானே முரண்படவும் இல்லை என்பது தெளிவாகும்.

வழக்காடி வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள விரும்புவனுக்கு, உன் அங்கியையும் கொடுத்துவிடு

நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கை சரி செய்துக்கொள்ள கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை:

ஒரு கிறிஸ்தவன் இன்னொருவனுக்கு  எதிராக தவறு செய்யும் போது, நீதிமன்றத்திற்கு வெளியே அந்த மனிதனோடு சமாதானம் செய்துக்கொள்வது சிறந்தது என்று இயேசு கூறுகிறார். இதே மத்தேயு 5ம் அதிகாரத்தின் வசனங்கள் 25, 26ல் இயேசு இதனை கூறுகிறார்:

மத்தேயு 5:25, 26

25 எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து.

26 பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

மேற்கண்ட வசனத்தில் தவறு செய்யும் கிறிஸ்தவன் எப்படி நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன்பு தன் எதிராளியோடு சமாதானம் அடையவேண்டும் என்று இயேசு சொல்கிறார். இதே போல, ஒரு கிறிஸ்தவனுக்கு எதிராக ஒருவன் வழக்கு தொடர்ந்தால், அதுவும் ஒரு சிறிய விஷயத்திற்காக (வஸ்திரத்திற்காக) வழக்கு தொடரும் போது,  அது பொய்யான வழக்காக இருந்தாலும் சரி, நீதிமன்றத்திற்குச் செல்லாமல், தன் அங்கியையும் கொடுத்துவிடு என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 5:40).  இந்த வசனத்தின் படி  கிறிஸ்தவனின் தவறு இல்லையானாலும், பழிக்கு பழி வாங்காமல், அங்கியையும் கொடுத்துவிடு என்று இயேசு கூறுகின்றார்.

அதாவது ஒரு கிறிஸ்தவன் பெரும்பான்மையான நீதிமன்ற வழக்கு பிரச்சனைகளை நீதிமன்றத்திற்கு வெளியேயே தீர்த்துக்கொள்வது நல்லது என்பதை இங்கு இயேசு குறிப்பிடுகிறார்.   கூடுமானவரை எல்லாரோடும் சமாதானமாக வாழ்வது எப்படி என்பதை தெரிவிக்கிறார். நீதிமன்றத்திற்குச் செல்வது தவறு இல்லை, ஆனால் சின்ன விஷயங்களுக்காக நீதிமன்றம் செல்வது சரியானது அல்ல என்பது தான் இங்கு கவனிக்கவேண்டியது. பொய்யாக தன் மீது வழக்கு தொடர்ந்த எதிரியை நண்பனாக்க முயற்சி செய்யவேண்டும், அதற்காக சிறிய நஷ்டத்தை நாம் (கிறிஸ்தவர்கள்) ஏற்கலாம் என்பது தான் இதன் அர்த்தம். எதிராளிக்கு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு, நடுத்தெருவில் நிற்கவேண்டும் என்பது இதன் அர்த்தமல்ல. ஒரு கிறிஸ்தவன், இயேசுவின் போதனையின் படி, மற்றவர்களைக் காட்டிலும் நன்மைச் செய்வதில் ஒரு படி மேலேயே இருக்கவேண்டும் என்பதாகும்.

நாம் அநீதியாக நடத்தப்படும் போது போராடக்கூடாது என்று இதனை நாம் புரிந்துக்கொள்ளக்கூடாது, இதற்கு பதிலாக, நம்மை அநீதியாக நடத்துபவரோடு முதலாவது சமாதானம் அடைய முயற்சிக்கவேண்டும், முடியாவிட்டால் நீதி கேட்டு நீதிமன்றத்திற்குச் செல்லலாம்.

மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்படியாகத் தான் இயேசு இந்த போதனைகளைச் செய்கிறார்.  

ஒரு மைல் தூரம் வர பலந்தம் செய்தால், இரண்டு மைல் தூரம் போ

ஒருவன் ஒரு மைல் தூரம் வர பலவந்தம் செய்தால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ என்று இயேசு சொன்னதின் அர்த்தமும் இது தான். ரோம இராணுவ வீரர்கள் யூதர்களை கட்டாயப்படுத்தி சுமை சுமந்துக்கொண்டு ஒரு மைல் தூரம் வரும்படி அழைப்பார்கள், அப்போது பற்களை கடித்துக்கொண்டு, வேண்டா வெறுப்போடும், கோபத்துடனும் மக்கள் அதனைச் செய்வார்கள். ஆனால், இயேசு இந்த இடத்தில், அவர்களுக்கு அறிவுரைக் கூறுகின்றார். அந்த இராணுவ வீரர்கள் உங்களின் நல்ல குணத்தைக் கண்டு வெட்கப்படும்படி, இரண்டு மைல் தூரம் செல்ல தயாராகிவிடுங்கள் என்றுச் சொல்கிறார். உண்மையாகவே, இந்த போதனையை மக்கள் கேட்டு, இரண்டு மைல்தூரம் செல்லாவிட்டாலும், மனதில் கோபம் கொள்ளாமல், அந்த ஒரு மைல் தூரம் முறுமுறுப்பில்லாமல் செல்வார்கள்.  எப்படிப் பார்த்தாலும், நம்மை துன்பப்படுத்துவர்களுக்கு எதிராக போரை தொடுக்காமல், பழிக்கு பழி வாங்காமல் நண்பர்களாக மாற்ற முயற்சிப்பது முதலாவது சிறந்த செயலாகும்.  சட்டத்தின் படி அவர்களை சந்திப்பது இரண்டாவது சிறந்த செயலாகும்.

கேட்கிறவனுக்கு கொடு, கடன் கேட்பவனுக்கு கொடுக்க தயங்காதே

கடைசியாக, தாழ்மை அடைந்து நம்மிடம் வந்து உதவி கேட்பவர்களுக்கு மறுக்காமல் கொடுங்கள் என்று இயேசு போதிக்கின்றார்.

ஆக, "மறு கன்னத்தைக் காட்டுங்கள்" என்ற போதனையானது, பழிக்கு பழி வாங்காதீர்கள் என்பதை சுட்டிக்காட்டுகின்றது. அதைத் தொடர்ந்து இதர நல்ல காரியங்களை இயேசு போதித்தார்.

கிறிஸ்தவன் தன்னை தற்காத்துக்கொள்வது சரியா?

ஒவ்வொரு கட்டளைக்கும் ஒரு எல்லையுண்டு. மேற்கண்ட விவரங்களை சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும். மேற்கண்ட "மறு கன்னத்தைக் காட்டுங்கள்" என்ற கட்டளையை இயேசு ஒரு அரசாங்கத்திற்கு தரவில்லை. தனிப்பட்ட மனிதனுக்குக் கொடுத்தார், ஒரு புதிய வாழ்வை வாழும் படியாக, ஒரு மேன்மையான வாழ்க்கையை வாழும்படியாக  இயேசு கற்றுக் கொடுத்தார். மக்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் பழிவாங்கிக்கொண்டு இருந்தால்,  அந்த சமுதாயத்தில் சட்டஒழுங்கு சீர்கெட்டுப்போகும்.  

விஷயம் இப்படி இருப்பதினால், கிறிஸ்தவர்கள் எப்போதும் விட்டுக்கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் இயேசு சொல்லவில்லை. சட்டத்தின் உதவியோடு பிரச்சனைகளை சமாளிக்கவேண்டும். உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், நம் வீட்டை வேறு ஒருவன் வந்து தன்னுடையது என்றுச் சொல்லி சண்டையிட்டால், சட்டத்தின் உதவியோடு, நீதிமன்றத்தின் உதவியோடு பிரச்சனைக்கு முடிவை காணவேண்டும். இப்படி செய்வதை விட்டுவிட்டு, சொந்தமாக நான்கு ரௌடிகளை வேலைக்கு அமர்த்தி அவனை தாக்கக்கூடாது, வன்முறையில் இறங்கக்கூடாது. மேலும் நாம் அநியாயமாக மற்றவர்களால் தாக்கப்படும் போது, உயிருக்கு ஆபத்து வரும் என்று நாம் அறியும் போது, முதலாவது அந்த ஆபத்திலிருந்து தப்பிக்க முயற்சி எடுக்கவேண்டும், அதன் பிறகு நிச்சயமாக சட்டத்தை அணுகவேண்டும், நாமே பழிக்கு பழி வாங்கக்கூடாது. ஆபத்தான சமயத்தில் அந்த இடத்திலிருந்து தப்பிக்க வழி பார்க்கவேண்டும், நம் எதிராளியைத் தாக்கினால் தான் நாம் தப்பிக்கமுடியும் என்று நிலை இருந்தால், அவனை தாக்கத்தான் வேண்டும்.  நம் உயிரை எடுக்க எவனுக்கும் இடம் தரக்கூடாது, சரீர பிரகாரமாக தாக்கப்பட இடம் தரக்கூடாது, தற்காப்பிற்காக சண்டையிடுவதில் தவறில்லை.

உன் பட்டயத்தை அதன் உறையில் போடு

இயேசுவை பிடிக்க சேவகர்கள் வருகிறார்கள், உடனே தன்னிடமுள்ள பட்டயத்தை எடுத்து பேதுரு (இயேசுவின் சீடர்) ஒரு வேலைக்காரனின் காதை வெட்டி விடுகின்றார். உடனே இயேசு அவனை சுகப்படுத்தி பேதுருவிடம், கீழ்கண்டவாறு கூறுகின்றார்:

மத்தேயு 26: 51-53

51 அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான்.

52 அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.

53 நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?

என்னை காக்கும்படி  நீங்கள் முயற்சி எடுக்கவேண்டாம், நான் வேண்டிக்கொண்டால், ஆயிரக்கணக்கான தேவதூதர்களை இறக்கி, இவர்களை அழிக்கமுடியும் என்று இயேசு சொல்கிறார். ஆனால், கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த கெத்சமனே தோட்டத்திற்கு வருவதற்கு முன்பு தான் இயேசு பட்டயம் இல்லாதவன் பட்டயத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினார். அதாவது இனி நான் உங்களை விட்டு செல்லப்போகிறேன், எனவே, உங்களை தற்காத்துக்கொள்ள தேவையானவற்றை எடுத்துக்கொள்ளுங்கள் என்று இயேசு கூறுகின்றார். மேலும், அந்த காலகட்டத்தில் ஒரு தனி மனிதன் பிரயாணப்பட்டுச் செல்லும் போது, மிருகங்களினால் ஆபத்து வரும், வழிப்பறி திருடர்களினால் ஆபத்து வரும், எனவே பட்டயத்தை சுய பாதுகாப்பிற்காக வைத்திருப்பதில் தவறு இல்லை.

மேலும், ஒருவனின் காதை வெட்டிய அந்த சீடனைப் பார்த்து, இயேசு " உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு" என்கிறார். அதாவது இந்த பட்டயத்தை வீசி எறிந்துவிடும், தூரமாக போட்டுவிடு என்றுச் சொல்லாமல், அதன் உறையில் போடு என்றுச் சொல்கிறார், உன் சுய பாதுகாப்பிற்கு அது உதவும். காதை வெட்டிய பிறகும், அந்த சீடனிடம் அந்த பட்டயம் இருக்கும்படி இயேசு பார்த்துக்கொள்கிறார்.  இதன் மூலம் அறிவது என்ன? சுயபாதுக்காப்பிற்காக ஆயுதத்தை வைத்திருத்தல் தவறான ஒன்று அல்ல என்பதாகும். ஆனால், வன்முறையினால் பட்டயத்தை எடுப்பவன், அதே பட்டயத்தால் மடிவான் என்பதையும் அவர் சொல்ல மறக்கவில்லை.

ஒரு கிறிஸ்தவன் எதிரிகளால் தனக்கு ஆபத்துவரும் என்று அறிந்தால், தற்காலத்தில் அரசாங்கத்திடம் அனுமதி கேட்டு, துப்பாக்கியை சட்டத்தின் அனுமதியோடு வைத்திருத்தல், எந்த வகையிலும் பைபிளுக்கு எதிரான ஒன்றல்ல. உண்மையாக தன் உயிருக்கு, தன் குடும்பத்தின் பாதுகாப்பிர்கு ஆபத்து வரும் போது, அந்த துப்பாக்கியை பயன்படுத்துவதில் தவறில்லை.

எனவே:

  • மறுகன்னத்தைக் காட்டு என்று இயேசு சொன்னது, சுயமாக பழிக்கு பழி வாங்கவேண்டாம் என்பதற்காகவாகும். முந்தைய வசனத்தை படித்தால், இதனை அறிந்துக்கொள்ளலாம்.
  • இயேசு தன்னை அறைந்தவனிடம் கேள்வி கேட்டது சரியானதுதான்.
  • கிறிஸ்தவன் தன்னை தற்காத்துக்கொள்வது சரியானது தான்.
  • நீதி நியாயத்திற்காக போராடுவதும், பேசுவதும், வழக்குகளை போடுவதும் சரியானது தான்.
  • அதே நேரத்தில் முடிந்தவரை மற்றவர்களோடு சமாதானமாக  வாழவும், நடந்துக்கொள்ளவும் முயற்சி எடுக்கவேண்டும், பழிக்கு பழி வாங்கக்கூடாது.
  • தான் சொல்வதை மற்றவர்கள் கேட்கவில்லை என்பதற்காக, அவர்களை சபிக்கவோ, ஆட்களை வைத்து அடிக்கவோ கூடாது. ஊழியத்திற்கு சீடர்களை அனுப்பும் போது, மக்கள் உங்களை ஏற்காவிட்டால், அவர்களின் ஊரைவிட்டு வந்துவிடுங்கள், உங்கள் கால்களில் படிந்த தூசியையும் உதறி தள்ளிவிட்டு வந்துவிடுங்கள் என்று இயேசு கூறுகின்றார்.

இதுவரை கண்ட விவரங்களின் படி பார்த்தால், இயேசு தான் போதித்த போதனையை தானே மீறி நடக்கவில்லை. தன்னை விசாரிக்கும் போது, காரணமில்லாமல் அடித்தவனைப் பார்த்து இயேசு "ஏன் அடித்தாய்?"  என்று கேள்வி கேட்டது சரியானதே ஆகும்.

இதோடு இந்த பதிலை முடிக்கிறேன். கோவை யூசுஃப் அவர்கள் அதிக விளக்கத்தை கேட்கும் பட்சத்தில், இன்னும் அதிகமாக இந்த தலைப்பு பற்றி எழுத நான் ஆவலாக உள்ளேன்.

இஸ்லாமியர்களே, நான் முன்வைத்த 101 காரணங்களுக்கு தெளிவான விளக்கத்தை தர முயற்சி எடுங்கள். 

இப்படிக்கு,

உங்கள் சகோதரன் – உமர்

மூலம்


உமரின் இதர கட்டுரைகள், மறுப்புக்களை படிக்க சொடுக்கவும்