2020 ரமலான் சிந்தனைகள் - 10

குர்-ஆனின் ஈசா (சுயேஇ) - இயேசு?

குர்-ஆனில் அதிகம் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்களில் மூன்றாவதாக வருபவர் ஈசா அல்-மசிஹ் (இயேசு கிறிஸ்து) ஆவார். மோசேயைக் குறித்து ஏறக்குறைய 500 வசனங்களும், ஆபிரகாமைப் பற்றி 240 வசனங்களும், மற்றும் இயேசுவைப் பற்றி சுமார் 90 வசனங்களும் குர்-ஆனில் உள்ளது. இயேசுவுக்கு முன் வாழ்ந்த மற்ற நபிமார்களின் வழியில் இயேசுவும் வந்ததாகவும், இன்ஜீல் (நற்செய்தி நூல்) எனப்படும் இறைவேதத்தை இயேசு மூலமாக அல்லாஹ் இறக்கினதாக குர்-ஆன் (55:27) கூறுகிறது. அந்த இன்ஜீல் புத்தகமானது, அதற்கு முந்தைய வேதமாகிய தவ்ராத் (மோசேயின் ஆகமம்) ஐ உறுதிப்படுத்துகிறதாகவும், நேர்வழி காட்டுகிறதாகவும் இருந்தது எனவும் குர்-ஆன் (5:25) ல் வாசிக்கிறோம். முந்தைய வேதங்களாகிய தவ்ராத்தையும், இன்ஜீலையும் உறுதிப்படுத்துவதாக குர்-ஆன் இருக்கிறது என குர்-ஆனில் பல இடங்களில் வாசிக்கிறோம். ஆபிரகாம் மற்றும் மோசே பற்றிய பதிவுகளில் குர்-ஆன் மற்றும் வேதாகமத்திற்கிடையே உள்ள சில ஒற்றுமைகளையும் பல வித்தியாசங்களையும் முன்பு பார்த்தோம். முந்தைய வேதங்களை உறுதிப்படுத்துகிறதா அல்லது அவற்றிலிருந்து வேறுபட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வது குர்-ஆன் ஐ வாசிக்கும் எவருக்கும், குறிப்பாக இந்நோன்பு நாட்களில் இறையச்சத்துடன் குர்-ஆன் வாசித்து ஓதும் எவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகில் இருந்த நாட்களில் , “வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; ...என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே” (யோவான் 5:39) என்று சொன்னார். பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கையில், பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் இயேசுவைக் குறித்து சொல்லியவை அனைத்தும் எப்படி இயேசுவில் நிறைவேறின என்று நாம் ஆச்சரியப்படுகிறோம். முந்தைய வேதங்களை உறுதிப்படுத்துவதாக குர்-ஆன் தன்னைப் பற்றி பல இடங்களில் சாட்சி கூறுகிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் அதை ஆராய்ந்து பார்க்கக் கடமைப் பட்டிருக்கிறோம். ஆகவே, அடுத்து வரும் சில நாட்கள் குர்-ஆனில் இயேசு பற்றி சொல்லப்பட்டிருப்பதை  என்னோடு கூட இணைந்து வாசிக்கவும், ஆராய்ந்து பார்க்கவும் உங்களை அன்புடன் அழைக்கிறேன். இதன் மூலம் எது சத்தியம் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.  “நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம்” என்று பெருமை பாராட்டின தம் இன மக்களிடம் பேசும்போது,  ”சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று ஆண்டவராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நாம் நினைவில் கொள்வோம் (யோவான் 8:32,33).

இயேசு யார்? என்பதைப் புரிந்து வாழவும், அதைப் பற்றி முஸ்லீம் நண்பர்களிடம் பேசவும்  இதை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் பரலோகத்தில் இருக்கிற பிதாவனவர் அருளும்படி ஜெபிக்கிறேன்.

- அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 3rd May 2020

Source: http://arputhaa.blogspot.com/2020/05/10.html


2020 ரமலான் சிந்தனைகள் பக்கம்

சகோ. அற்புதராஜ் சாமுவேல் பக்கம்