2020 ரமலான் சிந்தனைகள் - 7

யாரிடத்தில் அன்பாயிருக்கிறோம்...

ரமலான் மாதத்தை ஒரு புனிதமான மாதமாக, தங்களுக்கு இறைவேதம் அருளப்பட்ட மாதமாக முஸ்லீம்கள் நம்புவதால், இம்மாதத்தில் அவர்களுடைய ஆன்மீக ஈடுபாடு மற்றும் செயல்கள் அதிகமாக இருக்கும் என்று நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அப்படி முஸ்லீம்கள் செய்யும் ஆன்மீகச் செயல்பாடுகளில்  அவர்களின் நபியாகிய முஹம்மதுவை நினைவு கூருதல் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ரமலான் மாதத்தில் அவர்களுடைய தொழுகை வேளைகளில், முஹம்மது எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை கேட்பவர் கண்களில் கண்ணீர் வருமளவுக்கு மிகவும் உருக்கமாக முஸ்லீம் இமாம்கள் விவரிப்பார்கள். அவர்கள் முஹம்மதுவின் பெயரைச் சொன்னதும் ”சல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம்” என்றோ அல்லது “இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாகட்டும்” என்றோ சொல்வதை நீங்கள் கவனித்திருக்கக் கூடும். முஹம்மதுவைப் பின்பற்றுவதற்கும், முஹம்மதுவின் பெயரைச் சொல்லும்போதெல்லாம் அவருக்காக முஸ்லீம்கள் வேண்டுவதையும் பார்ப்பவர்கள் அந்தளவுக்கு குர்-ஆனில் முஹம்மது பற்றி இருக்கிறது போலும் என்று ஒருவர் நினைத்துக் கொள்ளக் கூடும். ஆனால் உண்மையில் குர்-ஆனில் முஹம்மதுவின் பெயர் நான்கு இடங்களில் மட்டுமே வருகிறது. அவைகளைப் பற்றிப் பேசினால், முஸ்லீம்கள் மிகவும் சங்கடத்துக்குள்ளாகக் கூடும். முஹம்மதுவைப் பற்றி இழிவாகப் பேசும் எவரும் தப்பமுடியாது என்ற நிலையை நாம் பார்க்கிறோம்.  முஸ்லீம்கள் முஹம்மதுக்கு மிகவும் உயர்வான ஒரு கண்ணியமான இடத்தைக் கொடுக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

கிறிஸ்தவர்களாகிய நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காகச் செய்தவைகளை எந்தளவுக்கு நினைவுகூர்கிறோம் என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்போம்.  நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மூலமாக தேவன் செய்து முடித்தவைகளைப் பற்றியும்,  இயேசு கிறிஸ்து பற்றியும் பரிசுத்த வேதாகமம் மிகவும் தெளிவாக, அனைவருக்கும் புரியும் விதத்தில் சொல்கிறது. நாம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறோமா? நம் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவுக்கு எங்கே இடம் கொடுத்து வைத்திருக்கிறோம்? இயேசுவைப் பற்றி எவரேனும் இழிவாகப் பேசும்போது, குறைந்த பட்சம் அவர்களுக்காக ஜெபிக்கவாவது செய்கிறோமா. இயேசு ஒரு போதும் தனது சமாதானத்துக்காக ஜெபிக்கும்படி தன்னைப் பின்பற்றியவர்களிடம் சொல்ல வில்லை. மாறாக, “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்” ( யோவான் 14:27 ) என்று இயேசு சொன்னார்.  மேலும், “ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்” என்றும் சொல்லி இருக்கிறார்.

“நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” என்பது தான் இயேசு நம்மைப் பார்த்து கேட்கும் கேள்வி.

-அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 30th April 2020

Source: http://arputhaa.blogspot.com/2020/04/7.html


2020 ரமலான் சிந்தனைகள் பக்கம்

சகோ. அற்புதராஜ் சாமுவேல் பக்கம்