ரமலான் சிந்தனைகள் - 28: நமக்காக பரிந்து பேசி, தப்புவிக்க வல்லவர் யார்?

அல்லாஹ்வையும், இறுதி நாள் நியாயத்தீர்ப்பையும் நம்புபவர்களுக்கு, “நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது” என்று குர்-ஆன் 33:21 கூறுகிறது. முஸ்லீம்கள் கூடியமட்டும், அவர்களின் நபியான முஹம்மதுவைப் பின்பற்ற முயற்சிப்பதற்கு இது தான் காரணம். ஆயினும், இறுதி நாள் நியாயத்தீர்ப்பில், எவரும் தப்ப முடியாது என்றும், யாரும் யாருக்காகவும் சிபாரிசு பண்ண அல்லது பரிந்து பேச முடியாது என்றும் பல குர்-ஆன் வசனங்கள் கூறுகின்றன (குர்-ஆன் 2:48, 122,123, 254; 6:51, 70; 74:48). முஹம்மது அல்லது முஸ்லீம்களின் நபி ஒரு பரிந்து பேசுபவர் என குர்-ஆனில் எங்கும் சொல்லப்படவில்லை. மாறாக, அல்லாஹ்வின் தூதர் தன் பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்கவேண்டும் என குர்-ஆன் சொல்வதை குறைந்தது ஐந்து இடங்களில் காணலாம் (4:106; 40:55; 47:19; 48:2; 110:3). மேலும், அல்லாஹ்வின் தூதர் தன்னைப் பற்றிச் சொல்கையில், எனக்கோ என்னைப் பின்பற்றுபவர்களுக்கோ என்ன நடக்கும் என்று தெரியாது என்றும், தான் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே என்றும் சொல்வதை குர்-ஆன் 46:9ல் வாசிக்கிறோம். ஆயினும், இறுதி நாள் நியாயத்தீர்ப்பில் முஹம்மது தங்களுக்காக பரிந்து பேசுவார் என ஹதீஸ்களின் அடிப்படையில் முஸ்லீம்கள் நம்புகின்றனர். முஹம்மதுவின் பல வேண்டுதல்கள், குறிப்பாக அவருடைய வளர்ப்புத் தந்தை அபூ தாலிப், மற்றும் அவருடைய அன்னைக்காக பண்ணின வேண்டுதல்கள் கேட்கப்படவில்லை என்றே ஹதீஸ்கள் கூறுகிறது. மேலும், நரக அக்கினி பற்றி முஹம்மது மிகவும் பயந்தவராக இருந்ததாகவும், அதிலிருந்து தன்னைக் காப்பாற்றும்படி அல்லாஹ்விடம் வேண்டினதாகவும் ஹதீஸ்கள் கூறுகின்றன.

இயேசு பாவமற்றவர் என்பதைக் கூறும் பல வசனங்களை நாம் பரிசுத்த வேதாகமத்தில் வாசிக்கிறோம். “என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?” என்று இயேசு பகிரங்கமாக தன்னை எதிர்த்த யூதர்களிடம் கேட்ட போதும், அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. இயேசுவின் மேல் குற்றஞ்சாட்டினவர்களால், பல பொய் சாட்சிகளைக் கொண்டுவந்தும் எதையும் நிரூபிக்க முடியவில்லை (மத்தேயு 26:59,60). இயேசுவைப் கண்டதும், “உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று யோவான் ஸ்நானகன் சொன்னார். பாவமில்லாதவராயிருந்த இயேசு நமக்காக சிலுவையில் பலியானார் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். அது மட்டுமல்ல, தம்மையே பலியாகக் கொடுத்த இயேசுவானவர் இப்பொழுதும் பாவமில்லாத பிரதான ஆசாரியராக நமக்காக பரிந்து பேசுகிறவராக பிதாவின் வலது பாரிசத்தில், பரலோகத்தில் இருக்கிறார் என வேதம் சொல்கிறது (எபிரேயர் 4:15; 7:25). மனத் தாழ்மையுடன் மற்றவர்களுக்கு ஊழியம் (சேவை) செய்யும்படி ஒரு நல்ல முன்மாதிரியை இயேசு நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார் என யோவான் 13:13-15; 1 பேதுரு 2:21 ல் வாசிக்கிறோம்.

இயேசுவின் வழியில் வாழ அழைக்கப்பட்டிருக்கிற மனிதர்களாகிய நாம், அதன்படி வாழவும், வாழ்ந்து மற்றவர்களுக்கு இயேசுவைக் காட்டவும் நம்மை ஒப்புக் கொடுப்போம். “நானே நல்ல மேய்ப்பன்” என்று சொன்ன இயேசுவைப் பின்பற்றுபவர்களின் கூட்டத்தில் இன்னமும் சேராதவர்களைக் கூட்டிச் சேர்க்கும் பொறுப்பை அவர் நம்மிடம் தான் கொடுத்திருக்கிறார். இம்மாபெரும் பணியில், நாம் செய்ய வேண்டியது என்ன என்று தேவன் நமக்கு வெளிப்படுத்தும்படி ஜெபிப்போம்.

- அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 21st May 2020

Source: http://arputhaa.blogspot.com/2020/05/28.html


2020 ரமலான் சிந்தனைகள் பக்கம்

சகோ. அற்புதராஜ் சாமுவேல் பக்கம்