2020 ரமலான் சிந்தனைகள் - 3

ரமலான் நோன்பு - அறிந்ததும் அறியாததும் (2)

ரமலான் மாதத்தில் முஸ்லீம்கள் செய்ய விரும்புகிற, மற்றும் செய்யும்படி உற்சாகப்படுத்தப்படுகிற முக்கியமான சில செயல்களில், முழு குர்-ஆனையும் ஒரு முறையாவது வாசித்து முடித்துவிட வேண்டும் என்பது அவற்றில் ஒன்று ஆகும். இரண்டு நாள்களில், அல்லது மூன்று நாள்களில், அல்லது ஏழு நாட்களில், அல்லது 10 நாட்களில், 20 அல்லது 21 நாட்களில், அல்லது 30 நாட்களில் முழு குர்-ஆனையும் முழுமையாக வாசித்து முடிக்கவும், ஓதவும் முஸ்லீம்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அதற்கென பல குர்-ஆன் வாசிப்பு அட்டவணைகள் உண்டு. ஆயினும், குர்-ஆன் அரபி மொழியில் வாசித்து, ஓதினாலும் கூட அதன் அர்த்தம் அனைவருக்கும் புரியாது என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. கற்றறிந்த முஸ்லீம் அறிஞர்களுக்கும் புரியாத, அல்லது விளக்க முடியாத பகுதிகள் குர்-ஆனில் உண்டு என்பது சற்று ஆச்சரியமானதாக இருக்கலாம். ஆனால் அது உண்மை. 

முழு வேதாகமத்தையும் வாசித்து முடித்திருக்கிற கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதற்கு எந்த விதமான சாக்குப்போக்கையும் சொல்ல முடியாதென்றாலும், இது ஒரு கசப்பான உண்மை. வேதாகமம் வாசித்து புரிய முடியாத ஒரு சிக்கலான புத்தகம் அல்ல. மூன்று நாட்களில் முழு வேதாகமத்தையும் வாசித்து முடித்துவிட முடியும் என்று சொல்லுகிறார்கள். வாசிக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் போதும், வேதம் வாசிப்பது மிக சுலபம். வேகமாக வாசிப்பதினால் என்ன பலன் என்று நினைக்கலாம். பரிசுத்த வேதாகமம் ஜீவனுள்ள தேவ வார்த்தையாக இருப்பதினால், உடனடியாக இல்லையென்றாலும், கண்டிப்பாக அவை மிகுந்த பலனைக் கொடுக்கும். வேகமாக வாசிப்பதும், மிகவும் பொறுமையாக வாசிப்பதும் அவரவர் விருப்பம். கேள்வி என்ன வெனில், நாம் வேதாகமத்தை வாசிக்கிறோமா?  

நீங்கள் தான் அல்லது உங்கள் வாழ்க்கைதான் கிறிஸ்தவரல்லாதவர்கள் வாசிக்கும் வேதப் புத்தகம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

-அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 26th April 2020

Source: http://arputhaa.blogspot.com/2020/04/3.html


2020 ரமலான் சிந்தனைகள் பக்கம்

சகோ. அற்புதராஜ் சாமுவேல் பக்கம்