லூக்கா 22:36 ல் உள்ள பட்டயம் பற்றி ஒரு சிறு விளக்கம்

ஜேம்ஸ் அர்லண்ட்சன்

சுவிசேஷங்களில் இயேசு வன்முறையை ஆதரித்ததும், ஊக்குவித்தமும் உண்டா? குறைந்த பட்சம் நியாயமான முறையில் வன்முறையில் ஈடுபடுவதையாவது அவர் ஆதரித்ததுண்டா? அவர் தன்னுடைய உண்மையான சீடர்களை இதற்கென்று அழைத்தாரா? அவர் தன்னுடைய எல்லா சீடர்களிடமும் பட்டயங்களை வாங்கும்படி உண்மையாகவே கட்டளையிட்டாரா? அவர் இப்படி சொன்னதாக ஒரு வசனத்தைக் குறிப்பிடலாம்.

லூக்கா 22:36 சொல்லுகிறது.

அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.

இந்த வசனத்தை தனியாக நாம் படிக்கும் போது, வன்முறையும் பட்டயமும் சாத்தியமானவைகள் என்று இந்த வசனம் சொல்வதாக தெரிகிறது. எல்லா சீடர்களும் சென்று பட்டயங்களை கட்டாயமாக‌ வாங்கிக் கொள்ளவேண்டும் என்று இவ்வசனத்தில் காணப்படுகிறது. இயேசுவின் மரணம் மற்றும் அடக்கத்திற்கு பின் அவரில்லாமல் தனியாக உலகத்தை சந்திக்க வேண்டும் என அவர்கள் நினைத்தார்கள்.

எனினும், இந்த வசனத்தை தனியாக பிரித்துபடிக்காமல் அதன் பின்னணியத்தோடு படிக்கையில் அதன் பிரத்தியட்சமான அர்த்தம் என்னவாயிருக்கும்? உண்மையாக இயேசு ஒரு பட்டயத்தை உபயோகித்தாரா? மேலும் தன்னுடைய சீடர்கள் ஆளுக்கொரு பட்டயத்தை வாங்கிக்கொள்ள வேண்டும் என்று விரும்பினாரா?

லூக்கா 22:36ம் வசன‌ விளக்க உரை

சுமார் மூன்று வருடங்கள் அவர் எருசலேமுக்குள் வெளிப்படையான ஒரு வெற்றி பவனியாக நுழைவதை தவிர்த்தார் ஏனென்றால் அப்படி அவர் பரிசுத்த நகரத்திற்குள் கால் வைக்கும் போது பல நூறு வருடங்களுக்கு முன் ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டபடி (ஏசாயா 53:12) ஒரு சாதாரண குற்றவாளியின் மரணத்தை போல மரணம் அடைந்து தன் ஊழியத்தை நிறைவேற்ற வேண்டியிருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார் என்று லூக்கா 22:36 ன் சரித்திர பின்னணி தெளிவாக விளக்குகிறது. எனவே அவர் தன்னுடைய பணிகளை எருசலேமுக்கு வெளியே முடிக்க வேண்டியிருந்தது.

இறுதியாக தன்னுடைய தீர்க்கதரிசிகளை கொல்லுவதில் புகழ்பெற்ற அந்த நகரத்திற்குள் இயேசு நுழைகிறார் (லூக்கா 13:33-34). அவர் தன்னுடைய கைது, விசாரணை மற்றும் சிலுவையில் அறையப்படுதல் போன்றவைகள் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பே அவை எல்லாவற்றையும் பற்றி முன்னுரைத்திருந்தார். மதத்தலைவர்கள் அவரை இரக‌சியமாக கண்காணித்துக் கொண்டிருந்தார்கள் அவர் மீது பழி சுமத்துவதற்காக வஞ்சகமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் (லூக்கா 20:20). இந்த நேர்மையற்ற கேள்விகள் அவர் நகரத்திற்குள் நுழைவதற்கு முன் கேட்கப்பட்டிருந்தாலும், அந்த நெருக்கடியான நாட்களில் இப்படிப்பட்ட கேள்விகள் அதிகமாக கேட்கப்பட்டது. ஆனால் அவர்களுடைய எல்லா தந்திர வலைகளையும் தவிர்த்து அவர் ஆச்சரியமான விதத்தில் பதிலளித்தார். பிரச்சனைகளுக்கு நடுவிலும் ஒவ்வொரு நாளும் அவர் தேவாலயத்தில் பிரசங்கித்தார், ஜனங்கள் திரளாய் கூடிவந்தார்கள் ஜனங்களுக்கு பயந்ததினால் அதிகாரிகள் அவரை கைது செய்ய முடியவில்லை. பிறகு யூதாஸ், ஜனக்கூட்டம் இல்லாத போது தான், அவர்களுக்கு அறிவிப்பு கொடுப்பதற்கும், அவரைக் காட்டிக் கொடுப்பதற்கும் தானாகவே முன்வந்தான். (லூக்கா 22:1-6)

பஸ்கா பண்டிகை நெருங்கியிருந்த போது அவர் இறுதி போஜனத்தை ஆயத்தப்படுத்தும் படி தன்னுடைய சில சீடர்களுக்குச் சொன்னார். புதிய உடன்படிக்கையில் (லூக்கா 22:17-20) உலகத்தின் பாவத்திற்காக சிந்தப்படுகிற தன் இரத்தத்தையும் உடைக்கப்படுகிற தன் சரீரத்தையும் பிரதிபலிக்கிற ரொட்டியையும் திராட்சைரசத்தையும் அவர் உயர்த்திப்பிடித்தார். அப்படியிருக்கும்போது அந்த போஜனத்திலிருந்து யூதாஸ் நைசாக நழுவினான், அதிகாரிகளிடம் அவனுக்கு போகவேண்டியிருந்தது. ஏனென்றால் இயேசு வழக்கமாக ஒலிவ மலைக்கு சென்று ஜெபிப்பார் என்பதை அவன் அறிந்திருந்தான் (லூக்கா 21:37). அந்த இரவிலும் எந்த வித்தியாசமின்றி அப்படியே நடந்தது.

இப்பொழுது நாம் லூக்கா 22: 36ம் வசனத்தின் வசன பின்னணியை (Textual Context) கவனிப்போம். இயேசு தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இராத்திரியிலே கடைசி போஜனத்தை சாப்பிடுகிறார்.

லூக்கா 22:35-38 சொல்லுகிறது:

35 பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பின போது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.

36 அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக் கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.

37 அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவு பெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.

38 அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.

இதன் வசன‌ பின்னணி (Textual Context) குறைந்தது இரண்டு உண்மைகளை வெளிப்படுத்துகிறது. முதலாவதாக, வேவுபார்க்கிறவர்களும் அதிகாரிகளும் இயேசுவை எப்படியாவது சிக்கவைக்க வேண்டும் என்று தீவிரமாக இருந்த அந்த பதட்டமான‌ சில நாட்களில் எருசலேமுக்குள் நுழைவதற்கு முன் இயேசு தம்முடைய ஊழியத்தை வித்தியாசப்படுத்துகிறார். இயேசு எதற்காக தன்னுடைய சீடர்களிடம் பட்டயத்தைப் போய் வாங்கிக்கொள்ளுங்கள் என்றுச் சொன்னார் என்பதை புரிந்து கொள்ளுவதற்கு இந்த பதட்டமான‌ சூழ்நிலை ஏதாவது பங்கு வகிக்கிறதா? இந்தக் கேள்விக்கு கீழே பதிலளிக்கப்பட்டுள்ளது. ஏசாயா 53:12 ல் முன்னுரைக்கப்பட்டபடி தான் கைது செய்யப்படுவார் என்றும் அக்கிரமக்காரனைப் போல விசாரிக்கப்படுவார் என்பதையும் அவர் கூறினார். இதற்கும் பட்டயத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? குற்றவாளிகள் பட்டயங்களை தங்களோடு சுமந்து கொண்டிருப்பார்களா? இதுவும் கீழே விளக்கப்பட்டுள்ளது. பட்டயத்தை உபயோகப்படுத்தும் வன்முறையைக் காட்டிலும் ஏதோ ஆழமான அர்த்தம் இயேசுவின் மனதில் இருக்கும். அது என்ன?

இந்த வசனங்களின் பொருளை இரண்டு வகைகளில் புரிந்துக்கொள்ளலாம்.

முதலாவதாக‌, எழுத்தின் படி இவ்வசனத்தை படித்தால், “இயேசுவின் கடைசி மணித்துளிகளில் பட்டயங்களை பயன்படுத்தலாம்” என்று சொல்வது போல தோன்றும். இரண்டாவதாக, இதே வசனங்களை சரித்திர மற்றும் வசன பின்னணியத்தோடு படித்தால், “இயேசுவின் கடைசி மணி நேரத்தில் பட்டயங்களை பயன்படுத்தக்கூடாது” என்று சொல்வதாகத் தோன்றும்.

மேற்கண்ட வசனங்களின் உண்மையான பொருள் நிச்சயமாக "எழுத்தின் படியான பொருள்" இல்லை என்பது மட்டும் தெளிவு. முதலில், ஏன் இவ்வசனங்களின் பொருள் "பட்டயங்களை பயன்படுத்த வேண்டும்" என்ற எழுத்தின் படியான பொருளில் இல்லை என்பதை காண்போம். ஏன் லூக்கா 22:34-38 க்கும் கெத்சமனே தோட்டத்தில் கைது செய்யப்பட்ட (லூக்கா 22: 39-53) பகுதிக்கும் சரியாக பொருந்தாது என்பதை ஆராய்வோம்.

பட்டயங்களின் கொடூர உபயோகம் (Violent use of Swords)

இயேசு தன்னுடைய சீடர்களிடம் பட்டயங்களை வாங்கும் படிச் சொல்கிறார், அவர்கள் இரண்டு பட்டயங்களை காண்பித்தபோதோ அது போதும் என்கிறார். வசனங்களை புரிந்துக் கொள்வதில் முதல் முறையானது, "வசனத்தை அப்படியே படித்து எழுத்தின்படி புரிந்துக் கொள்வதாகும்". இவ்வசனங்களுக்கு “எழுத்தின்படி பொருள் கூறுதல்” பொருந்துவதாக இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

முதலாவதாக, ஒரு வெளிப்படையான கேள்வியை கவனிப்போம்:

இரண்டு பட்டயங்கள் எதற்கு போதுமானது?

காவலாளிகள் அவரை கைது செய்வதை தடுத்து எதிர்த்து போராடுவதற்கு அந்த இரண்டு பட்டயங்கள் போதுமா?

இது அரிதான காரணம் ஏனென்றால் இயேசு கைது செய்யப்படும்போது சீடர்களில் ஒருவன் (யோவான் 18:10 ன் படி பேதுரு) தன்னுடைய பட்டயத்தை எடுத்து பிரதான ஆசாரியனின் வேலைக்காரர்களில் ஒருவனுடைய (யோவான் 18: 10 ன் படி மல்குஸ்) காதை வெட்டினான். இயேசு பேதுருவிடம் பட்டயத்தை போடும்படி 'இம்மட்டும் போதும் நிறுத்துங்கள்" என்று கடுமையாக கூறுகிறார். பிறகு அவனுடைய காதை மறுபடியும் அவனுக்கு பொருத்தி அவனை சுகப்படுத்துகிறார் (லூக்கா 22: 49-51) . இரண்டு பட்டயஙகள் இயேசுவை கைது செய்வதை எதிர்த்து போராடுவதற்காக மட்டும் போதுமானதாக நிச்சயமாக‌ இருக்கமுடியாது.

இரண்டாவதாக, அந்த இரண்டு பட்டயங்கள் கைது செய்யவரும் அதிகாரிகளை எதிர்த்து, ஆயுதங்களை வைத்துக்கொண்டு போராடும் ஒரு அரசியல் சேனையாக மற்றும் இராணுவ ரீதியான‌ “இயேசு இயக்கத்தை" ஸ்தாபிப்பதற்கு போதுமானதா?

லூக்கா 22:52ல் இயேசு இந்த நோக்கத்தை மறுக்கிறார். அதிகாரிகள் அவரை பிடிக்க வந்திருக்கும் போது, "நீங்கள் தடிகளோடும் பட்டயத்தோடும் என்னைப் பிடிக்க வருவதற்கு நான் என்ன கலவர கூட்டத்தையா நடத்திக் கொண்டிருக்கிறேன்?" என்று கேட்கிறார். அவர் ஒரு கலவர கூட்டத்தை நடத்தவில்லை என்பது தான் இதற்கு பதில். எனவே, அவர் பிடிக்கப்பட்டார் கொண்டுச் செல்லப்பட்டார் (வசனம் 54).

எனவே லூக்கா 22:36ல் எழுத்தின்படியுள்ள விளக்கமாகிய‌ “பட்டயம் உபயோகப்படுத்தபடவேண்டும்” என்பது அதன் நீண்ட பின்னணியை ஆராய்ந்துப் பார்த்தால், இது ஒவ்வாத விளக்கமாக உள்ளது என்பதை அறியலாம். இரண்டு பட்டயங்களானது இயேசு கைது செய்வதை எதிர்த்து எந்தவித கலகம் செய்வதற்கோ அல்லது இயேசுவும் சீடர்களும் கெத்சமெனேத் தோட்டத்தில் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கோ போதுமாயிராது.

பட்டயம் பற்றி வசன பின்னணி ரீதியிலான விளக்கம் (Contextual meaning of the Swords)

பட்டயங்களை உபயோகிக்க வேண்டும் என்ற எழுத்தின்படியான விளக்கத்திற்கு முரண்பாடாக பின்வரும் விளக்கமானது அமைப்பில் இலகுவாக காணப்படுகிறது, அதனால் குழப்பத்தின் எல்லா பகுதிகளும் சரியாக இந்த விளக்கத்தின் மூலம் இணைக்கப்படுகிறது.

முதலாவது, இயேசு எருசலேமுக்குள் பிரேவேசிப்பதற்கு முன்னரே தன்னுடைய சீடர்களிடத்தில் அவர்களுக்கான தன்னுடைய ஊழியத்தின் நோக்கம் என்ன என்பதை நினைவு படுத்துகிறார் (லூக்கா 9:3; 10:1-17). இயேசு அவர்களோடு இருந்த காலக் கட்டத்தில் சீடர்களுக்கு அதிகமான பணப்பையும், சாமான் பையும் அல்லது அதிகபடியான இன்னொரு ஜோடி காலணிகளும் தேவைப்பட்டதா? என்று கேட்டால், "இல்லை" என்பது தான் பதிலாக இருந்தது. ஏனென்றால் ஜனங்கள் அவர்களிடத்தில் நட்பாக இருந்தார்கள்.

இயேசுவின் மீது, மதத்தலைவர்களின், அதிகாரிகளின் எதிர்ப்பு மூன்று வருடங்களாக சிறிது சிறிதாக பரவியது. இப்பொழுது அவர் எருசலேமில் இருக்கிறார், அவருடைய வார்த்தைகளாலேயே அவரை குற்றப்படுத்த வேண்டும் என்று முனைப்பாயிருந்த அதிகாரிகளின் கட்டுப்பாடான விரோதத்திற்கு உள்ளாயிருந்தார். அதிகாரிகள் இல்லாத போது இயேசுவிடம் அவர்கள் தங்கள் ஆட்களை வேவுபார்க்க அனுப்புவார்கள். எனவே சூழ்நிலையானது மிகவும் பதட்டமானதாக காணப்பட்டது - அந்த இரண்டு பட்டயங்கள் - பதட்டத்தை இன்னும் வெளிக்காட்டுகிறது. இயேசுவின் ஊழியம் தெளிவாக ஒரு ஆபத்திற்குள்ளாக‌ மாற்றப்பட்டிருந்தது, சீடர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியிருந்தது. இருந்தபோதும், நாம் மேலே பார்த்தபடி நேரடியாக தன்னுடைய சீடர்கள் பட்டயங்களை உபயோகிக்க வேண்டும் என்று நிச்சயமாக அவர் சொல்லவில்லை. ஏனெனில் பேதுருவிடம் பட்டயத்தை தன் ஸ்தானத்தில் வைக்கும்படி இயேசு சொல்கிறார்.

இரண்டாவதாக, அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவுபெறுங்காலம் வந்திருக்கிறது என்றார். (லூக்கா 22:37) இரண்டு பட்டயங்களுக்கான தெளிவான நோக்கம் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை (53:12) மேற்கோள்காட்டும் இயேசுவின் குறிப்பினால் விளங்குகிறது. அவர் ஒரு அக்கிரமக்காரனைப் போல் கைது செய்யபடவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தார், ஒரு அக்கிரமக்காரனைப் போலவே விசாரிக்கப்ட்டார், ஒரு அக்கிரமக்காரனைப் போலவே சிலுவையிலும் அறையப்பட்டார். ( ஆனால் அவரது கைது, விசாரணை, மரண தண்டன எல்லாம் பொய்ச் சாட்சிகளினிமித்தம் வழங்கப்பட்டது, அவர் நன்மையைத் தவிர‌ ஒன்றுமே செய்யவில்லை) இருந்தாலும் அவர் இரண்டு கள்ளர்களுக்கு நடுவே தொங்க வேண்டியாதயிற்று, அதுவும் ஏசாயா தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாகும் (லூக்கா 23:32, 39-43) அக்கிரமக்காரர்கள் தங்களோடு எதை சுமந்துசெல்வார்கள்? ஆயுதங்களை, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்படுவதற்கு இயேசுவும் ஆயுதங்களை வைத்திருப்பது அவசியமாயிருந்தது. எனவே தான் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற இயேசு, இரண்டு பட்டயங்கள் போதுமென்று சொன்னார்.

இன்னும் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுவது பற்றி மத்தேயு (26:54) கூறுகிறார். ஒருவேளை இயேசுவை கைது செய்வதைத் தடுக்க பேதுரு தொடர்ந்து பட்டயத்தை உபயோகப்படுத்திக் கொண்டேயிருந்தால், தீர்க்கதரிசனம் தடையில்லாமல் இலகுவாக நிறைவேற்றப்பட்டிருக்க முடியாது. தான் வேண்டிக் கொண்டால் பன்னிரண்டு லேகியோனுக்கும் (இராணுவ சேனைக்கும்) மேற்பட்டவர்களை தன்னுடைய பாதுகாப்பிற்காக பெறமுடியும் என்று இயேசு கூறுகிறார். ஆனால், தான் மரிக்க வேண்டிய பணியை நிறைவேற்றுவதற்காக பிதாவினால் நியமிக்கப்பட்டிருப்பதால், அதை நிறைவேற்றுவதிலிருந்து மகா ரோமப் படைகளை தடுத்து நிறுத்துவதற்கு இயேசு அனுமதிக்கவில்லை (மத்தேயு 26:53). எனவே தான் இயேசு பேதுருவிடம் பட்டயத்தை அதன் உறையிலே போடும் படிச் சொன்னார் (மத் 26:52). மேலும் லூக்கா சுவிசேஷத்தில் பேதுரு ஒருவனுடைய காதை வெட்டின பிறகு அவனிடம் சொல்லுகிறார், 'இம்மட்டும் நிறுத்துங்கள்" அல்லது “இனி ஒருபோதும் வேண்டாம்"! (22: 51) என்றுச் சொல்கிறார்.

மூன்றாவதும் இறுதியுமான விளக்கம் கூறுவதென்னவென்றால், இயேசு அடிக்கடி வெளிப்படையான பொருட்களைக் குறிப்பிட்டே (விதைகள், விளக்கு, திராட்சைத் தோட்டம், நாணயம், தொலைந்துபோன ஆடு இன்னும் பல உள்ளன), ஆன்மீக பாடங்களை, சத்தியங்களை கற்றுக் கொடுத்திருக்கிறார். அது தான் அந்த இரண்டு பட்டயங்களின் காரியத்திலும் உண்மையாக இருக்கமுடியும். இந்த அர்த்தத்திற்குரிய விளக்கத்திற்கு ஆதரவாக மத்தேயு 10:34 காணப்படுகிறது. "நான் பூமியின் மீது சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள் சமாதானத்தை அல்ல பட்டயத்தையே அனுப்பவந்தேன்" (10:34) . இந்த கட்டுரையில் படிப்பது போல‌ மத்தேயு 10: 34 ம் வசனத்தின் பின்னணியத்தை பார்க்கும் போது அவர் வெட்டிச் சாய்த்து குடும்பத்தை இரத்தக்களரியாக்கும் ஒரு நிஜமான பட்டயத்தை குறிப்படவில்லை. மாறாக ஒரு ஆவிக்குரிய பட்டயம், அது சரீரரீதியற்ற உள்ளான பிரிவினையை உண்டாக்கலாம். மேலும், ஒரே மாதிரிப் பகுதிகளான மத்தேயு 10:34 மற்றும் லூக்கா 12:51 ல் இயேசு குறிப்பிட்ட "பட்டயத்திற்கு" நேரடியான எழுத்தின் படியான (Literal) அர்த்தம் இல்லை என்பதை லூக்கா விளக்குகிறார். லூக்கா 12:51 இல் இதை லூக்கா செய்திருந்தாரானால், பிறகு ஏன் லூக்கா 22:36-38ல் "பட்டயம்" என்பதன் அர்த்தத்தை கொஞ்சம் மாற்றியிருக்கவில்லை?

ஆதி கிறிஸ்தவத்தின் வரலாறு (Early Christian History)

நேரடியாக பட்டயங்களை உபயோகிப்பது மேற்கண்ட வசனங்களின் உண்மைப்பொருள் அல்ல என்று சொன்னதால், இவ்வசனங்களில் பட்டயமே இருக்கவில்லை என்ற அர்த்தம் கிடையாது (லூக்கா 22:38). அவைகள் அடையாளக்குறிகளோ, காணப்படாத கற்பனைகளோ அல்ல. பேதுரு உண்மையாகவே இரண்டு பட்டயங்களில் ஒன்றை எடுத்து ஒரு வேலைக்காரனுடைய காது அறுபடும்படி வெட்டினான் (மத்தேயு 26:50-51; லூக்கா 22:49-51) .

இருந்தபோதும், பேதுரு பட்டயத்தை உபயோகப்படுத்தினது சபை உருவான பெந்தோகோஸ்தே நாளுக்கு முன்பாக ஆகும். பெந்தோகோஸ்தே நாள் அன்று பேதுரு முன் எப்போதும் நிகழ்ந்திராத விதத்தில் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார் (அப்போஸ்தலர் 2) . பேதுரு பரிசுத்த ஆயினால் நிரப்பப்படுவதற்கு முன் நடந்த‌ நிகழ்ச்சியாகும், அந்த பட்டயத்தை பயன்படுத்திய நிகழ்ச்சி. பெந்தேகோஸ்தே நாளுக்கு முன் இயேசு கைது செய்யப்பட்ட அந்த இராத்திரியில் அன‌ல்பர‌ந்த நேரத்தில் நடந்த பேதுரு காதை வெட்டிய அச்செயலின் மீது சபைக் கொள்கைகளை கட்டி எழுப்புவது தவறான வழிமுறையாகும். பேதுரு அந்த சூழலில் பட்டயத்தை பயன்படுத்தினார் என்பதற்காக, கிறிஸ்தவ சபையின் கொள்கைகள் அதன் மீது சார்ந்து உருவாக்குவது தவறானதாகும்.

இது மட்டுமல்ல, இயேசு தோட்டத்தில் பேதுருவிடம் கூறினார், “பட்டயத்தை அதன் இடத்திலே வை" என்றார். இத‌ன் அர்த்தம் – “பட்டயத்திற்குரிய உறையிலே அல்லது பேதுருவின் இடுப்பில் கட்டியிருக்கும் பெல்ட்டிலே அல்லது ஆயுதம்பொருத்தக்கூடிய வேறு உடையிலே வை” என்பதாகும். அவர் பட்டயத்தை எட்டாத அளவிற்கு தூரத் தூக்கிப்போடும்படிக் கூறவில்லை. எனவே சில சீடர்கள் அவருடைய சிலுவை மற்றும் மரணத்திற்கு பிறகும் எதிர்ப்பு நிறைந்திருந்த அந்த தேசப்பகுதியில் அந்த இரண்டு பட்டயங்களையும் தங்களோடு வைத்திருந்தார்கள் என அறியலாம். இன்னும் சிலர் அவருடைய உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதலுக்கும் பின்னும் தங்களோடு ஆயுதங்களை வைத்திருந்திருக்கலாம்.

இருந்தபோதிலும், நம்பத்தகுந்த பாரம்பரியங்கள், சரித்திரங்கள் அப்போஸ்தலர்களில் ஒருவராவது போரிடவும், கொடிய சோதனைகளிலிருந்து தப்பிப்பதற்கு தவறாக வழிநடத்தப்பட்ட, புரட்டப்பட்டிருந்த கலகக்கார இரத்தசாட்சிகளைப் போல பட்டயங்களை உபயோகிக்க முயற்சிக்கவும் இல்லை என்று கூறுகிறது. அதற்கு பதிலாக யோவானைத் தவிர எல்லா சீடர்களும் உபத்திரவத்தினாலே இரத்தசாட்சிகளாக கொல்லப்பட்டனர். (யோவான் முதிர் வயதிலே இயற்கையாக மரித்தார்). சீடர்களுடன் இயேசு வாழ்ந்த நாட்களிலும், கெத்சமனே தோட்டத்திலும் இயேசுவின் முன்னுதாரமான வாழ்க்கை அவர்களுக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியருந்தது.

முடிவுரை:

கெத்சமனே தோட்டத்தில் நடந்த சம்பவங்களும் அங்கே இயேசு தன்னுடய சீடர்களுக்கு கட்டளையிட்டவைகளும் அவர்களுக்கு அகிம்சையை அல்லது சாந்தத்தை கற்றுக்கொடுத்தது, எனவே லூக்கா 22:36 வன்முறையை அனுமதிப்பதில்லை. “அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்." (மத் 26:52). பேதுருவும் மற்றவர்களும் பட்டயத்தை உபயோகப்படுத்துவதினால் உண்டாகும் விளைவு பற்றி இயேசு சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டார்கள். எனவே, இயேசுவின் உயிர்த்தெழுத்த நம்பிக்கையின் செய்தியை பிரசங்கிக்கும் சீடர்களின் வாழ்க்கையில், "பட்டயங்கள்" ஒரு பகுதியாக இருக்கவே முடியாது.

புதிய ஏற்பாட்டில் "பட்டயம்" என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட தொடர் கட்டுரைகளை படிக்க இங்கு சொடுக்கவும்: Jesus, Pacifism, and the Sword. இப்போது நீங்கள் படித்த கட்டுரை இந்த தொடர் கட்டுரையின் இரண்டாம் பாகத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பாகமாகும்.

புதிய ஏற்பாட்டின் மத்தேயு 10:34ம் வசனத்தில் இயேசு பயன்படுத்திய "பட்டயம்" என்ற வார்த்தைக்கான சிறிய விளக்க கட்டுரைக்காக இங்கு சொடுக்கவும்.

ஆங்கில மூலம்: A Brief Explanation of the Sword in Luke 22:36

ஜேம்ஸ் அர்லண்ட்சன் அவர்களின் கட்டுரைகள்