சகோதரர் யஹ்யா அவர்களின் சாட்சி

Testimony of brother Yahya

நான் மலேசியாவில் ஒரு இஸ்லாமியனாகப் பிறந்து வளர்ந்தேன். என் தந்தை நான் இஸ்லாமிய முறையில் வளரவேண்டும் என்று கவனமாக இருந்தார். நான் சிறுவனாக இருந்ததிலிருந்து இஸ்லாமின் ஐந்து தூண்களை (அ) கடமைகளை (Pillars of Islam) பின்பற்ற நான் போதிக்கப்பட்டேன், ஷஹதத் – இஸ்லாமிய இறைநம்பிக்கையின் விசுவாச அறிக்கை, ஸலாத் - தினமும் ஐந்து முறை தொழுவதாகும் (நமாஜ்), ஜகாத் - தான தர்மங்கள் செய்வது, நோம்பு - ரமலான் மாதத்தில் நோம்பு இருத்தல், மற்றும் மெக்கா புனித பயணம் செய்வதாகும். அரபி மொழியில் குர்‍ஆனை ஓதுதலும் கற்றுக்கொண்டேன். ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளில் இஸ்லாமிய மாணவர்கள் இஸ்லாமிய கல்வி வகுப்பில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு சமயக் கல்வியை வழங்குவதில் மலேசிய அரசாங்கம் மிகச் சிறந்த பணியைச் செய்து வந்தது. மலேசிய முஸ்லிம்கள் தங்கள் சமயத்தைக் சுதந்திரமாக கடைபிடிக்க அரசாங்கம் வசதிகள் செய்துத் தருகிறது. என் பாலப்பருவம் மற்றும் இளம் பருவம் முதல் நான், இறைவனின் (அல்லாஹ்வின்) எல்லா கடமைகளை பின்பற்றியும், அவரது கட்டளைகளுக்கு கீழ்படிந்தும் இருந்தேன். ஆனாலும், என் ஆன்மாவில் ஒரு வெற்றிடம், வெறுமை இருந்தது.

என்னதான் நற்கிரியைகளைச் செய்தாலும், நான் அல்லாஹ்வை பிரியப்படுத்துகிறேனா என்று சந்தேகங் கொண்டேன். சோதனைகளும் தொல்லைகளும் என்னைச் சூழ்ந்த காலத்தில், அல்லாஹ்வினிடத்தில் கதறி அழுதாலும், அவர் தொலைவில் இருப்பது போலவும் நான் தனிமையாக இருப்பது போலவும் உணர்ந்தேன்.

அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு 1981ம் ஆண்டில் கல்லூரியில் பயில்வதற்காக நான் வந்தேன். நான் அமெரிக்கர்கள் கலாச்சாரத்தை அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டினேன். ஆனால் நான் சத்தியத்தை விட்டு இன்னும் தூரமாகச் சென்றுவிட்டேன். அதன் பிறகு என் உணர்ச்சி ஒரு நிலை கொள்ளவில்லை. என்னுடைய கிறிஸ்தவ தோழி (இப்போது அவள் என் மனைவி) தனது விசுவாசத்தை என்னோடு பகிர்ந்து கொண்டாள். அது தான் நான் சுவிசேஷத்தை முதல் முறையாக கேட்ட நாள். (எனது வளரும் பிராயத்தில் கிறிஸ்தவர்கள் விக்கிரக ஆராதனைக்காரர்கள் என்று போதிக்கப்பட்டது. மலேசிய முஸ்லிம்கள் சுவிஷேத்தைக் கேட்பதற்குத் தடைவிதிக்கப்பட்டது.) அவள் சொன்னாள்:

அ) நாம் பிறவிலிருந்து பாவிகளாக இருக்கிறோம். இஸ்லாமியனாகிய எனக்கு இதனை ஏற்றுக் கொள்வதற்கு முதலில் சிறமமாக இருந்தது. ஏனென்றால், நாம் பாவிகளாக பிறப்பதில்லை என்றும், பலவீனத்தின் காரணமாக தான் நாம் பாவம் செய்து வருகிறோம் என்றும் எங்களுக்குப் போதிக்கப்பட்டிருந்தது. எனவே, இஸ்லாத்தில் ஒருவன் இன்னொருவனைவிட பரிசுத்தமானவன் (Holier than Thou) என்றும் ஒருவரை ஒருவர் தற்பெருமையுடன் காணும் மனப்பான்மையும் உண்டு.

ஆ) ஈஸா அல்-மஸீஹ் நமது பாவங்களுக்காக மரித்தார், நாம் நம் பாவங்களை அவற்றை அறிக்கை செய்யும் பட்சத்திலும் அவரை நமது ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொள்ளும் போதும் நமது பாவம் மன்னிக்கப்படுகிறது. இறைவன் நமது பாவத்திற்காக மரிப்பாரா? இதையும் என்னால் நம்ப முடியவில்லை, என் புத்திக்கு எட்டாத தூரத்தில் இந்த விசுவாசம் அமைந்திருந்தது.

நான் பைபிளை வாசிக்கத் தொடங்கினேன். இயேசுவின் போதனைகள் எனக்கு மனரம்மியமாக‌ இருந்தன. அது அன்பாலும், பரிதாபத்தாலும், இறக்கத்தாலும், கிருபையாலும் நிறைந்திருந்தது. சுவிசேஷத்தின் முழு செய்தி மிகவும் தெளிவாக இருந்தது (நான் புதிய ஏற்பாட்டை மட்டுமே படித்தேன்). அந்த செய்தி என்னவென்றால், “தேவன் நம்மிடம் பேரன்பு கொண்டுள்ளார்” என்பதேயாகும். ஈஸா அல்- மஸீஹா (இயேசுக் கிறிஸ்து) தேவனுடைய குமாரன் என்றும், அவர் நமது பாவத்திற்காக உவ்வுலகத்தில் வந்து மரித்தார் என்றும் உணர்ந்து கொண்டேன்.

புதிதாக அறிந்து கொள்ளப்பட்ட நம்பிக்கைக்கும் இஸ்லாமிய நம்பிக்கைக்கும் இடையில் நான் சிக்கி தவித்தேன். இவைகளில் ஒன்று மட்டுமே உண்மையானதாக இருக்கமுடியும். எனவே, 1983ம் ஆண்டு முதல் உண்மையான ஆண்டவரைத் தேடத் தொடங்கினேன். இறைவனிடம், “நான் உம்மை மேலும் அதிகமாக அறிந்து கொள்ள வேண்டும், உம்மை என்னிடத்தில் வெளிப்படுத்தும்” என்று வேண்டிக்கொண்டேன். 1983ம் ஆண்டு முதல் 1985ம் ஆண்டுவரை நான் ஆண்டவரைத் தேடிக் கொண்டிருந்தேன். இறுதியாக அவருடைய கிருபையாலும் அன்பாலும் 1985ம் ஆண்டு நான் அவரை அறிந்து கொண்டேன். எப்போதாவது சில வேளைகளில் நான் ஆலயத்திற்குச் செல்வேன். ஓர் ஆராதனையில் குருவானவர் ஜெபத்தைப் பற்றிப் போதித்துக் கொண்டிருந்தார். நாம் அனைவரும் பிறவியிலேயே பாவிகளாய் இருக்கிறோம் என்றும் மேசியாவை நமது ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொண்டு பாவங்களில் இருந்து மனந்திரும்பினால், அவரோடு நித்திய காலத்திற்கும் ஜீவிக்கும் உறவை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்றும் சொன்னார். அவர் இவ்வாறு ஜெபிக்கவும் சொன்னார்:

"பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக,
உம்முடைய ராஜ்யம் வருவதாக,
உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல,
பூமியிலும் செய்யப்படுவதாக,
அன்றன்றுள்ள உணவை எங்களுக்கு இன்று தாரும்.
எங்களுக்கு விரோதமாக குற்றஞ் செய்கிறவர்களை நாங்கள் மன்னிக்கிறது போல,
எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும்,
எங்களை சோதனைக்குள் பிரவேசிக்கப் பண்ணாமல்
தீமையில் இருந்து இரட்சித்துக் கொள்ளும்."

திடீரென்று, எல்லாம் எனக்கு தெளிவாக புரிய ஆரம்பித்தது. உலகத்தைப் படைத்த ஆண்டவர் என்னையும் நேசிக்கிறார். என்னைப் பெயர் சொல்லி அறிந்திருக்கிறார். அரபி மொழியில் தான் ஜெபிக்க வேண்டும் என்று என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. எல்லா நேரத்திலும் எனது ஜெபத்தைக் கேட்கிறார். தேவன் என்னை நேசிப்பதால், மீட்பு (Salvation) எனக்கு வெகுமதியாக வழங்கப்பட்டிருக்கிறது.

அன்றிரவு என் பாவங்களுக்காக மனம் வருந்தி, ஈஸா அல்-மஸிஹாவை என் கர்த்தராகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொண்டேன். அதன் பிறகு என் உள்ளத்தில் சாந்தி நிலவியது. இன்றளவு, ஈஸா அல்-மஸிஹா என் வாழ்வை ஆள விட்டுக் கொடுத்ததற்காக நான் வருந்தவில்லை. எனக்குத் திருமணமாகி 3 பிள்ளைகள் இருக்கிறார்கள். பூஞ்சோலையைப் போல் வாழ்வு பசுமையாக இல்லாவிட்டாலும் அவரின் வாக்குத் தத்தம் உண்மையானது. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாங்குக்கு நான் அஞ்சேன். நீர் என்னோடு இருக்கிறீர் (சங்கீதம் 23:4). சோதனைகளிலும் துன்பங்களிலும் அவர் என்னோடு இருந்து பலப்படுத்துகிறார். தேவனின் அன்பு நிபந்தனையற்றது. ஏனென்றால், அவர் என்னை முதலில் நேசித்ததால், பதிலுக்கு முழு மனதோடும், இருதயத்தோடும், ஆத்துமாவோடும் நான் அவரை நேசிக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைகும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) எனது முஸ்லிம் நண்பர்களே,

நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கட்டும். இன்றிரவு நீங்கள் மரித்து விட்டால், சொர்க்கத்திற்கு தான் செல்வீர்கள் என்பதை உறுதியாக கூறமுடியுமா? பரலோகத்திற்குச் செல்வதற்கு உங்களுக்கு உத்திரவாதம் உள்ளதா? நான் இப்போது உங்களுக்குச் சொல்கிறேன். அவர் மீதும் அவர் உங்களுக்காக செய்த காரியம் மீதும் விசுவாசம் கொண்டால், உலகத்தை படைத்த ஆண்டவர் அந்த உத்திரவாதத்தை நமக்குத் தருகிறார்.

நண்பர்களே, அறிந்து கொள்ளுங்கள். பாவம் என்பது நம்முடைய செயல்களால் மட்டும் உருவாவதில்லை. பாவம் மனித தன்மையின் ஒரு பகுதியாகும். தேவன் நம்மைப் பிழையில்லாதவர்களாக பூரணமாக படைத்துள்ளார் என்றும் அவரின் படைப்புகளின் மத்தியில் நாம் வாசம் செய்ய விரும்புகிறார் என்றும் கூறியிருக்கிறார். ஆனாலும் முதல் மனிதர்களாகிய ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமையின் மூலம் அவருக்கு விரோதமாகச் சென்றார்கள். அவர்கள் தேவனுக்கு விரோதமாக பாவஞ் செய்தார்கள். பூரணம் நிறைந்த படைப்பு இப்போது மாசு படிந்துவிட்டது. ஆதாம் ஏவாளின் கீழ்ப்படியாமையின் மூலம் நாம் பாவிகளானோம். மனிதன் மற்றும் பாவத்தைப் பற்றி தேவன் என்ன சொல்லியிருக்கிறார்? நாம் அனைவரும் பாவஞ் செய்து தேவ மகிமையற்றவர்களானோம் என்று வேதாகமத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. பாவத்தின் சம்பளம் மரணம் (சரீரம், ஆன்மா) என்று மேலும் சொல்கிறது. தேவன் ஏன் பாவத்தை வெறுக்கிறார்? அவர் பூரணம் நிறைந்தவர் என்பதாலும், பாவம் அவரின் தன்மைக்கு விரோதமானது என்பதாலும் அவர் பாவத்தை வெறுக்கிறார். பாவத்தின் சம்பளம் மரணம் என்று தேவன் கூறியிருப்பதால், நாம் அனைவரும் பாதாளத்திற்குப் பாத்திரராய் இருக்கிறோம். நமக்கு சாதகமாக, பூரணம் நிறைந்த தேவன் கிருபையும் இறக்கமும் நிறைந்தவர். ஆரம்பம் முதல் அவர் நம்மை நேசிக்கிறார். அவருக்குக் கீழ்ப்படியாமல் போகும் நமக்காக அவர் துக்கப்படுகிறார். அவர் நமது எல்லா பாவங்களையும் முழுமையாக மன்னித்து விட்டார் என்பது நற்செய்தி ஆகும். அவர் எப்படி நமது பாவத்தை மன்னித்தார்? ஈஸா அல்-மஸீஹா பூவுலகத்திற்கு வந்து நமது எல்லா பாவங்களுக்காகவும் உயிர் துறந்தார். அவர் நமது பாவத்திற்கான கிரயத்தை செலுத்திவிட்டார். ஈஸா அல்-மஸீஹாவினிடத்தில் தான் தேவ மன்னிப்பு இருக்கிறது. நமது பாவங்களுக்காக மேசியா மரித்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். இப்பொழுதும் அவர் வாழ்கிறார். தேவனிடத்தில் இருந்து பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள நாம் ஒன்றும் செய்யத் தேவையில்லை. எல்லாவற்றையும் ஈஸா அல்-மஸீஹாவே செய்து தீர்த்து விட்டார். தேவனின் பாவ மன்னிப்பு என்னும் பரிசை பெற்றுக் கொள்ள வேண்டியது மட்டும் நமது கடமை. அதற்காக நாம்:

• தேவனிடத்தில் எல்லா பாவங்களையும் அறிக்கை செய்ய வேண்டும்.

• நமது பழைய வாழ்வுக்காக மனம் வருந்த (தௌபா) வேண்டும்.

• ஈஸா அல்-மஸீஹாவை நமது வாழ்வில் அழைத்து, அவரைக் கர்த்தராகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஈஸா அல்-மஸீஹா "நானே வழியும், ஜீவனும், சத்தியமுமாயிருக்கிறேன். என்னை அன்றி ஒருவனும் என் தந்தையிடம் (தேவன்) வரான்" என்று சொல்லியிருக்கிறார். மற்றும் “நான் வாசலண்டை நின்று கதவைத் தட்டுகிறேன். ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு தன் கதவைத் திறந்தால், நான் அவனோடு போஜனம் பண்ணுவேன். அவனும் என்னோடு போஜனம் பண்ணுவான்” என்று கூறியுள்ளார். மேசியாவாகிய இயேசுவே கடந்து சென்று தேவனுடைய ராஜ்யத்தை அடையும் பாலமாக இருக்கிறார்.

நண்பர்களே, இரட்சிப்பு என்பது விசுவாசத்தின் வழியாக வரும் தேவனுடைய வெகுமதியாகும். நம்முடைய நற்கிரியைகள் அவருக்கு முன்பு கந்தையான துணியாக இருக்கிறது என்று பைபிள் கூறுகிறது. தேவனுடைய பரிசை பெற்றுக்கொள்ளாமல், நாம் எவ்வளவு தான் செயல்களைச் செய்தாலும், பாவத்திற்காக தேவன் எதிர்பார்க்கும் தண்டனைக்கு நம் செயல்கள் ஈடாகமாட்டாது.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

இப்படிக்கு
யஹ்யா

மூலம்: Testimony of brother Yahya


இதர சாட்சிகளை தமிழில் படிக்க
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்